இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் முதற்தடவையாக துபாயில் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டி பற்றிய கருத்துக்களை இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பகிர்ந்துள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை, தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானமிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாளை களமிறங்குகின்றது.
முதற்தடவையாக இளஞ்சிவப்பு நிறப்பந்துடன் (Pink Ball) இலங்கை விளையாடும் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் இலங்கைக்கு எவ்வாறு அமையும் என்பதை பற்றி தினேஷ் சந்திமால் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“நாங்கள் மிகவும் எதிர்பார்ப்புகளுடன் காணப்படுகின்றோம். நாம் கடந்த பருவகாலத்தில் இளஞ்சிவப்பு நிறப் பந்துகளை பயன்படுத்தி உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை வைத்திருக்கின்றோம். எனினும் அவை பகலிரவு ஆட்டமாக அமைந்திருக்கவில்லை. இதுதான் முதற்தடவையாக நாம் பங்கேற்கும் பகலிரவுப் போட்டியாகும். எனவே இதனை எமது அணிக்கு ஒரு பாரிய சவலாகக் கருத முடியும். எங்கள் வீரர்கள் இந்த சவாலை சிறந்த முறையில் எதிர்கொண்டு நல்ல முடிவுகளை காட்டுவார்கள்.“
பயன்படுத்தும் புதிய பந்தானது சுழல் வீரர்களுக்கு சாதகமான முடிவுகளை காட்டுமா எனக் கேட்கப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு பதிலளதித்த இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் “ நான் இளஞ்சிவப்பு நிறப் பந்து பயன்படுத்தப்பட்ட உள்ளூர் போட்டியொன்றில் விளையாடியுள்ளேன். அப்போது முதல் 20 தொடக்கம் 25 ஓவர்கள் வரையில் பந்தானது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக அமைந்திருந்தது. பந்து தொடர்ந்து உபயோகமாகும் போது ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சுக்களை இலகுவாக மேற்கொள்ள முடிந்தது இவற்றை வைத்து பார்க்கும் போது சுழல் வீரர்களுக்கு பந்தினால் பெரிய உபயோகமிருக்காது என நம்புகின்றேன்“ எனக் கூறியிருந்தார்.
ஒழுக்க விதியை மீறிய தனுஷ்க குணதிலக்க இடைநிறுத்தம்
இலங்கை அணியின் இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு…
இவ்வருடத்தில் பலம் குறைந்த ஜிம்பாப்வே அணிக்கெதிராக மாத்திரமே இலங்கை டெஸ்ட் தொடரொன்றில் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. மற்றைய தொடர்கள் எதிலும் எதிர்பார்த்த நல்ல முடிவுகளை அடையாத காரணத்தினால் இலங்கை அணி விமர்சனங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகியிருந்தது. இவ்வாறான நிலை பாகிஸ்தானுடனான இந்த டெஸ்ட் தொடரில் நடைபெறாது என சந்திமால் உறுதி வழங்கியிருந்தார்.
“நாங்கள் (நாளைய) போட்டியில் வெற்றியையே எதிர்பார்க்கின்றோம். நாங்கள் இங்கே போட்டியை சமநிலைப்படுத்தும் நோக்கோடு விளையாடப்போவதில்லை. போட்டியில் வெற்றி பெறுவதே எங்களது பிரதான இலக்கு“ என சந்திமால் கூறியிருந்தார்.
முதலாவது போட்டியில் இலங்கை ஆறு பிரதான துடுப்பாட்ட வீரர்களோடு களமிறங்கிய போதிலும் அவர்கள் எதிர்பார்த்த பெறுபேறுகளை தராத காரணத்தினாலேயே, இரண்டாம் இன்னிங்சில் அழுத்தங்களுடன் கூடிய வெற்றி இலக்கினை எதிரணிக்கு நிர்ணயம் செய்திருந்தது. இவ்வாறான இலங்கை அணியில் ஏதாவது மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த சந்திமால், “நாங்கள் அணியில் மாற்றம் எதனையும் கொண்டுவரும் நோக்கத்தில் இல்லை. ஆனால், லஹிரு திரிமான்ன தனது முதுகில் சிறிய உபாதை ஒன்றை உணர்வதாக கூறியிருந்தார். அவரை நாம் பார்க்க வேண்டியுள்ளது. நாம் அவரை போட்டி ஆரம்பமாக முன்னரும் பார்த்து ஒரு முடிவை எடுக்கவுள்ளோம். ஆனால், அவர் நாளைய போட்டியை விளையா ட பூரண தகுதியுடன் காணப்படுவார் என நம்புகின்றேன். அத்தோடு போட்டி பகலிரவு ஆட்டம் என்பதால் அதனையும் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டியுள்ளது. எனினும், எந்தவிதமான மாற்றங்களையும் அணியில் எதிர்பார்க்க முடியாது என்றே என்னால் கூறமுடியும்“ எனக் குறிப்பிட்டார்.
முதற்தடவையாக பாகிஸ்தான் அணியை அபுதாபியில் வைத்து டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றிபெற்றிருக்கும் இலங்கை அணி மீண்டும் அவர்களை வீழ்த்த விஷேட வியூகங்கள் எதனையும் உபயோகப்படுத்தப்போவதில்லை எனக் கூறிய சந்திமால், தமது அணியின் ஒருங்கிணைந்த செயற்பாடும் எதிரணியின் பலவீனங்களும் அதற்கு போதுமாகவிருக்கும் என நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்.
“எனது கிரிக்கெட் வாழ்க்கையை எடுத்துப் பார்க்கும் போது, நான் அவதானித்த விடயங்களில் ஒன்று பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் பொதுவாக சிரமத்தை எதிர்கொள்வர். அது நான் கடந்த 7, 8 வருடங்களாக அவதானித்த ஒன்று. நீங்கள் ரங்கன ஹேரத்தை எடுத்துப்பார்த்தால் அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர். எனவே அவர் இந்தப் போட்டிக்கும் ஒரு துருப்புச் சீட்டு வீரராகக் காணப்படுவார். எனவே விடயங்கள் அனைத்தும் நாம் எதிர்பார்த்த விதமாக நடைபெறும் என நம்பியுள்ளோம்” என சந்திமால் கூறியிருந்தார்.