கண்டியில் பதினெட்டு வயது பாடசாலை ரக்பி வீரர் ஒருவர் பயிற்சியின்போது மயங்கி விழுந்த நிலையில் கண்டி பொது மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) காலமானார்.
பல்லேகலை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (30) போட்டித் தொடருக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த கண்டி, திரித்துவக் கல்லூரியின் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாதிய ஏகனாயக்க (Bathiya Ekanayake) திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.
மயக்கமுற்ற வீரரை பயிற்சியாளர்கள் மற்றும் பொறுப்பாசிரியர் விரைவாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில், அவர் உடனடியாக அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12 மணி நேரம் அவரது உயிரை காக்க மருத்துவர்கள் போராடிய நிலையில் ஞாயிறு பிற்பகல் அவரது உயிர் பிரிந்துள்ளது.
இலங்கை தேசிய ரக்பி அணியின் முன்னாள் வீரருக்கு 2 வருட போட்டித்தடை
முன்னாள் இலங்கை தேசிய ரக்பி அணியின் வீரரும் தற்போதைய கண்டி…
வளர்ந்து வரும் ரக்பி வீரரான இளம் பாதிய, தான் கனிஷ்ட வீரராக விளையாடிய காலத்தில் திறமை மிக்க ஒரு வீரராக செயற்பட்டவராவார். திரித்துவக் கல்லூரி முதல் பதினொருவர் ரக்பி அணியில் விளையாடுவதே அவரது கனவாக இருந்தது. 2018ஆம் ஆண்டு பருவ காலத்திற்கு முந்தைய பயிற்சிகளில் பங்கேற்றிருந்த பாதியவின் எதிர்காலம் தொடர்பில் பயிற்சியாளர்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.
எதிர்பாராத இந்த மரணம் குறித்து திரித்துவக் கல்லூரி அதிபர் அன்ட்ரூ போலர்-வட் கூறியதாவது, “ஒரு இளம் திரித்துவக் கல்லூரி மாணவனின் சோகமான இழப்பு குறித்து என்னுடன் அனைத்து திரித்துவக் கல்லூரி குடும்பமும் இணைந்து சோகம் மற்றும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. பாதிய மற்றும் அவரது குடும்பத்திற்காக பிரார்த்திப்பதோடு அவரது பெற்றோர், சகோதரி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்” என்றார்.
ஒட்டுமொத்த இலங்கை ரக்பி சமூகத்திற்கும் இது ஒரு துயரமான தருணம் என்பதோடு இந்த சோகமான மரணத்திற்கு Thepapare.com இவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.