டயலொக் ரக்பி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த கடற்படை, CR & FC

190

டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் தனது முதலாவது போட்டியில் விமானப்படை அணியை சந்தித்த CR & FC அணியானது, 21-9 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது. போட்டியின் முதல் பாதி முடிவில் விமானப்படை அணியானது 6-3 என முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

ரத்மலானை விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மழையின் குறுக்கீடு அதிகமாக காணப்பட்டது. இதனால் இரு அணியினரும் போட்டியின் போது பல தவறுகள் செய்ததற்கு மோசமான காலநிலை காரணமாக அமைந்தது,

போட்டியின் ஆரம்பத்தில் விமானப்படை அணியானது பல இலகு வாய்ப்புகளை தவறவிட்டது. குறிப்பாக விமானப்படை அணியின் சரித் செனவிரத்ன, தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி கம்பத்தின் நடுவே பந்தை உதைத்து 3 புள்ளிகள் பெற முயற்சி செய்தாலும், பந்து கம்பத்தில் மோதி திரும்பியதால் புள்ளிகள் பெறும் வாய்ப்பை இழந்தார். எனினும் தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 3 புள்ளிகளை அணியின் சார்பாக செனவிரத்ன பெற்றுக்கொடுத்தார். (விமானப்படை 03 – 00 CR & FC)

தொடர்ந்து CR & FC அணியானது தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 3 புள்ளிகளை பெற்று, புள்ளிகள் கணக்கை சமநிலை செய்தது. CR & FC சார்பாக தரிந்த ரத்வத்த வெற்றிகராமாக பந்தை கம்பத்தின் நடுவே உதைந்தார். (விமானப்படை 03 – 03 CR & FC)

CR & FC அணியின் தலைவரான கவிந்து பெரேரா, எதிரணி வீரர் தரையில் இல்லாத பொது அவரை தடுத்ததற்காக நடுவரினால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு 10 நிமிடத்திற்கு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து விமானப்படை அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தாலும், அதனை பயன்படுத்திக்கொள்ள விமானப்படை அணி தவறியது. CR & FC அணியின் குஷான் இந்துனில் அபாயகரமாக எதிரணி வீரரை தடுத்தமைக்காக மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, செனவிரத்ன மீண்டும் ஒரு முறை விமானப்படை அணிக்கு 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (விமானப்படை 06 – 03 CR & FC)

முதல் பாதி: விமானப்படை விளையாட்டுக் கழகம் 06 – 03 CR & FC

இரண்டாம் பாதியில் CR & FC அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தனது முன் வரிசை வீரர்களை அதிகமாக உபயோகித்த CR & FC அணியானது, ரோலிங் மோல் மூலமாக பந்தை முன் நகர்த்தியது. கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் ட்ரை கோட்டை நெருங்கிய CR & FC அணியானது, 3 கட்டங்களின் பின்னர் போட்டியின் முதலாவது ட்ரையை வைத்தது. CR & FC அணியின் முன் வரிசை வீரரான சரண சமிகார முதல் ட்ரையை வைத்தார். எனினும் ரத்வத்த கொன்வெர்சனை தவறவிட்டார். (விமானப்படை 06 – 08 CR & FC)

கண்டி மற்றும் ஹெவலொக் அணிகளுக்கு வெற்றிகரமான ஆரம்பம்

விமானப்படை அணிக்கு தொடர்ந்து பெனால்டி வாய்ப்பொன்று கிடைக்க, செனவிரத்ன மூலமாக சிறப்பாக உதைத்து போட்டியில் மீண்டும் ஒரு முறை விமானப்படை அணியானது முன்னிலை பெற்றது. எனினும் விமானப்படை அணி மேற்கொண்ட தவறின் காரணமாக CR & FC அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. இம்முறை ரத்வத்த உதையை தவறவிடவில்லை. (விமானப்படை 09 – 11 CR & FC)

தொடர்ந்து CR & FC அணியே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. விமானப்படையின் 5 மீட்டர் எல்லையினுள், விமானப்படை அணியானது CR & FC அணியின் ரோலிங் மோலை 3 முறை தவறாக கலைத்ததினால், நடுவர் நடுவர் ஜமால்தீன் CR & FC அணிக்கு பெனால்டி ட்ரை வழங்கினார். (விமானப்படை 09 – 18 CR & FC)

இறுதியாக ரத்வத்த இன்னுமொரு பெனால்டியின் மூலமாக 3 புள்ளிகளை CR & FC அணிக்கு பெற்றுக்கொடுக்க, CR & FC அணி 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முழு நேரம்: விமானப்படை 09 (3P) – CR & FC 21 (2T, 2P,1C)

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – சரண சமிகார (CR & FC)

புள்ளிகள் பெற்றோர்

விமானப்படை விளையாட்டுக் கழகம்

சரித் செனவிரத்ன – 3 பெனால்டி

CR & FC

சரண சமிகா – 2 ட்ரை
தரிந்த ரத்வத்த – 3 பெனால்டி

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

வெலிசரை கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கடற்படை அணியானது டயலொக் றக்பி லீக் போட்டிகளில், தமது முதல் போட்டியில் இராணுவ அணியை 20-14 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது 

இரண்டு அணிகளும் இப்போட்டியில் சமமாக தமது திறமையை வெளிக்காட்டின. கடற்படை அணி தமது அனுபவமிக்க சில வீரர்களை இப்போட்டியில் தவறவிட்ட அதேவேளை, இராணுவ அணியின் மூத்த வீரர்களும் இப்போட்டியில் விளையாடவில்லை.

தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட கடற்படை அணியானது போட்டியின் முதலாவது புள்ளியை திலின வீரசிங்க மூலமாக பெற்றுக்கொண்டது. பெனால்டி உதையின் மூலம் திலின கடற்படை அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து கடற்படை அணியின் அதிஷ வீரதுங்க, தமது தலைவர் துலாஞ்சன விஜேசிங்கவின் உதவியுடன் முதல் ட்ரை வைத்தார். மீண்டும் ஒரு முறை வீரசிங்க சிறப்பாக உதைத்து கொன்வெர்சனை பூர்த்தி செய்தார். (கடற்படை 10 – 00 இராணுவப்படை)

டயலொக் ரக்பி லீக்கில் மீண்டும் TMO தொழில்நுட்பம்

தொடர்ந்து கடற்படை அணியின் ஹுகர் நிலை வீரர் பந்தை எடுத்து சென்று ட்ரை கோட்டை கடந்தார். இம்முறை வீரசிங்க கொன்வெர்சனை தவறவிட்டார். கடற்படை அணியின் அதிரடி விளையாட்டினால் இராணுவ அணி சற்று பின்தள்ளியே காணப்பட்டது. (கடற்படை 15 – 00 இராணுவப்படை)

இராணுவ அணியினால் கடற்படை அணியின் 22 மீட்டர் எல்லையினுள் 3 முறை செல்லக்கூடியதாக இருந்தாலும், புள்ளிகள் ஏதும் பெறாமல் வெறும் கையுடனேயே இராணுவ அணி திரும்பி வந்தது.

இராணுவ அணியின் கயான் சாலிந்த, தமது அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பொன்றை உடனடியாக எடுத்து, எதிரணி வீரர்களை கடந்து சென்று அசோக ஜயலாலிற்கு பந்தை பரிமாறினார். பலம் மிக்க அசோக ட்ரை கோட்டை கடந்து இராணுவ அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். சாலிந்த கொன்வெர்சனை தவறவிடவில்லை 

முதல் பாதி: கடற்படை 15 – 07 இராணுவப்படை

இரண்டாம் பாதியில் கடற்படை அணி ஆதிக்கம் செலுத்திய பொழுதும், சுபுன் தில்ஷான் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். எனினும் இதனை பயன்படுத்தி இராணுவ அணியினால் எந்த ஒரு புள்ளியையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

கடற்படை அணியின் தலைவர் துலாஞ்சன விஜேசிங்க, தனது வழமையான திறமையை வெளிக்காட்டி, எதிரணி வீரர்களை தனது வேகத்தின் மூலம் கடந்து சென்று, ஜனித் லக்சரவிற்கு பந்தை பரிமாற்றம் செய்ததின் மூலம் லக்சர தனது முதலாவது போட்டியிலேயே ட்ரை வைத்தார். வீரசிங்க இலகுவான கொன்வெர்சனை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. (கடற்படை 20 – 07 இராணுவப்படை)

கடற்படை அணியின் லக்சர மற்றும் சுபுன் பீரிஸ் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட, கடற்படை அணியானது மேலும் அழுத்தத்திற்கு உள்ளானது. வெறும் 13 வீரர்களைக் கொண்டு கடற்படை அணி விளையாடியதை பயன்படுத்திக்கொண்ட இராணுவ அணியானது சுகத் நாணயக்கார மூலமாக இரண்டாவது ட்ரையை வைத்தது. (கடற்படை 20 – 14 இராணுவப்படை)

எனினும் இராணுவ அணியினால் மேலதிகமாக எந்த ஒரு புள்ளிகளையும் பெற முடியாமையினால்,கடற்படை அணி வெற்றியை தமதாக்கியது.

முழு நேரம்: கடற்படை 20 (3T, 1C,1P) – இராணுவப்படை 14 (2T, 2C)

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – துலாஞ்சன விஜேசிங்க (கடற்படை)

புள்ளிகள் பெற்றோர்

கடற்படை விளையாட்டுக் கழகம்
அதிஷ வீரதுங்க – 1 ட்ரை
திலின வீரசிங்க – 1 ட்ரை, 1 பெனால்டி
துலாஞ்சன விஜேசிங்க – 1 ட்ரை
ஜனித் லக்சர – 1 ட்ரை

இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
அசோக ஜயலால் – 1 ட்ரை
கயான் சாலிந்த – 2 கொன்வெர்சன்
சுகத் நாணயக்கார – 1 ட்ரை