பாடசாலை மெய்வல்லுனரில் சதீபா, ஷெஹான் சாதனை

333

கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைப் பிரிவு ஆகியன இணைந்து நடாத்துகின்ற 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றுவருகின்றன.

போட்டிகளின் 3ஆவது நாளான இன்றைய தினம் நடைபெற்ற 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றரில் ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த சதீபா ஹெண்டர்சன் முதலிடத்தைப் பெற்று இம்முறை விளையாட்டு விழாவில் ஹெட்ரிக் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சட்டவேளி ஓட்டத்தில் கலந்துகொண்ட கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த ஷெஹான் திலூஷ காரியவசம், தனது சொந்த சாதனையை முறியடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

 

சதீபாவுக்கு ஹெட்ரிக் தங்கம்

Sadeepa

இம்முறை பாடசாலை விளையாட்டு விழாவில் ஹெட்ரிக் தங்கம் வென்ற முதல் வீராங்கனையாக ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த சதீபா ஹெண்டர்சன் முடி சூடிக்கொண்டார்.

இன்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட சதீபா, போட்டி தூரத்தை 25.9 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் 5.66 மீற்றர் தூரத்துடன் தனது சிறந்த காலத்தைப் பதிவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சதீபா, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை 12.67 செக்கன்கன்களில் நிறைவுசெய்து வருடத்தின் அதிவேக பாடசாலை வீராங்கனையாகவும் மாறினார்.

 

சட்டவேளி ஓட்டத்தில் ஷெஹான் தேசிய சாதனை

Shehan

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சட்டவேளி ஓட்டத்தில் கலந்துகொண்ட கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த ஷெஹான் திலூஷ காரியவசம், போட்டியை 13.91 செக்கன்களில் நிறைவுசெய்து தனது சொந்த சாதனையை முறியடித்ததுடன், புதிய பாடசாலை போட்டி வர்ண சாதனையும் நிகழ்த்தினார்.

200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சபான்

முன்னதாக இவ்வருடம் பஹாமாசில் நடைபெற்ற பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட ஷெஹான், குறித்த போட்டியை 13.96 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், களனி ஸ்ரீ தம்மாலோக வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்துவர லக்விஜயு, போட்டியை 14.27 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப்பதக்கத்தையும், நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த லஹிரு ப்ரபோதன, போட்டியை 14.83 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

 

மண்டூர் மாணவன் வரலாற்று சாதனை

Kukendiran

மட்டக்களப்பு  மாவட்டத்தில் யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதும், மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற புதுக்குடியிருப்பு கல்வி வலயம், மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த பரமேஸ்வரன் குகேந்திரன், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 12.99 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, 33 வருடகால அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா வரலாற்றில் மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பெருமையும் இவரையே சாருகின்றது.

இந்நிலையில், கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் விஸ்வஜித், 13.55 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தையும், கஹவத்தை மத்திய கல்லூரியைச் சேர்ந்த கே. விக்ரமசிங்க, 12.48 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

 

கோலூன்றிப் பாய்தலில் புவிதரனுக்கு 2ஆவது தங்கம்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த ஆ. புவிதரன் தொடர்ச்சியாக 2ஆவது வருடமாகவும் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

பாடசாலை மெய்வல்லுனரில் யாழ் மாணவர்களின் பதக்க வேட்டை ஆரம்பம்

இம்முறை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற வட பகுதி மாணவர்கள், இன்றைய தினமும் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட புவிதரன், 4.50 மீற்றர் உயரம் தாவி புதிய பாடசாலை வர்ண சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.

எனினும், ஜொய்சனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த ஆர். யதூஷன் 4.00 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், யாழ். மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த கே. கேதூஷன், 3.90 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

 

100 மீற்றரில் மாவனல்லை ஸாஹிராவுக்கு தங்கம்

mawanalla-zahira

12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையைச் சேர்ந்த எம்.என் ரஹீப் தங்கப்பதக்கம் வென்றார்.

அவர் குறித்த போட்டியை 13.68 செக்கன்களில் நிறைவு செய்து, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வராலாற்றில் சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு முதலாவது வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன் இம்முறை நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் புதிய போட்டி சாதனையையும் ரஹீப் படைத்தார்.

இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் பல நட்சத்திர வீரர்களை உருவாக்கிய பெருமையைக் கொண்ட மாவனல்லை ஸாஹிரா பாடசாலையானது, கடந்த 2 வருடங்களாக வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சம்பியனாகவும் முடிசூடியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த போட்டியை 13.85 செக்கன்களில் நிறைவு செய்த கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த திலித் கணேகொட வெள்ளிப்பதக்கத்தையும், 14.13 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த அக்கரைப்பற்று அல் கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏ.சி அப்துல்லா வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

மேல் மாகாணம் முன்னிலையில்

கடந்த 3 தினங்களாக நடைபெற்றுவருகின்ற 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் புள்ளிகள் பட்டியலில் மேல் மாகாணம் முதலிடத்தையும், தென் மாகாணம் 2ஆவது இடத்தையும், வட மேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டு முன்னிலை வகிக்கின்றது.