ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைக்கால போட்டித் தடைக்கு உள்ளாகியிருந்த இலங்கை மெய்வல்லுனர் அணியின் குறுந்தூர ஓட்டப்பந்தய வீரர் ருவன் பிரதீப் குமாரவுக்கு 4 வருட போட்டித் தடை விதிக்க தேசிய ஊக்கருந்து தடுப்பு நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
23 வயதான ருவன் பிரதீப், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 4X400 அஞ்சலோட்ட அணியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
இராணுவ மெய்வல்லுனர் தொடரில் கிழக்கு மாகாண வீரர்கள் பிரகாசம்
இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை..
எனினும் போட்டிகளுக்கு முன்னதாக, அதாவது கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி ருவன் பிரதீப் உள்ளிட்ட ஒரு சில வீரர்களின் சிறுநீரக மாதிரிகளை சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு நிறுவகத்திக்கு அனுப்பிவைக்க தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவகம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி, மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் ருவன் பிரதீப் ஊக்கமருந்து பயன்படுத்தியமை கண்டறியப்பட்டது. எனினும் ருவனிடமிருந்து பி மாதிரி பரிசோதனையை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவகம் கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி தேசிய மெய்வல்லுனர் சம்மேளனத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
ஆனால் இப்பரிசோதனைகளின் இறுதி அறிக்கைகள் வெளியாவதற்கு முன் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்ட 23 பேர் கொண்ட இலங்கை குழாமில் ருவன் இடம்பெற்றிருந்தார். எனினும், குறித்த போட்டி நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன் ருவன் பிரதீப் ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து தேசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் அனுமதியுடன் உடனடியாக அவரை நாட்டுக்கு திருப்பி அழைக்க தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி கடந்த 2 மாதங்களாக இதுதொடர்பில் விசேட பரிசோதனைகளை மேற்கொண்ட தேசிய ஊக்கருந்து தடுப்பு நிறுவகம், ருவன் பிரதீப் ஊக்கமருந்து பயன்படுத்தியதை உறுதி செய்ததையடுத்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் 4 வருடங்கள் எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மெய்வல்லுனர் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத விதத்தில் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
National Sports Festival – Eastern Province relay team
Eastern Province relay team – Gold medal winners in 43rd National sports Festival – 2017
இந்நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் ருவன் பிரதீப்பிடம் விசேட விசாரணைகளை மேற்கொண்ட தேசிய மெய்வல்லுனர் சம்மேளனம், தேசிய மெய்வல்லுனர் குழாமில் இடம்பெற்றுள்ள இன்னும் ஒரு சில வீரர்கள் இவ்வாறு ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளமை தொடர்பிலான தகவல்களை ருவனின் ஊடாக வாக்குமூலமாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை தேசிய மெய்வல்லுனர் சம்மேளனம் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகிய 13ஆவது வீரராக ருவன் பிரதீப் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க