சரித்திரத்தில் மற்றுமொரு மோசமான நிலையில் இலங்கை

890

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியை, 7 விக்கெட்டுகளால் இலங்கை அணியை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளதுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் 4-0 என முன்னிலை அடைந்துள்ளது.  

அதிக ஒரு நாள் போட்டிகள் விளையாடப்பட்ட மைதானமாக கிண்ணஸ் சாதனையை பதிவு செய்திருக்கும் சார்ஜாஹ் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இலங்கை அணியில் இன்றைய போட்டியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சாமர கப்புகெதர, ஜெப்ரி வன்டர்சேய், துஷ்மந்த சமீர ஆகியோருக்குப் பதிலாக அறிமுக வீரர் சதீர சமரவிக்ரம, சீக்குகே பிரசன்ன, சுரங்க லக்மால் ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

சர்பராஸ் அஹ்மட் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. ருமான் ரயீஸ், பாஹிம் அஷ்ரப் ஆகியோருக்குப் பதிலாக இமாத் வஸீம் மற்றும் அறிமுக வீரராக உஸ்மான் கான் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இலங்கை தமது துடுப்பாட்டத்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் அணித் தலைவர் உபுல் தரங்க ஆகியோருடன் தொடங்கியது.

இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்காக அறிமுகமாகிய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான உஸ்மான் கான் ஒரு நாள் போட்டிகளில் தான் வீசிய முதல் ஓவரில் விக்கெட்டைக் கைப்பற்றி இலங்கைக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தார். இலங்கையின் முதல் விக்கெட்டாக உஸ்மானினால் போல்ட் செய்யப்பட்ட அணித் தலைவர் உபுல் தரங்க ஓட்டமேதுமின்றி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

எனினும் மறுமுனையில் அதிரடியாக துடுப்பாடிய நிரோஷன் திக்வெல்ல அணியின் ஓட்ட எண்ணிக்கையை விரைவாக உயர்த்தினார். எனினும் ஜூனைத் கானின் சிறந்த பந்து வீச்சினால் அது நீடிக்கவில்லை. இதனால் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக 16 பந்துகளில் 22 ஓட்டங்களைக் குவித்த திக்வெல்ல ஓய்வறை திரும்ப வேண்டி ஏற்பட்டது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரின் மனதை நெகிழவைக்கும் செயல்

தசுன் ஷானக்க பெற்ற அதிரடி சதத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள்…

தொடர்ந்து லஹிரு திரிமான்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இணைந்து ஒரு நல்ல இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளமிட முனைந்தனர். எனினும் அது தினேஷ் சந்திமாலின் ரன் அவுட் காரணமாக சரியாக அமையவில்லை. சந்திமால் 16 ஓட்டங்களுடன் இந்தப் போட்டியிலும் ஏமாற்றமான இன்னிங்சை வெளிக்காட்டியிருந்தார்.

சந்திமாலின் விக்கெட்டை அடுத்து இன்றைய போட்டியில் இலங்கை அணிக்காக அறிமுகமாகிய சதீர சமரவிக்ரமவும் ஓட்டமேதுமின்றி போல்ட் செய்யப்பட்டார். இவரின் விக்கெட்டை அடுத்து மிலிந்த சிறிவர்தன சிறிது நேரம் களத்தில் நின்ற லஹிரு திரிமான்ன உடன் இணைந்து போராடியிருந்தார். எனினும் மைதானத்தில் சிறிவர்தனவினால் நீண்ட நேரம் (13) நீடிக்க முடியாமல் போனது.

சிறிவர்தனவின் விக்கெட்டை அடுத்து மேலும் இரண்டு விக்கெட்டுகளை துரிதகதியில் பறிகொடுத்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் 99 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையை அடைந்தது.

இத்தருணத்தில் களம் நுழைந்த அகில தனஞ்சய லஹிரு திரிமான்ன ஆகியோர் சேர்ந்து 8ஆவது விக்கெட்டுக்காக 43 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர். இந்த இணைப்பாட்டத்துடனும் பின்வரிசையில் துடுப்பாட வந்த சுரங்க லக்மாலின் 23 ஓட்டங்களின் துணையுடனும் 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இலங்கை அணி 173 ஓட்டங்களைக் குவித்து இத்தொடரில் அதி குறைவான ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு திரிமான்ன அதிகபட்சமாக தனது 20ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 4 பவுண்டரிகள் அடங்கலாக 94 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹசன் அலி 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சதாப் கான் மற்றும் இமாத் வஸீம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை மகளிர் அணியுடனான முதல் T-20 போட்டியும் மேற்கிந்தியத் தீவுகள் வசம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர்…

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 174 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி தமது முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மூவரை குறைந்த ஓட்டங்களுக்கு இழந்து சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிக்காட்டிய போதிலும், நான்காம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சொஹைப் மலிக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் மதிநுட்பமான முறையில் ஆடி 119 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு பாகிஸ்தான் வெற்றி இலக்கை 39 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்தது.

இறுதிவரை களத்தில் ஆட்டமிழக்காது நின்ற பாபர் அசாம் மற்றும் சொஹைப் மலிக் ஆகியோர் தலா 69 ஓட்டங்கள் வீதம் பெற்று பாகிஸ்தானுக்கு ஒரு நாள் போட்டிகளில் 8ஆவது தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்ய உதவியிருந்தனர்.

தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டிகளில் 11ஆவது தோல்வியை சந்தித்த இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு கமகே, அகில தனஞ்சய மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் திங்கட்கிழமை (23) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 173 (43.4)லஹிரு திரிமான்ன 62(94), சுரங்க லக்மால் 23*(30), நிரோஷன் திக்வெல்ல 22(16), ஹசன் அலி 37/3(8.4), இமாத் வஸீம் 13/2(7), சதாப் கான் 29/2(8)

பாகிஸ்தான் – 177/3 (39)சொஹைப் மலிக் 69*(81), பாபர் அசாம் 69*(101), அகில தனஞ்ச 29/1(8)

முடிவு பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளால் வெற்றி