எனது நீண்ட நாள் கனவு நனவாகியது – திசர பெரேரா

1540
Thisara Perera
திசர பெரேரா

தேசிய அணிக்கு தலைவராவது தனது நீண்ட நாள் கனவு எனவும், இலங்கை டி T20 அணியின் தலைவராக தான் நியமிக்கப்பட்டது தொடர்பில் பெருமையடைவதாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்து வீரர்களுக்கும் தலைமைப் பதவி என்பது ஒரு கனவாகும். அதே போன்று இதுவும் எனது நீண்ட நாள் கனவு என இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் இறுதிப் போட்டி 29ஆம் திகதி பாகிஸ்தான் லாஹூரில் இடம்பெறவுள்ளது.

எனினும், ஆரம்பத்தில் அபுதாபியில் நடைபெறவிருந்த 2 டி20 போட்டிகளுக்கு ஒரு அணியையும், லாஹூரில் நடைபெறவுள்ள இறுதி டி20 போட்டிக்கு ஒரு அணியையும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தெரிவு செய்யும்படி வீரர்கள் சங்கத்தினால் இலங்கை தெரிவுக் குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணியின் முன்னனி வீரர்களான லசித் மாலிங்க, உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, அகில தனஞ்சய, சாமர கபுகெதர, மிலிந்த சிறிவர்தன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் பாகிஸ்தான் செல்ல மறுப்புத் தெரிவித்தனர். எனினும், இலங்கை ஒரு நாள் அணியில் தற்போது இடம்பெற்று விளையாடி வருகின்ற திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன, அஷான் பிரியன்ஜன், சதீர சமரவிக்ரம, ஜெப்ரி வண்டர்சேய், விஷ்வ பெர்ணாந்து உள்ளிட்ட வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இலங்கை அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட்..

இந்நிலையில், இலங்கை அணியில் உள்ள அனுபவமிக்க மூத்த வீரரான திசர பெரேரா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட டி20 குழாம் கடந்த சில தினங்களுக்கு முன் லெப்ரோய் தலைமையிலான தெரிவுக் குழுவினரால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் படி இலங்கை டி20 அணியின் 9ஆவது தலைவராக திசர பெரேரா செயற்படவுள்ளார். வத்தளை புனித அந்தோனியர் கல்லூரியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு காலடி எடுத்து வைத்த திசர, அதன்பிறகு மருதானை புனித ஜோசப் கல்லூரியில் இணைந்து கொண்டு தேசிய அணிக்காக தெரிவானார். பெண்டா என்று அழைக்கப்படுகின்ற திசர, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஓவர் ஒன்றுக்கு அதிக ஓட்டங்களைக் குவித்த உலகின் 2ஆவது வீரராகவும் விளங்குகிறார். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற டி20 தொடர்களில் விளையாடி வருகின்ற அனுபவமிக்க வீரராகவும் திசர பெரேரா இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், முதற்தடவையாக தனக்கு தலைமைப் பதவி கிடைத்தது தொடர்பில் திசர பெரேரா கருத்து வெளியிடுகையில்,

”இலங்கை டி20 அணியின் தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பில் பெருமையடைகிறேன். அனைத்து வீரர்களுக்கும் தலைமைப் பதவி என்பது ஒரு கனவாகும். அந்த நீண்ட நாள் கனவு தற்போது எனக்கு நனவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள வீரர்கள் தொடர்பில் தாம் திருப்தியடைவதாகவும், அறிவிக்கப்பட்டுள்ள டி20 குழாமில் அதிரடி ஆட்டக்காரர்கள் இருப்பதால் வீரர்களின் திறமை தொடர்பிலும் தான் மகிழ்ச்சியடைவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தொடரில் மாற்றம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும், அணியுடன் இணைந்து அதிகபட்ச பங்களிப்பை நாட்டுக்காக வழங்குவதாகவும் திசர பெரேரா தெரிவித்தார்.

எந்தவொரு வெற்றியும் இன்றி மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பும் இலங்கை மகளிர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம்…

இந்நிலையில், லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து திசர பெரேரா கருத்து தெரிவிக்கையில், ”அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்த நான் 100 சதவீதம் திருப்தியுடன் உள்ளேன். நான் கடந்த மாதம் அங்கு சென்று 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடியிருந்ததாகவும், வீரர்களின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் உலக பதினொருவர் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பாகிஸ்தானில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை சார்பாக திசர பெரேரா விளையாடியிருந்தார். அதற்காக திசரவுக்கு ஒன்றரை கோடி ரூபா பணத்தை வழங்கவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதேவேளை, 1996 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கையில் நடைபெற்றபோது இந்நாட்டில் நிலவிய தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் இலங்கை வருவதற்கு மறுப்பு தெரிவித்தனர். எனினும், இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என்பதை நிரூபிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்வந்ததுடன், அப்போதைய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் அனா புஞ்சி ஹேவாவின் அழைப்பின் பேரில் இந்து – பாகிஸ்தான் ஒன்றிணைந்த அணியொன்று இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.