இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட FIFA உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை 5-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து இளைஞர் அணி முதல் முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றது.
கொல்கத்தா, செல்ட் லேக் அரங்கில் நேற்று இரவு (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் அரைமணி நேரத்திற்குள் ஸ்பெயின் அணி இரண்டு கோல்களைப் போட்டு முன்னிலை பெற்றது. எனினும் இங்கிலாந்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான பிலிப் போடன் (Philip Foden) இரட்டை கோல் புகுத்தியதோடு ரியான் ப்ரூஸ்டர் தொடரில் எட்டாவது கோலைப் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக இங்கிலாந்தின் தேசிய அணி சோபிக்கத் தவறியபோதும் இந்த ஆண்டில் அந்நாட்டின் வயது எல்லை அணிகள் அபாரமாக ஆடி வருகின்றன. தென் கொரியாவில் கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களில் நடந்த 20 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து, 19 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய சம்பியன் பட்டத்தையும் வென்றதோடு 21 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய கிண்ணத்தில் அரையிறுதி வரை முன்னேறியது.
அதேபோன்று குரோஷியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோற்றதற்கு பழிதீர்ப்பதாகவும் இங்கிலாந்தின் இந்த வெற்றி அமைந்திருந்தது.
போட்டியின் ஆரம்பத்திலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ப்ரூஸ்டர் மற்றும் கிப்ஸ் வைட் இணைந்து வெறும் 47 ஆவது செக்கனில் இங்கிலாந்துக்கு கோல் பெறும் முயற்சி ஒன்று வீணானது.
இளைஞர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகள்
எனினும் ஸ்பெயின் வீரர் செர்ஜியோ கோமஸிற்கு (Sergio Gomez) சக வீரர் கோனர் திசையிலிருந்து உதைத்த பந்து எதிரணியின் கோல் எல்லைக்கு மிக நெருக்கமான தூரத்தில் கிடைத்தபோது அதனை அவர் பின்பக்கமாக இருந்து கோலுக்குள் தட்டிவிட்டார். இதன்மூலம் ஸ்பெயின் அணியால் போட்டியின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற முடிந்தது.
அத்தோடு நிற்காத ஸ்பெயின் அணி 31 ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலைப் போட்டு இங்கிலாந்து இளைஞர்களை திக்குமுக்காடச் செய்தது. சக வீரர்கள் லாவகமாக பரிமாறிய பந்தை பெற்ற செர்ஜியோ கோமஸ் அதனை கோலாக மாற்றினார்.
ஆரம்பத்தில் இங்கிலாந்து அணியின் கோல் முயற்சிகள் வீணானபோதும் இம்முறை அந்த அணி அவ்வாறான ஒரு வாய்ப்பை நழுவவிடவில்லை. போட்டியின் முதல் பாதி முடிவடைய ஒரு நிமிடம் இருக்கும் போது ஸ்பெயின் கோல் எல்லையை ஆக்கிரமித்த இங்கிலாந்து வீரர்கள் பந்தை கோலாக மாற்ற கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது புல்ஹாம் கழக வீரர் செசெக்னொன் (Sessegnon) பரிமாறிய பந்தை பெற்ற லிவர்பூல் வீரர் ரியான் ப்ரூஸ்டர் தலையால் முட்டி கோலாக மாற்ற இங்கிலாந்து தனது முதல் கோலைப் பதிவு செய்தது.
ப்ரூஸ்டர் அதிகபட்சமாக இந்த தொடரில் பெறும் 8ஆவது கோல் இதுவாகும். இதன்மூலம் அவர் தங்க பாதணியை வெல்வது உறுதியானது.
முதல் பாதி: இங்கிலாந்து 1 – 2 ஸ்பெயின்
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியே அதிகம் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் இடைவேளைக்கு பின் ஆரம்பமானது தொடக்கம் இங்கிலாந்து வீரர்களின் கால்களிலேயே பெரும்பாலான நேரம் பந்து இருந்தது.
மீண்டும் சிறப்பாக செயற்பட்ட செசெக்னொன், சகவீரர் மோர்கன் கிப்ஸ் வைட்டிடம் உதைக்க அவர் பெரிதாக நெருக்கடி இன்றி அதனை கோலாக மாற்றினார். இதன்மூலம் 58 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது கோலைப் பெற்று போட்டியை சமநிலை செய்தது.
புத்தளம் மாவட்ட சம்பியனாக கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை
பத்து நிமிடங்கள் கழித்து தொலை தூரத்தில் இருந்து எதிரணி கோலை நோக்கி ஹட்சன் ஒடோய் பந்தை எடுத்து வந்து அதனை பிலிப் போடனிடம் வழங்க அவர் கோலுக்குள் தட்டிவிட்டார். போட்டியின் 69 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்பெயினின் சில முயற்சிகள் இங்கிலாந்து பின்கள வீரர்களால் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் 84 ஆவது நிமிடத்தில் மார்க் கூகி (Guehi) இங்கிலாந்து அணிக்காக நான்காவது கோலை அடிக்க அந்த அணி 4-2 என வலுவான முன்னிலை பெற்றது. செல்சி இளம் வீரர் கூகி இங்கிலாந்து இளைஞர் அணிக்காக கோல் போட்டது இது முதல்முறையாக இருந்தது.
இதேவேளை போட்டி முடிவுக்கான விசில் ஊதப்பட மேலும் சில நிமிடங்களே இருக்கும்போது மீண்டும் செயற்பட்ட போடன் முந்திக்கொண்டு பந்தை கோலை நோக்கி எடுத்து வந்து கோல் காப்பாளரை முறியடித்து இங்கிலாந்துக்காக ஐந்தாவது கோலை புகுத்தியபோது அந்த அணியின் வெற்றி நிச்சயமானது.
இதன்மூலம் 17 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து கைப்பற்றிபோதும், ஸ்பெயின் அணி நான்கு தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிவரை முன்னேறி நான்காவது முறையாகவும் தோல்வியை சந்தித்தது.
இதேவேளை இறுதிப் போட்டிக்கு முன்னதாக இதே கொல்கத்தா அரங்கில் நடந்த மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரேஸில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் மாலியை வென்றது.
முழு நேரம்: இங்கிலாந்து 5 – 2 ஸ்பெயின்
கோல் பெற்றவர்கள்
இங்கிலாந்து – ப்ரூஸ்டர் 44’, கிப்ஸ் வைட் 58’, போடன் 69’ & 88’, கூகி 84’
ஸ்பெயின் – செர்ஜியோ கோமஸ் 10’ & 31’