இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாவது நாளான இன்று (09) நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன் ராஜ் புதிய போட்டி சாதனை படைத்தார்.
இப்போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்திருந்தார்.
சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் 3 போட்டி சாதனைகள்
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர்…
இந்நிலையில், இன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், 53.23 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார். முன்னதாக 2014ஆம் ஆண்டு சிலாபம் ஆனந்த கல்லூரியைச் சேர்ந்த ரவின் ருமேஷ்க, 46.28 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு மிதுன் ராஜ் முறிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் தட்டெறிதல் போட்டியில் முதற்தடவையாகக் களமிறங்கி 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், 2ஆவது தடவையாகவும் சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். முன்னதாக 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் அவர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இதேவேளை, நேற்று நடைபெற்ற குண்டு போடுதல் போட்டியில் மிதுன் ராஜுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற ரக்வானை ரத்னாலோக மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த நிமன்த எதுரங்க, தட்டெறிதல் போட்டியில் களமிறங்கி முன்னைய சாதனையை முறியடித்திருந்தார். அவர் குறித்த போட்டியில் 47.61 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில் குறித்த போட்டியில் மிதுன் ராஜுடன் போட்டியிட்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான பிரேம்குமார் மிதுஷான், 43.43 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். எனினும் கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் இதே போட்டியில் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக பாடசாலை மெய்வல்லுனர் அரங்கில் மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி மாணவர்களுக்கு 2013 முதல் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்ற ஹரிஹரன், தனது மாணவர்களின் வெற்றி குறித்து எமது இணையத்தளத்துக்கு கருத்து வெளியிடுகையில்,
”தற்போது நடைபெற்றுவருகின்ற ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் எமது பாடசாலையிலிருந்து 3 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் 5 பதக்கங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் நாம் களமிறங்கினோம். எனினும் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மிதுன் ராஜ் 2 பதக்கங்களையும், மிதுஷான் ஒரு பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர். 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட ரகுராஜா சன்ஜே, துரதிஷ்டவசமாக வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்.
சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் யாழ் ஹார்ட்லிக்கு முதல் பதக்கம்
இன்று நடைபெற்ற தட்டெறிதல் போட்டியில் மிதுன் ராஜ், புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெல்வார் எனவும், இவ்வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுகொள்வார் எனவும் நான் அதிகம் நம்பியிருந்தேன். அதேபோல அவர் அந்த அனைத்து இலக்கையும் வெற்றிகொண்டதுடன், அவருடன் களமிறங்கிய எமது பாடசாலையைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான மிதுஷானும் வெண்கலப் பதக்கத்தை வென்று எனக்கும், எமது பாடசாலைக்கும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தனர். உண்மையில் எமது பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.அத்துடன், மிதுன் ராஜின் இந்த சாதனை, இலங்கையில் உள்ள 16 வயதுக்குட்பட்ட தேசிய மட்ட வீரரொருவரின் சாதனையையும் முறியடித்திருக்கலாம்.” என அவர் தெரிவித்தார்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள, சிரேஷ்ட ஜோன் டார்பட், தேசிய கனிஷ்ட மற்றும் அகில இலங்கை பாடசாலை என 3 தேசிய மட்டப் போட்டிகளில் தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் பங்குபற்றி குறைந்த பட்சம் 9 பதக்கங்களை வெல்வார் என பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும், எதிர்வரும் காலங்களில் ஈட்டி எறிதல் போட்டியில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரில் 14 வயதுக்குட்பட்ட தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக போட்டியிட்ட ஆனந்தன் புதிய போட்டி சாதனை நிகழ்த்தியதுடன், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் மற்றும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். அத்துடன், அவ்வருடம் நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் சிறந்த வீரராகவும் தெரிவாகியிருந்த ஆனந்தன், கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரின் ஒலிம்பிக் தீபத்தையும் ஏற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அவருடைய அப்பாவுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை காரணமாக இவ்வருடம் நடைபெற்ற எந்தவொரு தேசிய மட்டப் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.
இதேவேளை, அண்மையில் நிறைவுக்கு வந்த 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மிதுன் ராஜ், கலந்துகொள்ளவுள்ள ஈட்டி எறிதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது.