பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிளைக் கொண்ட டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி, ஐந்து போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் முழுமையான தோல்வியைத் தழுவியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகள் அபுதாபியில் நடத்துவதற்கும், மூன்றாவதும் கடைசியுமான போட்டியை பாகிஸ்தானின் லாஹூர் கடாபி மைதானத்தில் நடத்துவதற்கும் இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் முடிவு செய்தன.
எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஆரம்பத்தில் அபுதாபியில் நடைபெறவிருந்த 2 டி20 போட்டிகளுக்கு ஒரு அணியையும், லாஹூரில் நடைபெறவுள்ள இறுதி டி20 போட்டிக்கு ஒரு அணியையும் தெரிவு செய்யும்படி கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தினால் தெரிவுக் குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து, இலங்கை அணியின் முன்னனி வீரர்களான லசித் மாலிங்க, உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, அகில தனஞ்சய, சாமர கபுகெதர, மிலிந்த சிறிவர்தன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன, அசான் பிரியன்ஜன், சதீர சமரவிக்ரம உள்ளிட்ட வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனால் சற்றும் அசராத இலங்கைத் தேர்வுக்குழு திஸர பெரேராவை தலைவராக்கி இளம் அணியொன்றை டி20 தொடரில் களமிறக்கியது.
எனவே எந்தவொரு முன்னனி துடுப்பாட்ட வீரர்களோ, பந்துவீச்சாளர்களோ இல்லாமல் களமிறங்கிய இலங்கை அணி, 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் முதலிரு போட்டிகளை இழந்து தொடரையும் பறிகொடுத்த நிலையில், 3 ஆவதும் இறுதியுமான டி20 போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு இன்று அதிகாலை லாஹூரின் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை அணி மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொண்ட காரணத்தினால் பாகிஸ்தானில் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் நடைபெறவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பூரண ஒத்துழைப்புடன் டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களைக் கொண்ட உலக அணி கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடியிருந்தது. இத்தொடர் வெற்றிகரமாக இடம்பெற்றதையடுத்து, இலங்கை அணியும் அங்கு சென்று விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது.
த்ரில்லர் வெற்றியுடன் T-20 தொடரினையும் கைப்பற்றிய பாகிஸ்தான்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T-20 தொடரின்…
இலங்கை அணி கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி மட்டும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற உலகின் முன்னனி கிரிக்கெட் அணியொன்று விஜயம் செய்து விளையாடவுள்ளமை அந்நாட்டில் மீண்டும் சர்வதேசப் போட்டிகள் இடம்பெறுவதற்கான வரலாற்று சிறப்புமிக்க தருணமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லாஹூர் போட்டியில் விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு
பாகிஸ்தான் செல்லவுள்ள, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு, அரச தலைவருக்கு வழங்கப்படுகின்ற அதி உயர் பாதுகாப்பை வழங்குவதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும், அந்த நாட்டு அரசும் உத்தரவாதமளித்துள்ளதாகவும், இதன் காரணமாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் லாஹுரில் நடைபெறவுள்ள இறுதி டி20 போட்டித் தொடரில் கலந்து கொள்ளவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவித்தார்.
லாஹூரில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை எமக்கு அறிவித்துள்ளது. அத்துடன், பாதுகாப்பு நிலைவரம் மற்றும் அதற்குரிய ஏற்பாடுகள் குறித்து பொலிஸ்மா அதிபரிடமும் நான் அறிக்கையொன்றைக் கோரியுள்ளேன். அது தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு பாகிஸ்தான் சென்றுள்ளார்.
எனவே, பாகிஸ்தானில் பாதுகாப்பு தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபை எமக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அரச தலைவர்களுக்கு கொடுக்கப்படும் பிரபுக்களுக்கான பாதுகாப்பு, இலங்கை வீரர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. பாகிஸ்தான், நாடு என்ற வகையில் எமக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதையும் நாம் நினைவுபடுத்த வேண்டும். இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது, அவர்கள் எமக்கு ஆதரவு வழங்கியிராவிட்டால், யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்திருக்க முடியாது.
அதேபோல், இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது, இங்கு வரவேண்டாம் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்த வேளையில், பாகிஸ்தான் அணியினர் நம் நாட்டில் விளையாடினார்கள். பாகிஸ்தானுக்கு நாம் சிறந்த வீரர்களையே அனுப்புகிறோம் என்றார்.
