மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை A அணி 280 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் பிரகாசித்ததோடு சுழல் பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார இரண்டு இன்னிங்சுகளிலும் மொத்தமாக 98 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஜமைக்காவின் டிரலவ்னி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (19) ஆரம்பமான நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டி மூன்று தினங்களிலேயே முடிவுற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சுக்காக 294 ஓட்டங்களை குவித்தது. மத்திய வரிசையில் வந்த தசுன் ஷானக்க 8 சிக்ஸர்களை விளாசி சதம் பெற்றார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் A அணி மலிந்த புஷ்பகுமாரவின் சுழலுக்கு முகங்கொடுக்க முடியாமல் 137 ஓட்டங்களுக்கே சுருண்டது. புஷ்பகுமார 52 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வலதுகை சுழல் பந்து வீச்சாளர் ஷெஹான் ஜயசூரிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 157 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று (21) இலங்கை அணி 213 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
இலங்கை மகளிர் அணிக்கெதிரான டி20 தொடரும் மேற்கிந்திய தீவுகள் வசம்
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும்…
ரொஷேன் சில்வா 85 ஓட்டங்களுடன் சதத்தை நெருங்கி இருந்தார். எனினும் மூன்றாவது நாளில் அவரால் மேலும் ஒரு ஓட்டத்தையே பெற முடிந்தது. அவர் ரஹ்கீன் கோர்ன்வோலின் பந்துக்கு LBW முறையில் ஆட்டமிழந்தார். அவர் 159 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 86 ஓட்டங்களை பெற்றார்.
முதல் இன்னிங்சில் சதம் பெற்ற தசுன் ஷானக்க இரண்டாவது இன்னிங்சில் அரைச்சதம் ஒன்றை குவித்தார்.
எவ்வாறாயினும் 7 ஓட்டங்களுடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த வனிந்து ஹசரங்க இலங்கை அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரித்தார். ஒரு முனையில் கடைசி வரிசை விக்கெட்டுகள் பறிபோகும்போதும் மறுமுனையில் இருந்து சிறப்பாக ஆடிய அவர் 62 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றார்.
ஒன்பதாவது வீரராக வந்த மலிந்த புஷ்பகுமார 10 ஓட்டங்களையே பெற்றதோடு அடுத்து வந்த அசித பெர்னாண்டோ ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 67.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பில் 25.5 ஓவர்கள் பந்துவீசிய கோர்ன்வோல் 107 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி இலங்கை A அணி மேற்கிந்திய தீவுகளுக்கு 425 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தின் பகல் போசன இடைவேளைக்கு முன்னரே வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் A அணி 3 ஓட்டங்களிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்ததோடு, அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.
குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் ஆரம்ப ஓவர்களை வீச அழைக்கப்பட்ட மலிந்த புஷ்பகுமார மேற்கிந்திய தீவுகளின் அரம்ப விக்கெட்டுகளை தகர்த்தார். தொடர்ச்சியாக அவர் மூன்று விக்கெட்டுகளை சாய்க்க மேற்கிந்திய தீவுகள் A அணி 39 ஓட்டங்களுக்கே முதல் நான்கு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தேர்வுக் குழு….
இதன்போது மறுமுனையில் ஆடி வந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொன்ட்சின் ஹொட்ஜின் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித வீழ்த்தினார். குறிப்பாக இரண்டு மணி நேரம் ஆடுகளத்தில் இருந்து 87 பந்துகளுக்கு முகங்கொடுத்த ஹொட்ஜ் பெற்ற 14 ஓட்டங்களுமே மேற்கிந்திய தீவுகளின் முதல் ஐந்து துடுப்பாட்ட வீரர்களால் பெறப்பட்ட ஒரே ஒரு இரட்டை இலக்க ஓட்டங்களாகும்.
இந்நிலையில் மத்திய வரிசையில் துடுப்பாட வந்த சுனில் அம்ப்ரிஸ் ஒரு முனையில் நின்றுபிடித்து ஆட முயன்றாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிவதை அவரால் தடுக்க முடியவில்லை. புஷ்பகுமார மேற்கிந்திய தீவுகளின் 6 மற்றும் 7ஆவது விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தியபோது அந்த அணி வெறுமனே 80 ஓட்டங்களையே பெற்றிருந்தது.
பின்னர் துடுப்பாட வந்த ஷெல்டன் கொட்ரேல் 25 பந்துகளுக்கு 17 ஓட்டங்களை பெற்றிருந்தபோது புஷ்பகுமாரவின் பந்துக்கு சிக்கிக்கொண்டார். நிதானமாக ஆடிய அம்ப்ரிஸின் விக்கெட்டை ஷெஹான் ஜயசூரிய வீழ்த்தினார். 76 பந்துகளுக்கு முகங்கொடுத்த அம்ப்ரிஸ் 4 பவுண்டரிகளுடன் பெற்ற 41 ஓட்டங்களே மேற்கிந்திய தீவுகள் A அணியின் அதிகபட்ச ஓட்டங்களாகும்.
இறுதியில் மேற்கிந்திய தீவுகள் A அணி 54 ஓவர்களில் 144 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அபாரமாக பந்துவீசிய மலிந்த புஷ்பகுமார 21 ஓவர்களுக்கு 46 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷெஹான் ஜயசூரிய 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி, தொடரை தீர்மானிக்கும் போட்டியாகவும் அமையவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 294 (73.3) – தசுன் சானக்க 102*, தனஞ்சய டி சில்வா 73, சரித் அசலங்க 41, ரொஷேன் சில்வா 30, ரஹ்கீன் கோர்ன்வோல் 85/2 டேமியன் ஜேகொப்ஸ் 74/2
மேற்கிந்திய தீவுகள் A அணி (முதல் இன்னிங்ஸ்) – 137 (44.3) – ரஹ்கீன் கோர்ன்வோல் 46, சுனில் அம்ப்ரிஸ் 29, மலிந்த புஷ்பகுமார 52/6, ஷெஹான் ஜயசூரிய 8/2
இலங்கை A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 267/9d (67.5) – ரொஷேன் சில்வா 86, தசுன் ஷானக்க 60, வனிந்து ஹசரங்க 50*, ரஹ்கீன் கோர்ன்வோல் 107/5
மேற்கிந்திய தீவுகள் A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 144 (54) – சுனில் அம்ப்ரிஸ் 41, மலிந்த புஷ்பகுமார 46/6, ஷெஹான் ஜயசூரிய 48/2, தனஞ்சய டி சில்வா 7/1
முடிவு: இலங்கை A அணி 280 ஓட்டங்களால் வெற்றி