பிரவீன் ஜயவிக்ரமவின் அதிரடி பந்துவீச்சின் மூலம் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியிலும் இலங்கை இளையோர் அணி ஆப்கானிஸ்தானை 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
மலேஷியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் B குழுவில் ஆடும் இலங்கை அணி நேற்று நடந்த ஐக்கிய அரபு இராச்சியத்துடனான போட்டியில் இலகு வெற்றி ஒன்றை பெற்றது. இந்நிலையில் கோலாலம்பூர் பயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் இலங்கை அணி ஆப்கானிடம் குறைந்த ஓட்டங்களில் விக்கெட்டுகளை இழந்தபோதும் சிறப்பான பந்துவீச்சின் மூலம் போட்டியில் வெற்றிபெற முடிந்தது. போட்டி ஆரம்பிக்க முன் பெய்த மழையால் ஆட்டம் 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
மலேஷியாவில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை கனிஷ்ட அணி
மலேஷியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய இளைஞர் கிண்ண போட்டித்…
மழையால் தாமதித்த போட்டியில் ஆப்கான் அணிக்கு சாதகமாக நாணய சுழற்சி விழுந்தது. இதனால் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணிக்கு தனஞ்சய லக்ஷான் மற்றும் ஹசித போயகொட ஆரம்ப விக்கெட்டுக்கு அரைச்சத இணைப்பாட்டாம் ஒன்றை பகிர்ந்து கொண்டனர்.
எனினும் இருவரும் அவசரப்பட்டு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது. தனஞ்சய 25 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் போயகொட சிறப்பாக ஆடி அரைச்சதம் குவித்தார். 84 பந்துகளுக்கு எதிர்கொண்ட அவர் 3 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 53 ஓட்டங்களை குவித்தார். அது தொடக்கம் இலங்கை அணியின் இறங்குமுகம் ஆரம்பமானது.
அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு நான்காது வரிசையில் வந்த விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் கிரிஷான் ஆராச்சிகேவினால் 13 ஓட்டங்களையே பெற முடிந்தது.
ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த ஜெஹான் டேனியல் மத்தியவரிசையில் ஓட்டங்களை அதிகரிக்க முயன்றாலும் மறுமுனை விக்கெட்டுகள் இடைவிடாது வெளியேறின. 40 பந்துகளை முகம்கொடுத்த டேனியல் 36 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 42 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 196 ஓட்டங்களையே பெற்றது. இலங்கை அணி ஒரு சந்தர்ப்பத்தில் 106 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும் மேலும் 84 ஓட்டங்களை பெறுவதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் சார்பில் அணித்தலைவர் அமீனுல் ஹக் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாட களமிங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு புனித செபஸ்டியன் கல்லூரியைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம நெருக்கடி கொடுத்தார். அவர் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆப்கான் அணிக்கு மீளமுடியவில்லை.
இதனால் ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி 135 ஓட்டங்களுக்கு சுருண்டது. எனினும் அந்த அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் தார்வீஷ் ரசூலி மாத்திரம் 50 ஓட்டங்களை பெற்றார். ஆரம்ப வீரர் இம்ரான் சத்ரான் பெற்ற 27 ஓட்டங்களுமே ஆப்கான் அணியின் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாகும்.
இலங்கை இளையோர் அணிக்காக அபாரமாக பந்துவீசிய பிரவீன் ஜயவிக்ரம 6.5 ஓவர்களுக்கு 17 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். துடுப்பாட்டத்தில் முன்னர் இலங்கைக்காக இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்ற ஜெஹான் டேனியல் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இல்லை
இந்திய அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கு…
இந்த வெற்றியுடன் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி டீ குழுவில் இரண்டு போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. ஆப்கான் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது. இதன்மூலம் இலங்கை அணிக்கு ஆசிய இளையோர் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி அடுத்து நவம்பர் 13 ஆம் திகதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை இன்று நடைபெற்ற A குழுவுக்கான போட்டியில் நேபாள அணியை பங்களாதேஷின் கனிஷ்ட அணி 2 விக்கெட்டுகளால் வென்றார்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 196/8 (42) – ஹசித போயகொட 53, ஜெஹான் டேனியல் 36, தனஞ்சய லக்ஷான் 24, இப்ராஹிம் சத்ரான் 24/2, நவீன் உல் ஹக் 57/2
ஆப்கானிஸ்தான் – 135 (33.5) – தர்வீஷ் ரசூலி (50), இப்ராஹிம் சத்ரான் (27), பிரவீன் ஜயவிக்ரம 17/5, ஜெஹான் டேனியல் 20/2, கெவின் கொத்திகொட 29/1