அத்லடிகோ மட்றிட் மற்றும் பார்சிலோனா கழகங்கள் மோதிய லாலிகா சுற்றுப்போட்டியின் போட்டியானது, பார்சிலோனா அணியினால் இறுதித் தருவாயில் பெறப்பட்ட கோலின் மூலம் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. முதல் பாதி அட்லடிகோ அணி சார்பாகவும், இரண்டாம் பாதி பார்சிலோனா அணி சார்பாகவும் அமைந்திருந்தது.
நேற்றைய தினம் (14) நடைபெற்ற போட்டிகளில் அட்லடிகோ மட்றிட் கால்பந்து கழகத்திற்கும் பிரபல பார்சிலோனா கால்பந்து கழகத்திற்கும் இடையிலான போட்டி பார்வையாளர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற போட்டியாக அமைந்தது. அத்துடன் பார்சிலோனா அணியானது அட்லடிகோ மட்றிட் அணியின் புதிய அரங்கமான மெட்ரோபோலீனோ (Metropolino) அரங்கில் விளையாடிய முதல் போட்டி இதுவாகும்.
போட்டியை ஆரம்பித்த பார்சிலோனா அணி முதல் 30 செக்கன்களிலே அட்லடிகோ மட்றிட் அணியின் பெனால்டி எல்லையிலிருந்து மெஸ்ஸி மூலம் முதல் முயற்சியை மேற்கொண்டது. முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது மெஸ்ஸி மற்றும் லுயிஸ் ஸீவாரேஸ் (Luis Suarez) ஆகிய பார்சிலோனாவின் முன்கள வீரர்களுக்கு இடையில் சிறந்த பந்துப் பரிமாற்றம் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது.
அட்லடிகோ மட்றிட் அணியின் முன்கள வீரரான ஏஞ்சல் குரேயா (Angel Correa), பார்சிலோனா அணியின் பின்கள வீரர்களால் விடப்பட்ட தவறினால் கிடைக்கப் பெற்ற பந்தின் மூலம் முதல் முயற்சியை போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் மேற்கொள்ள முயன்ற போதும், மீண்டும் விரைவாக செயற்பட்ட பின்கள வீரர்களால் பந்தானது தடுக்கப்பட்டது.
எனினும் 7 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மன் மூலம் பெனால்டி எல்லையின் வலது பக்கத்திலிருந்து வெற்றிகரமான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் கிரிஸ்மன் மூலம் வேகமாக உதையப்பட்ட பந்தை பார்சிலோனா கோல்காப்பாளர் சிறப்பாக தடுத்தாடினார். அத்துடன் 9 ஆவது நிமிடத்திலும் கிரிஸ்மன் மூலம் பல பின்கள வீரர்களையும் தாண்டி கவர்ச்சிகரமான ஓரு முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் நீண்ட நேரமாக பந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். என்றாலும் போட்டியின் 20 ஆவது நிமிடத்தில் சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின் மத்தியகளத்திலிருந்து கராஸ்கோ (Carassco) மூலம் இடது பக்க பெனால்டி எல்லைக்கு அருகில் வழங்கப்பட்ட பந்தை ஸோல் நீயெக் (Saul Niguel) சிறப்பாக பெற்று, பந்தை கோல் கம்பத்தின் வலது பக்க மூலையினால் வேகமாக உதைந்து கோலினுள் உட்செலுத்தினார். இதன் மூலம் அட்லடிகோ மட்றிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
முதல் கோல் பெறப்பட்டதன் பின்னர் 42 ஆவது நிமிடம் வரை எந்தவொரு வெற்றிகரமான முயற்சியும் இரு அணினளாலும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் 42 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி மூலம் அட்லடிகோ அணியின் 4 வீரர்களைத் தாண்டிச் சென்று கோலைப் பெறுவதற்கான சிறந்ததொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் இறுதித் தருவாயில் அம்முயற்சியும் தடுக்கப்பட்டது. இதுவே முதல் பாதியின் இறுதி முயற்சியாகவும் அமைந்தது.
