தரங்கவின் போராட்டம் வீண்; இரண்டாவது ஒரு நாள் போட்டியும் பாகிஸ்தான் வசம்

492

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியுள்ளதோடு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என முன்னேறியுள்ளது.

முன்னதாக அபுதாபி நகரின் ஷேக் செய்யத் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்து கொண்டார்.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக தமது துடுப்பாட்டத்தை பாகிஸ்தான் ஆரம்பித்தது. மெதுவான முறையிலேயே பாகிஸ்தான் வீரர்கள் ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கியிருந்தனர்.

போட்டியின் நான்காவது ஓவரை வீசிய லஹிரு கமகே பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தியதுடன் 17 ஓட்டங்களுக்குள் எதிரணியின் ஆரம்ப இணைப்பாட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார். குசல் மெண்டிசின் அருமையான பிடியெடுப்பினால் பாகிஸ்தா அணியின் முதல் விக்கெட்டாக பக்கர் சமான் வெறும் 11 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து சிறிது நேரத்தில் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹ்மத் ஷேசாத் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் சுரங்க லக்மாலினால் வீழ்த்தப்பட நல்லதொரு ஆரம்பத்தை இலங்கை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பாக அடுத்தடுத்து மைதானம் நுழைந்த பாகிஸ்தானின் மத்திய வரிசை வீரர்களான மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக் மற்றும் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் ஆகியோர் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் தந்த இன்னலினால் வந்த வேகத்திலேயே ஓய்வறை திரும்பினர்.

இதனால் அழுத்தங்களுக்கு உள்ளாகிய பாகிஸ்தான் மந்த கதியிலேயே ஓட்டங்களை சேர்க்கத் தொடங்கியது. இவ்வாறனதொரு நிலையில் போட்டியின் 28 ஆவது ஓவரை வீசிய சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்சேய் மூன்றாவது நடுவரின் உதவியோடு LBW முறையில் மேலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் 101 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி மிகவும் தடுமாறியது.

தமது அணியின் இக்கட்டான நிலையை உணர்ந்து களத்தில் நின்ற பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களான பாபர் அசாம் மற்றும் சதாப் கான் ஆகியோர் மிகவும் பொறுப்பான முறையில் ஆடத்தொடங்கினர். இவர்களின் போராட்டத்தினால் பாகிஸ்தான் 7ஆவது விக்கெட்டுக்காக 109 ஓட்டங்கள் என்கிற நல்லதொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பிக் கொண்டது.

அத்தோடு இது இலங்கை அணிக்கெதிராக பாகிஸ்தான் அணியினால் 7ஆவது விக்கெட்டுக்காக பதியப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட ஸாஹிரா எதிரணிக்கு சவால்

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரின்…

இந்த இணைப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பாகிஸ்தான் அணிக்கு நங்கூரமாக செயற்பட்ட வெறும் 23 வயதேயான பாபர் அசாம் தனது 7ஆவது ஒரு நாள் சதத்தையும், இத்தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான சதத்தையும் பூர்த்தி செய்து 6 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 133 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவித்திருந்தார், இவரின் ஜோடியாக செயற்பட்ட சதாப் கான் தனது கன்னி ஒரு நாள் அரைச்சதத்துடன் மொத்தமாக 52 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட லஹிரு கமகே 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், திசர பெரேரா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 220 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு இலங்கை வீரர்கள் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தனர். இலங்கை அணி தமது இலக்கு தொடும் பயணத்தில் 10 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. ஜுனைத் கான் மூலம் நிரோஷன் திக்வெல்ல இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக வீழ்த்தப்பட்டிருந்தார்.

நிரோஷன் திக்வெல்லவை அடுத்து களம் நுழைந்த குசல் மெண்டிசும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் தடுமாற்றத்தை உணர்ந்த இலங்கை அணிக்கு பாகிஸ்தானுக்கு கிடைத்த சில வாய்ப்புக்கள் மூலம் மேலும் அழுத்தங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பமும் அமைந்திருந்தது. அவற்றிலிருந்து அதிர்ஷ்டத்தின் மூலம் தப்பித்த இலங்கைக்கு அணித்தலைவர் உபுல் தரங்க மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சற்று நிதானமாக ஆடி ஒரு நல்ல இணைப்பாட்டத்துக்கு வித்திட முனைந்தனர். சொஹைப் மலிக்கின் சுழலினால் இலங்கை வீரர்களின் இந்த முயற்சி 40 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டாக லஹிரு திரிமான்ன 12 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

திரிமான்னவின் விக்கெட்டைத் தொடர்ந்து இலங்கையின் மத்திய துடுப்பாட்ட வரிசை பாகிஸ்தான் சுழல் வீரர்களை எதிர்கொள்ள மிகவும் தடுமாறியது. இதனால் அடுத்தடுத்து தமது துடுப்பாட்ட வீரர்களை ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் பறிகொடுத்தது. இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 93 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான  நிலைக்கு ஆளாகியிருந்தது.

எனினும் இந்நிலையில் ஜோடி சேர்ந்த ஜெப்ரி வன்டர்சேய் மற்றும் அணித்தலைவர் உபுல் தரங்க ஆகியோர் 76 ஓட்டங்களை எட்டாம் விக்கெட்டுக்காக பகிர்ந்து போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட ஸாஹிரா எதிரணிக்கு சவால்

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரின்…

இவர்களது இணைப்பாட்டம் தகர்க்கப்பட முடிவில் 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இலங்கை அணி 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது. இலங்கை அணிக்கு ஒரு நாள் போட்டிகளில் இது 9ஆவது தொடர்ச்சியான தோல்வியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சார்பான துடுப்பாட்டத்தில் உபுல் தரங்க அதிகபட்சமாக 144 பந்துகளில் 14 பவுண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களைக் குவித்து போராட்டத்தை காண்பித்திருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இலங்கைக்கு நெருக்கடி தந்த சதாப் கான் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் முன்னர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட சதாப் கானுக்கே வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 219/9 (50) – பாபர் அசாம் 101(133),  சதாப் கான் 52*(68), லஹிரு கமகே 57/4(10), திசர பெரேரா 34/2(10)

இலங்கை – 187 (48)உபுல் தரங்க 112*(144), ஜெப்ரி வன்டர்சேய் 22(55), சதாப் கான் 47/3(9), ஹசன் அலி 32/1(10)

முடிவு பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் வெற்றி