புத்தளம் மாவட்ட சம்பியனாக கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை

325
un 14 Samaposha Championship puttalam District

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் “சமபோஷ” அனுசரணையில் இடம் பெற்ற 14 வயதிற்கு உட்பட்ட புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டிகள் அனைத்தும் முழுமையாக 40 நிமிடங்களாக இரு நாட்கள் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இச்சுற்றுப் போட்டியில் 11 பாடசாலை அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டிகள் அனைத்தும் விலகல் (Knock Out) முறையிலே நடைபெற அனைத்திலும் வெற்றி கொண்ட அணிகளான புத்தளம் ஸாஹிரா கல்லூரி மற்றும் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை என்பன இறுதிச் சமரில் பங்குகொண்டது. இதில் 1-0 என்ற கோல் அடிப்படையில் பலம் மிக்க ஸாஹிராவை வீழ்த்தி 14 வயதிற்கு உட்பட்ட புத்தள மாவட்ட சம்பியனானது அல்-அக்ஸா தேசிய பாடசாலை.

முதலாவது அரையிறுதிப் போட்டி – புத்தளம் ஸாஹிரா கல்லூரி எதிர் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம்

போட்டி ஆரம்பித்ததில் இருந்தே இரு அணி வீரர்களும் பந்தை எதிரணியின் பக்கத்திற்கு அனுப்புவதிலேயே கவனம் செலுத்தினர்.

ஆட்டத்தின் 5ஆவது நிமிடத்தில் பராஜ் கொடுத்த பந்தை அத்தீப் பெற்று கம்பம் நோக்கி அடிக்க பந்து கம்பத்திற்கு அருகால் செல்ல ஸாஹிராவின் முயற்சி வீணானது.

எருக்கலம்பிட்டி அணியினர் தம் தடுப்பு வீரர்களை அதிகரித்து ஸாஹிராவின் கோல் முயற்சிக்கு தடையை ஏற்படுத்த பந்து முழுமையாக ஸாஹிராவின் கால்களிலே இருந்தது.

முதல் பாதியில் இரு அணி வீரர்களின் கோல் முயற்சியும்ம் பலனளிக்காமல் செல்ல முதல்பாதி 0—0 என்ற வகையில் முடிந்தது.

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 0 – 0 எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம்

அடுத்த பாதி ஆட்டம் தீர்மானமிக்கதாக அமைய ஆட்டம் ஆரம்பித்து 2ஆவது நிமிடத்தில் ரிஸ்கான் கொடுத்த பந்தைப் பெற்ற ஸரீக் தடுப்பு வீரர்களைக் கடந்து கம்பத்திற்குள் பந்தை உள்ளனுப்பினார். இதன் மூலம் ஸாஹிரா கல்லூரி 1-0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

எவரெடி கிண்ணம் ஒலிம்பிக் அணி வசம்

ஸாஹிரா கல்லூரியின் பல கோல் முயற்சிகளை எருக்கலம்பிட்டி தடுப்பு வீரர்கள் முறியடிக்கப்பட்டது. இறுதியில் பலம் மிக்க ஸாஹிரா கல்லூரி 1 – 0 என்ற கோல் அடிப்படையில் எருக்கலம்பிட்டி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 1 – 0 எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம்


இரண்டாவது அரையிறுதிப் போட்டி – கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை எதிர் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம்

ஆட்டம் ஆரம்பித்தது முதல் அல்-அக்ஸாவின் ஆதிக்கம் மேலோங்கி காணப்பட்டது. ஆட்டத்தின் 8ஆவது நிமிடத்தில் உமைர் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை பெற்ற ரிஜ்வான் நேராக கம்பத்திற்குள் அனுப்ப, அல்-அக்ஸா அணி தனது கோல் கணக்கை ஆரம்பித்தது.

அல்-அக்ஸா அணி வீரர்கள் முழுமையாக எதிரணியின் எல்லையை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

மேலும் 7 நிமிடங்கள் கழிந்த நிலையில் மைதானத்தின் நடுப் பகுதியில் கிடைத்த பந்தை உமைர் தடுப்பு வீரர்களைக் கடந்து சென்று கம்பம் நோக்கி அடிக்க பந்து எந்தத் தடையுமின்றி கோல் கம்பத்தினுள் சென்றது. இதன் மூலம் அல்-அக்ஸா அணியின் கோல் கணக்கு இரட்டிப்பாகியது.