15 வயதுக்குட்பட்ட மாகாண கிரிக்கெட் சம்பியனாக மேல்மாகாண மத்திய பிராந்தியம்
கொழும்பு SSC மைதானத்தில் இன்று (28) நடைபெற்று முடிந்திருக்கும் 15 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான…
இதன்படி இன்றைய போட்டியை பார்வையிடுவதற்காக அந்நாட்டு கிரிக்கெட் சபையின் விசேட அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹாரிஸ் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள், பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர, கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான டி20 போட்டி இன்று லாஹூரில் நடைபெறவுள்ளது. திஸர பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணிக்கு லாஹூர் எங்கும் வரவேற்பு பதாதைகள், சிங்கள மொழியில் வரவேற்பு வாசகங்கள் தொங்கடவிடப்பட்டு கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று அதிகாலை 2.25 மணி அளவில் இலங்கை அணி லாஹூரை வந்தடைந்ததுடன், அதற்கு முன்னதாக 1.50 மணியளவில் பாகிஸ்தான் அணி லாஹூரை வந்தடைந்தது. இதனைடுத்து குண்டு துளைக்காத விசேட பஸ் மூலம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு இலங்கை வீரர்களின் பாதுகாப்புக்காக சுமார் 10 ஆயிரம் பாதுகாப்பு படையினரை கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளதுடன், விசேட போக்குவரத்துக்காக 2000 இற்கும் அதிகமான போக்குவரத்து பொலிஸாரையும் கண்கானிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், மைதானத்தைச் சுற்றி பார்வையாளர்களை அவதானிப்பதற்காக 100 இற்கும் அதிகமான CCTV கெமராக்களை பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கும், மைதானத்துக்கும் இடையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், போட்டி முடிந்தவுடன் இலங்கை அணி விமான நிலையம் நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது வெறுமனே கிரிக்கெட் போட்டியல்ல. இது பாகிஸ்தானின் கௌரவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான சிறந்த தருணமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இலங்கையிலிருந்து வருகை தந்த கண்காணிப்பு அதிகாரிகள் தமது திருப்தியினை வெளியிட்டுள்ளதாகவும் லாஹூரின் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஹைதர் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மைதானத்தைச் சுற்றி நாலாபுறங்களிலும் சோதனைச் சாவடிகள் போடப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்களுக்காக விசேட போக்குவரத்துச் சேவைகளை மைதானத்திலிருந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்றைய தினம் லாஹூர் மைதானத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள சுப்பர் மார்க்கட், கடைகள், பொது இடங்கள் போன்றவற்றுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளும்படி லாஹூர் பொலிஸாரால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15 வயதுக்குட்பட்ட மாகாண கிரிக்கெட் சம்பியனாக மேல்மாகாண மத்திய பிராந்தியம்
கொழும்பு SSC மைதானத்தில் இன்று (28) நடைபெற்று முடிந்திருக்கும் 15 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான…
போருக்குச் சென்ற மகன்களை சந்தோஷமாக வீட்டுக்கு வரவேற்பதற்கு காத்திருக்கின்ற உணர்வுதான் தற்போது பாகிஸ்தான் மக்களுக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், பயங்கரவாதத்தை விட விளையாட்டு பலம் மிக்கது என்பதை நிச்சயம் இன்று நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போட்டி சான்று பகரவுள்ளது.
அத்துடன், இலங்கை அணியுடனான இப்போட்டியை வெற்றிகரமாக நடாத்தி தங்கள் நாட்டில் இனி தீவிரவாதம் இல்லை என்பதை நிரூபிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முனைப்புடன் செயற்பட்டு வருவதுடன், அடுத்த மாதம் நடுப்பகுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேரத்துக்கு முன் போட்டிகள் ஆரம்பம்
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவுள்ள இறுதி டி20 போட்டி ஒரு மணி நேரத்துக்கு முன் ஆரம்பிக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
முன்னதாக போட்டிகள் 7 மணிக்கு ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டு இருந்தாலும், தற்போது லாஹூர் நகரில் நிலவி வருகின்ற மழை காரணமாக போட்டிகளை இவ்வாறு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக (6 மணிக்கு) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போட்டியை பார்வையிட வருகின்ற பார்வையாளர்கள் இன்று மாலை 3 மணி முதல் மைதானங்களுக்கு வரும்படி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்காக ஆரம்ப நிகழ்வொன்றை மாலை 4.45 மணிக்கு நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
வரலாறு படைக்குமா இலங்கை?
பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள கடாபி மைதானம் என்பது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத இடமாக அமைந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு இம்மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரபல அவுஸ்திரேலிய அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி முதற்தடவையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.
எனினும், அதனையடுத்து இலங்கை அணி பல்வேறு சந்தர்ப்பங்களில் அங்கு சென்று விளையாடினாலும் 2009 ஆம் ஆண்டு இலங்கை அணியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலையடுத்து எந்தவொரு சர்வதேச அணிகளும் அங்கு சென்று விளையாடவில்லை.
இந்நிலையில், சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்று முதற்தடவையாக விளையாடவுள்ள இலங்கை அணி, ஒரேயொரு டி20 போட்டியில் இன்றைய தினம் களமிறங்கவுள்ளது.
ஆனால் அன்று இருந்த இலங்கை அணியைக் காட்டிலும், தற்போதுள்ள அணி மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இதன்படி தமது தொடர்ச்சியான 15 தோல்விக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை அணி, பாகிஸ்தான் மண்ணில் விளையாடவுள்ள இறுதிப் போட்டியிலாவது முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.