மழையால் கைவிடப்பட்ட இலங்கை, மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டம்

130
(AP Photo/Ricardo Mazalan)

இலங்கை A மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

ஜமைக்காவின், கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் அந்நாட்டு நேரப்படி நேற்று (26) பகலிரவு டெஸ்ட் போட்டியாக நான்கு நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. இதன்படி உள்ளுர் நேரப்படி பகல் 2 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையில் பிற்பகலில் அங்கு கடும் மழை பெய்ய ஆரம்பித்தது.

இந்நிலையில் ஆட்டத்தின் நாணய சுழற்சி கூட போடப்படாமல் போட்டியில் தாமதம் ஏற்பட்டது. மழையுடன் கடும் காற்றும் வீசியதால் ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டிருந்தது.

தொடர்ந்து மழை பெய்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பு இல்லாமல்போனது. மூன்று மணி நேரம் கழித்து முதல் நாள் ஆட்டத்தை கைவிட நடுவர்கள் தீர்மானித்தனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை A அணி அங்கு மேற்கிந்திய தீவுகள் A அணியுடன் மூன்று உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது.

மலிக், ஹசன் அலியின் சிறப்பாட்டத்தினால் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்திருக்கும்…

இரு அணிகளுக்கும் இடையிலான முதலிரு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியை வென்றிருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடரை தீர்மானிப்பதாக உள்ளது.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சோபிக்க தவறியபோதும் இரண்டாவது டெஸ்ட்டில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என்று அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி 280 ஓட்டங்களால் வென்றது. இந்நிலையில் அதிக நம்பிக்கையுடனேயே அந்த அணி இந்த டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

எனினும் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று இரவு ஆரம்பமாகவுள்ளது.