மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான முதலாவது உத்தியோகபூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இலங்கை A அணி இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.
ஜமைக்காவின் டிரலவ்னி அரங்கில் நடைபெற்ற போட்டியில் பலோ ஓன்னை (Follow on) தவிர்ப்பதை நூலிழையில் தவறவிட்ட இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகளை காத்துக்கொள்ளத் தவறியது. இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் A அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை (11) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 364 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது. மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான சுனில் அம்ப்ரிஸ் (106) சதம் பெற்றதோடு விஷோல் சிங் 81 ஓட்டங்களைக் குவித்தார்.
மழை காரணமாக அடிக்கடி தடைப்பட்ட இந்த போட்டியின் முதல் இரு நாட்களிலும் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய நிலையில் மூன்றாவது நாளில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அன்றைய தினம் ஆட்ட நேரம் முடியும்போது இலங்கை A அணி 201 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்தது.
ஒரு முனையில் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மாத்திரம் சிறப்பாக ஆடி 104 ஓட்டங்களை பெற்றார். அவர் தவிர இலங்கை அணியின் வேறு எந்த வீரரும் 25 ஓட்டங்களைக் கூட எட்டவில்லை.
இலங்கை நேரப்படி நேற்று இரவு (14) ஆரம்பமான கடைசி நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி மேலும் 11 ஓட்டங்களை பெறுவதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
டெஸ்ட் சம்பியன்ஷிப், ஒரு நாள் லீக் என்பவற்றுக்கு ICC ஒப்புதல்
டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் சர்வதேச லீக் கிரிக்கெட் போட்டிகளை நடாத்தும் திட்டத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில…
இதன்படி இலங்கை 56.4 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கெயொன் ஜோசப் மற்றும் ரஹ்கீம் கோர்ன்வோல் தலா 3 விக்கெட்டுகளையும் ஷெல்டன் கொட்ரெல் மற்றும் டெமியோன் ஜேகொப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி இந்த டெஸ்டில் பலோ ஓன் செய்வதை தவிர்க்க 215 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையிலேயே முதல் இன்னிங்சில் அதற்கு மூன்று ஓட்டங்கள் குறைவாக சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதனால் ஆட்டத்தின் கடைசி நாள் பகல் போசண இடைவேளைக்கு முன்னரே இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 152 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.
எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சந்துன் வீரக்கொடி மற்றும் ரொன் சந்த்ரகுப்தா ஸ்திரமான தொடக்கத்தை பெற்றனர். இருவரும் 82 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர். முதல் இன்னிங்ஸில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்த வீரக்கெடி வேகமாக ஆடி அரைச்சதம் ஒன்றை எட்டினார். மறுமுனையில் துடுப்பாடிய சந்திரகுப்தா 46 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஜேகொப்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிந்தார்.
பின்னர் சிறப்பாக ஆடிவந்த வீரக்கொடி 58 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்களை பெற்று அரங்கு திரும்பிய பின் இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்கள் நின்றுபிடித்து ஆடத் தவறினர். அடுத்து வந்த அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவால் 18 ஓட்டங்களையே பெற முடிந்தது.
சரித் அசலங்க (0) மற்றும் தசுன் சானக்க (1) வந்த வேகத்திலேயே வெளியேறினர். ஆறாவது விக்கெட்டுக்கு வந்த ஷெஹான் ஜயசூரியவால் 18 ஓட்டங்களையே பெற முடிந்தது. இந்நிலையில் இலங்கை அணியின் கடைசி நான்கு விக்கெட்டுகளும் ஒற்றை இலக்கத்துடனேயே பறிபோயின.
இதனால் இலங்கை A அணி 44.2 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்கே சுருண்டது. அதாவது சிறப்பான ஆரம்பத்தை பெற்ற இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுகளும் வெறும் 57 ஓட்டங்களுக்குள்ளேயே பறிபோனது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய ஜேகொப்ஸ் 15 ஓவர்களில் 27 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இவர் தவிர கோர்ன்வோல் 18 ஓவர்கள் பந்துவீசி 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய A அணிக்கும் இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (19) ஜமைக்காவின் இதே டிரலவ்னி மைதானத்தில் ஆரம்பமாகும்.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்தியதீவுகள் A (முதல் இன்னிங்ஸ்) – 364/8d (120) – சுனில் அம்ப்ரிஸ் 106, விஷோல் சிங் 81, ஜோன் கெம்பல் 56, மலிந்த புஷ்பகுமார 104/3, ஷாமிக கருணாரத்ன 61/2
இலங்கை A (முதல் இன்னிங்ஸ்) – 212 (56.4) – தனஞ்சய டி சில்வா 104, வனிந்து ஹசரங்க 24, தசுன் சானக 20, கெயொன் ஜோசப் 33/3, ரஹ்கீம் கோர்ன்வோல் 69/3
இலங்கை A (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 139 (44.2) – சந்துன் வீரக்கொடி 56, ரொன் சந்த்ரகுப்தா 27, டேமியன் ஜேகொப்ஸ் 27/6, ரஹ்கீம் கோர்ன்வோல் 53/3
முடிவு – மேற்கிந்திய தீவுகள் A அணி இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் வெற்றி