33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளின் 4ஆவது நாளான இன்றைய தினம் (14), 17 இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.
எனினும், சீரற்ற காலநிலையால் போட்டிகளை நடத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டதுடன், போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்களும் பல்வேறு சங்கடங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில், 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 18 மற்றும் 20 வயதுப் பிரிவுகளில் வலள ஏ. ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தலா மூன்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்று நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர்.
அத்துடன், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவிகளும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டு தமது பாடசாலைகளுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கோலூன்றிப் பாய்தலில் ஹெரினா, சங்கவிக்கு வெற்றி
இன்றைய தினம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஹெரினா, 3.10 மீற்றர் உயரம் தாவி அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வர்ண சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளான சந்திரசேகரன் சங்கவி, 2.90 மீற்றர் உயரத்தை தாவி வெள்ளிப்பதக்கத்தையும், என். டக்சிதா, 2.90 மீற்றர் உயரம் தாவி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
அத்துடன், புதிய வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை வர்ண சாதனை உயரமான 2.60 மீற்றர் உயரத்தை இம்மூன்று வீராங்கனைகளும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீளம் பாய்தலில் சாதனை படைத்தார் சதீஸ்
யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த எஸ். சதீஸ், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். அவர் குறித்த போட்டியில் 6.08 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சபான்
33 வருடகால பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தேசிய மட்டத்தில் பதக்கமொன்றை வென்ற முதல் சந்தர்ப்பமாகவும் இது இடம்பெற்றது.
இந்நிலையில், 5.64 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த சிலாபம் அம்பகந்தவில் புனித ரொஜஸ் கல்லூரியைச் சேர்ந்த நிபுன் கனிஸ்க அப்புஹாமி வெள்ளிப்பதக்கத்தையும், 5.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த டி சில்வா வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
குண்டு எறிதலில் ரிஷானனுக்கு 3ஆவது இடம்
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு களுதாவளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே. ரிஷானன் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 13.90 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்தார். எனினும், கடந்த வருடம் நடைபெற்ற இதே விளையாட்டு விழாவில் குண்டு எறிதல் போட்டியில் 13.70 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இவர் தங்கப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாகக் களமிறங்கியிருந்த ரிஷானன், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று மைதான நிகழ்ச்சிகளில் களுதாவளை மகா வித்தியாலயத்துக்கு இரட்டை தங்கத்தை பெற்றுக்கொடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த அகலங்க விஜேசூரிய, 15.96 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், வெலிப்பன்ன சிங்கள கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த சுபுன் மதுசர, 14.14 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.
ஹார்ட்லி கல்லூரிக்கு 2 பதக்கங்கள்
அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி 2 பதக்கங்களை வென்றிருந்தனர்.
இதில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட எஸ்.மிதுன் ராஜ், 53.65 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
சிலாபம் புனித மரியார் கல்லூரியைச் சேர்ந்த கிரிஸ்மால் பெர்ணான்டோ, 60.08 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், குருநாகல் ஸ்ரீ நிஸ்ஸங்க தேசிய பாடசாலையைச் சேர்ந்த லக்மால் ஜயரத்ன, 54.50 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.
பாடசாலை மெய்வல்லுனரில் சதீபா, ஷெஹான் சாதனை
எனினும், இன்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், 13.64 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த டி. அபிஷாந்த் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியில் 39.59 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், குறித்த போட்டியில் 42.72 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சிலாபம் புனித ரீட்டா கல்லூரியைச் சேர்ந்த மலிந்த மெத்தசிங்க தங்கப்பதக்கத்தையும், 40.27 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த சவீன் ருமேஷ்க சில்வா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.
மேல் மாகாணம் முதலிடம்
33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் புள்ளிகள் பட்டியலில் 905 புள்ளிகளைப் பெற்று மேல் மாகாணம் முதலிடத்தையும், 401 புள்ளிகளுடன் மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 295 புள்ளிகளைப் பெற்று வட மேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது.
அத்துடன், தென் மாகாணம் 280 புள்ளிகளையும், சப்ரகமுவ மாகாணம் 250 புள்ளிகளையும், வட மாகாணம் 144 புள்ளிகளையும், கிழக்கு மாகாணம் 36 புள்ளிகளையும், தலா 34 புள்ளிகளுடன் ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்கள் கடைசி இரு இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
800m Final results