இலங்கையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி

303
Image courtesy ICC

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெளிப்படுத்திய மோசமான துடுப்பாட்டம் காரணமாக 6 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நியுசிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டித் தொடர்கள் நேற்று இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பமானது.  

மகளிர் உலகக் கிண்ணத்தினை நடாத்தும் நியுசிலாந்து அணி நேரடியாக உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறுவதுடன் ஏனைய அணிகளில் இப்போட்டித் தொடரில் முதல் 3 இடங்களைப் பெரும் அணிகளும் நேரடியாக தகுதி பெரும். ஏனைய அணிகள் தகுதிகாண் போட்டிகளின் மூலம் உள்வாங்கப்படும்.

சந்திமாலின் தலைமைத்துவத்தை பாராட்டும் குமார் சங்கக்கார

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, பாகிஸ்தான்..

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று ட்ரினிடாட் மற்றும் டொபாக்கோவிலுள்ள ப்ரையன் லாரா கிரிக்கெட் நிறுவன மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு காரணமாக 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் யசோதா மென்டிஸ் 34 ஓட்டங்களையும் சமரி அதபத்து 25 ஓட்டங்களையும் டிலானி மனோதரா 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற, ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆபி ப்ளச்சர், ஹெய்லி மெத்திவ்ஸ் மற்றும் ஸ்டாப்ணி டெய்லர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 39 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது. இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கிய ஹெய்லி மெத்திவ்ஸ் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வேளை காயம் காரணமாக ஓய்வறை திரும்பினார். அதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் சிறப்பான களத்தடுப்பு மற்றும் பந்து வீச்சுக் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.  

முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படவுள்ள 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக்..

எனினும், சுதாகரித்துக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி நடு வரிசை வீராங்கனைகளின் நிதானமான துடுப்பாட்டம் காரணமாக வெற்றி இலக்கினை அடைந்தது. அவ்வணியின் செடீன் நேசன் 24 ஓட்டங்களையும் டீன்றா டொட்டின் 22 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க மேரிசா எகயுலேரியா மற்றும் கிசொனா நைட் ஆகியோர் ஆட்டமிழக்காது முறையே 32 மற்றும் 22 ஓட்டங்களைப் பெற்றனர்.  

பந்து வீச்சில் இலங்கை அணியின் தலைவி இனோகா ரணவீர 2 விக்கெட்டுக்களையும் சிரிபாலி வீரக்கொடி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் அணி 136/10 (49.4) – யசோதா மென்டிஸ் 34, டிலானி மனோதரா 28*, சமரி அதபத்து 25, ஹெய்லி மெத்திவ்ஸ் 18/3, ஸ்டாப்ணி டெய்லர் 24/3

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 138/4 (39)மேரிசா எகயுலேரியா 32*, சிடீன் நெடியன் 24, இனோகா ரணவீர 27/2