மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்தியதீவுகள் மகளிர் அணிக்குமிடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணி தன்வசப்படுத்தியது.
ப்ரையன் லாரா கிரிக்கெட் நிறுவன மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை மகளிர் அணிக்கு வழங்கியது. மழை காரணமாக போட்டி தாமதித்து ஆரம்பமாகியதுடன் போட்டி 47 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.
இலங்கையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெளிப்படுத்திய…
இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதும் மேற்கிந்தியதீவுகள் மகளிர் அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுக்களை இழக்க ஆரம்பித்தது.
இதன் முடிவில் இலங்கை மகளிர் அணி 46.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இலங்கை அணி சார்பில் யசோதா மென்டிஸ் 34 ஓட்டங்களையும் சமரி அதபத்து 31 ஓட்டங்களையும் டிலானி மனோதரா 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஆபி ப்லச்சர் 3 விக்கெட்டுக்களையும் அனிசா முஹம்மத் மற்றும் ஸ்டெபனி டெய்லர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர், 163 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் மகளிர் அணி 39.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது. அவ்வணி சார்பில் சிறப்பாக துடுபெடுத்தாடிய ஸ்டெப்னி டெய்லர் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களைப் பெற்றதுடன் டென்றா டொட்டின் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களைப் பெற்றார். ஹெய்லிஸ் மெத்திவ்ஸ் 25 ஓட்டங்களையும் கைசியா நைட் 24 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணியின் சமரி அதபத்து, இனோகா ரணவீர மற்றும் அமா காஞ்சனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஸ்டெப்னி டெய்லர் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை மகளிர் அணி – 162/10 (46.3) யசோதா மென்டிஸ் 34, சமரி அதபத்து 31, டிலானி மனோதரா 26, ஆபி ப்லச்சர் 3/24, அனிசா முஹம்மத் 2/16, ஸ்டெபனி டெய்லர் 2/31
மேற்கிந்தியதீவுகள் மகளிர் அணி – 163/3 (39.4) ஸ்டெப்னி டெய்லர் 60*, டென்றா டொட்டின் 37*, ஹெய்லிஸ் மெத்திவ்ஸ் 25, கைசியா நைட் 24.
முடிவு – மேற்கிந்தியதீவுகள் மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி