தசுன், புஷ்பகுமார ஆகியோரின் உதவியுடன் இலங்கை A அணிக்கு வெற்றி வாய்ப்பு 

541

மலிந்த புஷ்பகுமாரவின் சுழலால் மேற்கிந்திய தீவுகள் A அணியை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை A அணி இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி வாய்ப்பை நெருங்கியுள்ளது.

நான்கு நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முடியும்போது தனது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிவரும் இலங்கை A அணி 370 என்ற இமாலய ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

ஜமைக்காவின் டிரலவ்னி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (19) ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சுக்காக 294 ஓட்டங்களை குவித்தது. மத்திய வரிசையில் துடுப்பாடிய வந்த தசுன் ஷானக்க 8 சிக்ஸர்களை விளாசி சதம் பெற்றார்.

இந்நிலையில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இரண்டாவது நாளான நேற்று தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் A அணிக்கு சுழல்பந்து வீச்சாளர்களான மலிந்த புஷ்பகுமார மற்றும் ஷெஹான் ஜயசூரிய நெருக்கடி கொடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறுவதற்கே தடுமாறிய நிலையில் அந்த அணி 27 ஓட்டங்களுக்கு முதல் ஐந்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

30 வயதான புஷ்பகுமார நைட் வொட்ச்மனாக (Night watchman) வந்த டேமியன் ஜேகொப்ஸை 4 ஓட்டங்களுடன் வெளியேற்றியதோடு, முதலாவது டெஸ்டில் சிறப்பாக ஆடிய விஷோல் சிங்கை ஓட்டமேதும் இன்றி வெளியேற்றினார்.

சரித்திரத்தில் மற்றுமொரு மோசமான நிலையில் இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியை, 7 விக்கெட்டுகளால் இலங்கை…

முன் வரிசை துடுப்பாட்ட வீரர்களில் இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்ற ஒரே வீரரான அணித்தலைவர் ஷமர் ப்ரூக்ஸ் அடித்த பந்தை மூன்றாவது ஸ்லிப் திசையில் இருந்த சரித் அசலங்க பிடியெடுத்தார். 30 பந்துகளுக்கு முகங்கெடுத்த அவர் 11 ஓட்டங்களையே பெற்றார். இரண்டாவது டெஸ்டுக்கு அழைக்கப்பட்ட வேகப்பந்த வீச்சாளர் சரித் அசலங்க அந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்நிலையில் 6ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஜஹ்மர் ஹமில்டன் மற்றும் சுனில் அம்ப்ரிஸ் 28 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்று மேற்கிந்திய தீவுகளின் விக்கெட்டுகள் சரிவதை தற்காலிகமாக தவிர்த்துக் கொண்டனர். எனினும் 8 ஓட்டங்களுடன் இருந்த ஹமில்டனை தனது நான்காவது விக்கெட்டாக புஷ்பகுமார போல்ட் செய்தார். இதனால் அந்த அணி 55 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அந்த விக்கெட்டைத் தொடர்ந்து மிக விரைவிலேயே அசித் பெர்னாண்டோ, அம்ப்ரிஸை 29 ஓட்டங்களுக்கு வெளியேற்ற மேற்கிந்திய தீவுகள் 69 ஓட்டங்களில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஹ்கீல் கோர்ன்வோல் மற்றும் ஷெல்டன் கொட்ரேல் 65 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் A அணி 100 ஓட்டங்களைத் தாண்டியது. கோர்வோல் 45 பந்துகளில் பெற்ற 46 ஓட்டங்களே அந்த அணிக்காக பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும். எனினும் புஷ்பகுமார அவரை போல்ட் செய்து வெளியேற்றினார்.

புஷ்பகுமார தனது அடுத்த பந்திலேயே கெயோன் ஜோசப்பை ஓட்டமேதுமின்றி ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், தனது 20 ஓவர்களுக்கும் 52 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் அடுத்த ஓவரிலேயே ஷெஹான் ஜயசூரிய ஒஷான் தோமஸை வீழ்த்தியதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 44.3 ஓவர்களில் 137 ஓட்;டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை சார்பில் மலிந்த புஷ்பகுமார தவிர ஷெஹான் ஜயசூரிய 2 விக்கெட்டுகளையும் அசித பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தினர்.

மேற்கிந்திய தீவுகள் அணி பலோ ஓன் (Follow on) செய்வதை தவிர்க்க மேலும் 8 ஓட்டங்கள் பின்தங்கி இருக்கும் நிலையிலேயே தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. எனினும் இலங்கை A அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா எதிரணியை பலோ ஓன்னுக்கு அழைக்காமல் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பிக்க தீர்மானித்தார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரின் மனதை நெகிழவைக்கும் செயல்

தசுன் ஷானக்க பெற்ற அதிரடி சதத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் …

இதன்படி முதல் இன்னிங்ஸில் 157 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற இலங்கை வலுவான நிலையிலேயே நேற்று பகல் போசன இடைவேளைக்கு பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

எனினும் இலங்கை அணி 86 ஓட்டங்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து சற்று தடுமாற்றம் கண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதுன் வீரக்கொடி இரண்டு ஓட்டங்களையே பெற்றதோடு மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரொன் சந்திரகுப்தாவினால் 14 ஓட்டங்களையே பெற முடிந்தது. பின்னர் வந்த அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் சரித் அசலங்க தலா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். ஷெஹான் ஜயசூரிய விக்கெட்டை காத்துக்கொண்டு ஆடியபோதும் 32 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

எனினும் 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரொஷேன் சில்வா மற்றும் முதல் இன்னிங்ஸில் சதமடித்த தசுன் சானக்க இருவரும் இலங்கை அணி இமாலய இலக்கொன்றை நிர்ணயிக்க வழி செய்தனர். இருவரும் 106 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற இலங்கை அணியின் ஓட்டங்கள் 192 ஆக உயர்ந்தது.

சிறப்பாக அடி வந்த தசுன் சானக்க 85 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 60 ஓட்டங்களை பெற்று அட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் ஆடும் ரொஷேன் சில்வா 145 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 85 ஓட்டங்களை பெற்று ஆட்ட நேரம் முடியும் வரை களத்தில் இருந்தார். அவரோடு மறுமுனையில் வினின்து ஹசரங்க 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் கோர்ன்வோல் 19 ஓவர்களுக்கு 70 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை A அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 54 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்மூலம் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் எஞ்சி இருக்க இரண்டாவது இன்னிங்ஸில் 370 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

ஆட்டத்தில் மேலும் இரண்டு நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் இலங்கை A அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.

இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 294 (73.3) – தசுன் சானக்க 102*, தனஞ்சய டி சில்வா 73, சரித் அசலங்க 41, ரொஷேன் சில்வா 30, ரஹ்கீன் கோர்ன்வோல் 85/2 டேமியன் ஜேகொப்ஸ் 74/2

மேற்கிந்திய தீவுகள் A அணி (முதல் இன்னிங்ஸ்) – 137 (44.3) – ரஹ்கீன் கோர்ன்வோல் 46, சுனில் அம்ப்ரிஸ் 29, மலிந்த புஷ்பகுமார 52/6, ஷெஹான் ஜயசூரிய 8/2

இலங்கை A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 213/6 (54) – ரொஷேன் சில்வா 85*, தசுன் ஷானக்க 60, ரஹ்கீன் கோர்ன்வோல் 70/3