முதல் பாதி: அல்-அக்ஸா தேசிய பாடசாலை 2 – 0 நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம்

இரண்டாம் பாதியில் அல்-அக்ஸா அணி வீரர்கள் போட்டியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

31ஆவது நிமிடத்தில் முஹம்மட் கொடுத்த பந்தைப் பெற்ற ரிஜ்வான் வேகமாக செயற்பட்டு தடுப்பு வீரர்களைக் கடந்து சென்று இலகுவான கோலைப் பதிவு செய்து தன் கோல் கணக்கை இரட்டிப்பாக்கி, அல்-அக்ஸா அணியின் கோல் அணியின் கணக்கை 3 ஆக உயர்த்தினார்.

இறுதியில் போட்டி நிறைவு பெற்றதாக நடுவர் அறிவிக்க 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று, அல்-அக்ஸா தேசிய பாடசாலை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

முழு நேரம்: அல்-அக்ஸா தேசிய பாடசாலை 3 – 0 நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம்


இறுதிப் போட்டி – கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை எதிர் புத்தளம் ஸாஹிரா கல்லூரி

பலம் மிக்க இரு அணியினரும் ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்து ஆக்ரோஷமாக ஆடினர். பந்து இரு அணி வீரர்களின் கால்களிலும் சமமாகக் காணப்பட்டது.

ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் முஹம்மட் மூலமாக பெறப்பட்ட கோலை நடுவர் ஓப் சைட் என அறிவிக்க சிறந்த முயற்சி வீணானது.

இளைஞர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகள்

மேலும் 11ஆவது நிமிடத்தில் ஸாஹிரா கல்லூரி வீரர் அத்தீப் கொடுத்த பந்தை ரிஸ்கான் பெற்று கம்பத்திற்கு அருகில் சென்று அடிக்க பந்து அல்-அக்ஸாவின் தடுப்பு வீரரின் காலில் பட்டு வெளியேறியது.

இரண்டு நிமிடங்கள் கழிக்க உமைர் கொடுத்த பந்தை ரிஜ்வான் பெற்று பெனால்டி பகுதிக்கு அருகில் வைத்து கம்பம் நோக்கி உதைய பந்து கோல் காப்பாளர் மிக்தாமின் கையில் பட்டவாரே உள் நுழைய, அல் அக்ஸா அணி 1 – 0 கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

முதல் பாதியின் இறுதி முயற்சியாக பராஜ் கொடுத்த பந்தை ரிமாஸ் கோல் காப்பாளர் நுஹ்மானின் கைகளுக்கே அடிக்க இறுதி முயற்சியும் வீணாகிப்போனது.

முதல் பாதி: அல்-அக்ஸா தேசிய பாடசாலை 1 – 0 ஸாஹிரா கல்லூரி

இரண்டாம் பாதியில் அல்-அக்ஸா தன் தடுப்பு வீரர்களை அதிகரித்து முன்கள வீரர்களைக் குறைத்திருந்தது. 26ஆவது நிமிடத்தில் ஸாஹிராவிற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அத்தீப் அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.

31ஆவது நிமிடத்தில் அரைப் பகுதியில் கிடைத்த பந்தை ரிஜ்வான் நான்கு தடுப்பு வீரர்களையும் கடந்து கம்பம் நோக்கி அடிக்க பந்து மிக்தாமின் காலில் பட்டு வெளியேற, அல் அக்ஸாவின் கோல் பெறும் முயற்சி பயனளிக்கவில்லை.

38ஆவது நிமிடத்தில் பராஜ் கொடுத்த இலகுவான கோலுக்குரிய பந்துப் பரிமாற்றத்தை பெற்ற ரிமாஸ் கம்பத்திற்கு வெளியே அடிக்க, கிடைக்கப்பெற்ற இலகுவான வாய்ப்பும் வீணானது.

அல்-அக்ஸா அணி வீரர்கள் பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்து ஆட ஸாஹிரா கல்லூரி வீரர்களால் கோல் அடிக்க முடியாமல் போக, இறுதியில் பலம் மிக்க ஸாஹிரா கல்லூரியை 1 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 14 வயதிற்கு உட்பட்ட புத்தள மாவட்ட சம்பியனாக கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை முடிசூடிக்கொண்டது.

முழு நேரம்: அல்-அக்ஸா தேசிய பாடசாலை 1 – 0 ஸாஹிரா கல்லூரி

கோல் பெற்றவர்கள்

அல்-அக்ஸா தேசிய பாடசாலை – ரிஜ்வான் 13’

போட்டித் தோடரின் சிறந்த வீரர்

ரிஜ்வான் – அல்-அக்ஸா தேசிய பாடசாலை

சிறந்த கோல் காப்பாளர்

மிக்தாம் – ஸாஹிரா கல்லூரி