அண்மையில் நிறைவுக்கு வந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியைச் சேர்ந்த எம்.என் ரஹீப் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று அக்கல்லூரிக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தார்.
உயரம் பாய்தலில் புத்தளம் மாணவன் அப்ரிட்டுக்கு வெள்ளிப் பதக்கம்
தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற…
இலங்கையின் பாடசாலை விளையாட்டுத்துறை வரலாற்றில் 30 வருடகால வரலாற்றைக் கொண்ட, கால்பந்து, ரக்பி உள்ளிட்ட விளையாட்டுகளில் பல சிறந்த வீரர்களை உருவாக்கிய பெருமையைக் கொண்ட மாவனல்லை ஸாஹிரா கல்லூரியானது, கடந்த 2 வருடங்களாக வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சம்பியனாக முடிசூடி வருகின்றது.
இந்நிலையில், அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட 12 வயதுப் பிரிவில், ஆண்கள் சம்பியனாகும் வாய்ப்பை மாவனல்லை ஸாஹிரா கல்லூரி 3 புள்ளிகளால் தவறவிட்டது. இதன்படி, 20 புள்ளிகளைப் பெற்ற கொழும்பு றோயல் கல்லூரி முதலிடத்தையும், 17 புள்ளிகளைப் பெற்ற மாவனல்லை ஸாஹிரா கல்லூரி 2ஆவது இடத்தையும், 14 புள்ளிகளைப் பெற்ற கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ற் கல்லூரி 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
ரஹீப் 100 மீற்றர் போட்டித் தூரத்தை 13.68 செக்கன்களில் நிறைவு செய்து, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வராலாற்றில் சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு தனது கல்லூரிக்கு முதலாவது வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
தேசிய மட்டப் போட்டியை 13.85 செக்கன்களில் நிறைவுசெய்த கொழும்பு றோயல் கல்லூரி வீரர் திலித் கணேகொட வெள்ளிப் பதக்கத்தையும், 14.13 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த அக்கரைப்பற்று அல் கலாம் முஸ்லிம் வித்தியாலய வீரர் ஏ.சி அப்துல்லா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
அத்துடன், இம்முறை நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் புதிய போட்டி சாதனையையும் ரஹீப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனரில் அருண, ஹசினி சிறந்த வீரர்களாக முடிசூடல்
கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும்..
பின்னர் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட ரஹீப், 2 செக்கன்களில் தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் குறித்த போட்டியை 8.48 செக்கன்களில் நிறைவு செய்து, இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் தனது 2ஆவது பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
குறித்த போட்டியை 8.46 செக்கன்களில் நிறைவுசெய்த கொழும்பு றோயல் கல்லூரி வீரர் திலித் கணேகொட தங்கப் பதக்கத்தையும், 8.54 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த கொழும்பு ஏசியன் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த அதீப் முஹிடீன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
அத்துடன், இம்முறை நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் புதிய போட்டி சாதனையையும் ரஹீப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போட்டியின் பிறகு Thepapare.com இற்கு ரஹீப் கருத்து வெளியிடுகையில், ”முதலில் இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து எனது பெற்றோர், என்னை வழிநடாத்திச் சென்ற பயிற்றுவிப்பாளரான சிராஸ் ஆசிரியருக்கும், பாடசாலை அதிபர், விளையாட்டுப் பொறுப்பாசிரியரான நிஸாம் ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் படிப்பையும், விளையாட்டையும் சமமாகக் கொண்டு சென்று தகவல் தொழில்நுட்ப பொறியியலாளராகவும், ஒரு சிறந்த குறுந்தூர ஓட்ட வீரராகவும் மாறவேண்டும் என்பது எனது இலட்சியமாகும்” என அவர் தெரிவித்தார்.
பலம் மிக்க சென் மேரிசை வீழ்த்தியது செரண்டிப் அணி
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக்…
இதேவேளை, சுமார் 700 பாடசாலைகளைப் பிரிதிநிதித்துவப்படுத்தி 6,300 இற்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்ட இம்முறை அகில இலங்கை விளையாட்டு விழாவில் ரஹீப் மாவனல்லை ஸாஹிராவுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதில் முக்கிய பங்கை வகித்த, சிறந்த கால்பந்து வீரரும், அண்மையில் நடைபெற்ற ஆசிய மாஸ்டரஸ் மெய்வல்லனர் தொடரில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அப்பாடசாலையின் மெய்வல்லுனர் பயிற்சியாளர் மொஹமட் சிராஸ், இந்த வெற்றி தொடர்பில் எம்மிடம் கருத்து வெளியிடுகையில்,
”12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 60 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ரஹீப் வெற்றிகளைப் பதிவுசெய்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், எமது பாடசாலையில் மெய்வல்லுனர் விளையாட்டுக்கு போதியளவு வசதிகள் காணப்படாவிட்டாலும், இவ்வாறான தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக்கொள்வதென்பது மிகப் பெரிய சாதனையாகும். இதற்கு இந்த மாணவனின் விடாமுயற்சியும் முக்கிய காரணம் எனலாம்.
அத்துடன் படிப்புடன் விளையாட்டையும் சமமாகக் கொண்டு செல்வதற்கு இந்த மாணவனின் பெற்றோர் வழங்குகின்ற ஊக்குவிப்பையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். எனவே எதிர்வரும் காலங்களிலும் எமது பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்து இதுபோன்று தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கின்றேன்” என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் தொடரில் பங்கேற்று அதில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தாலும், தற்போது ரஹீப் பெற்ற வெற்றியானது அதைவிட மிகப் பெரியது எனவும் பயிற்றுவிப்பாளர் சிராஸ் தெரிவித்தார்.