அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரைக் கரப்பந்தாட்டப் போட்டிகளில் வட மாகாண அணிகள் தமது அபார ஆட்டங்களை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுள்ளன.
நீர்கொழும்பு உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற இந்த போட்டிகளில், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வட மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று அணிகளான புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரி, தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் ஆகியன, ஒரேயொரு மேல் மாகாண அணியான நீர்கொழும்பு சீதுவ தவிசமீர மகா வித்தியாலய அணியுடன் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்தன.
டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர்
டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டச் சுற்றுப் …
இரு வடமாகாண அணிகளுக்கிடையிலான மோதலாக அமைந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம், புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணியினை 21:18, 21:16 என தொடர்ச்சியாக இரண்டு செற்களையும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சீதுவ தவிசமீர மகா வித்தியாலய அணி 21:18, 21:16 என்ற புள்ளிகளடிப்படையில் வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலய அணியை முதல் இரண்டு செற்களிலும் வீழ்த்தி 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தமது இடத்தினைப் பதிவுசெய்தது.
ஸ்ரீ சுமண – சீதுவ தவிசமீர அணிகள் விளையாடிய இறுதிப் போட்டியின் முதலாவது செற்றினை 21:18 என கைப்பற்றி அதிர்ச்சியளித்தது வவுனியா ஸ்ரீ சுமண அணி. அடுத்த செற்றில் மீண்டெழுந்த சீதுவ தவிசமீர அணி 21:16 என்ற புள்ளிகளடிப்படையில் வெற்றிபெற்றது.
பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற தீர்மானம்மிக்க இறுதி செற்றில் 17:15 என வெற்றிபெற்று தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் தங்கப் பதக்கத்தினை தமதாக்கியது சீதுவ தவிசமீர அணி. வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலய வீரர்கள் வெள்ளிப் பதக்கத்தினை தமதாக்கினர்.
இரு யாழ்ப்பாண அணிகளுக்கிடையிலான மோதலாக அமைந்த மூன்றாம் இடத்திற்கான போட்டியில் 21:11, 21:13 என்ற புள்ளிகளடிப்படையில் வெற்றியைத் தமதாக்கியது தொண்டைமனாறு விரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி. இதன்மூலம் அக்கல்லூரி வரலாற்றில் தேசிய ரீதியிலான முதலாவது பதக்கத்தினை சுவைத்தது. அதேவேளை, நான்காவது இடத்தினைத் தமதாக்கியது புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி.
அணி குழாம்
தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை ம.வி – கவீசனன், டிலக்சன்
பயிற்றுவிப்பாளர் – மயூரன்
புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி – விதுசன், சரண்ஜன்
பயிற்றுவிப்பாளர் – திவாகர்
Anitha Jagatheesvaran break the First National record at the 43rd National Sports Festival
Uploaded by ThePapare.com on 2017-09-22.
மூன்றாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்தில் முதல் பதக்கத்தினை வெற்றிகொண்ட தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணியின் பொறுப்பாசிரியர் வசந்தகுமார் அவர்கள் ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கும்பொழுது, “வரலாற்றிலேயே முதலாவது பதக்கத்தினை எமது கல்லூரி பெற்றிருக்கின்றது. மிகவும் மகிழ்வாக உணர்கின்றேன். வீரர்களினதும் பயிற்றுவிப்பாளர் மயூரனதும் கடின உழைப்பு இந்த வெற்றியினைப் பெற்றுத்தந்திருக்கின்றது” எனத் தெரிவித்தார்.
கடற்கரை கரப்பந்தாட்டத்திற்குரிய பந்து முதல் சீரான ஆடுகளம் வரை எதுவிதமான வசதிகளோ வளங்களோ இன்றி, யாழ் வீரர்கள் தமது சொந்த முயற்சியின் பலனாக இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர்.
இவ்வாறு உரிய வளங்களின்றி சாதித்துக் காட்டியதன் பின்னராவது கடற்கரை கரப்பந்தாட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்குரிய நவடிக்கையினை உரிய தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக மைதானங்களினை அமைத்தல் மற்றும் அவற்றினை பராமரித்தல் என்பவற்றில் கவனஞ்செலுத்தப்பட வேண்டும்.
வெற்றி பெற்ற அத்தனை வீரர்களுக்கும் Thepapare.comஇன் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.