முதல் பாதி: அட்லடிகோ மட்றிட் 1 – 0 பார்சிலோனா
இரண்டாம் பாதியை ஆரம்பித்த அட்லடிகோ மட்றிட் அணி 52 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மன் மூலம் இரண்டாவது கோலை பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கிரிஸ்மன் மூலம் இடதுபக்க பெனால்டி எல்லையிலிருந்து உதையப்பட்ட பந்தானது கோல் கம்பங்களிற்கு சற்று மேலால் சென்றது.
அதனைத் தொடர்ந்து 3 நிமிடங்களின் பின்னர் ஸுவாரேஸ் மூலம் மத்தியகளத்தின் வலதுபக்க மூலையிலிருந்து கோல்கம்பத்தின் இடதுபக்க மூலையை நோக்கி உதையப்பட்ட பந்தை கோல் காப்பாளர் பாய்ந்து தட்டி விட்டார். மீண்டும் 57 ஆவது நிமிடத்தில் மத்தியகளத்தில் இருந்து பெனால்டி எல்லைக்கு அருகில் பெறப்பட்ட ப்ரீ கிக் வாயப்பை பெற்ற மெஸ்ஸி, கோலின் வலதுபக்க மூலையால் பந்தை உள்ளனுப்ப முயன்றார். எனினும் பந்தானது கம்பத்தில் பட்டு எல்லைக் கோட்டிற்கு வெளியால் சென்றது.
தொடராக மீண்டும் போட்டியின் 65 ஆவது நிமிடத்தில் சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின் ஸுவாரேஸ் மூலம் பெனால்டி எல்லையின் இடது பக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை மெஸ்ஸி பெற்று கோலை நோக்கி உதைந்த போதும், பந்தானது கோல் காப்பாளர் மூலம் தடுக்கப்பட்டது. 5 நிமடங்களின் பின்னர் மீண்டும் ஒரு முயற்சி மெஸ்ஸி மூலம் மேற்கொள்ளப்பட்டது.
அதிகமாக பார்சிலோனா மற்றும் மெஸ்ஸியின் ஆதிக்கம் தென்படுவதை உணர்ந்த அட்லடிகோ அணி, சற்று தடுத்தாடும் பணியை மேற்கொண்டது. மெஸ்ஸி மூலமே போட்டியை சமநிலைப்படுத்துவதற்கான கோல் பெறப்படும் என்ற நிலைமை காணப்பட்ட போது, லுயிஸ் ஸுவாரேஸ் போட்டியை 81 ஆவது நிமிடத்தில் சமநிலைப்படுத்தினார்.
ஸர்ஜீயோ ரோபெர்டோ (Sergio Roberto) மூலம் மத்தியகளத்தின் வலது பக்கத்திலிருந்து, பெனால்டி எல்லையின் இடது பக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை ஸுவாரேஸ் சிறந்த முறையில் தனது தலையால் முட்டி கோலாக்கினார்.
இறுதித் தருவாயில் போட்டி சமநிலை பெற்றபோதும், அதன் பின்னரும் போட்டியை வெற்றிபெற இரு அணிகளாலும் எடுக்கப்பட்ட முயற்சிகள் தடுக்கப்பட்டதால், போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. முதல் பாதியில் அட்லடிகோ அணியின் ஆதிக்கமும், இரண்டாம் பாதியில் பார்சிலோனா அணியின் ஆதிக்கமுமே போட்டியில் காணப்பட்டது.
முழு நேரம்: அட்லடிகோ மட்றிட் 1 – 1 பார்சிலோனா
மேலும் சில போட்டி முடிவுகள்
ஸ்பான்யல் (Espanyol) 0 – லெவன்டே 0
கேடாவேய் 1 (Getafe CF) – றியல் மட்றிட் 2
அத்லடிகோ பில்பாகு (Ath. Bilbao) 1 – செவில்லா 0
றியல் சொசிடட் 2 – அலவெஸ் 0