சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ‘டிவிஷன் – I’ பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 1 போட்டி இன்று நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் 2 போட்டிகள் இன்று ஆரம்பமாயின.
ராஹுல கல்லூரி, மாத்தறை எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகலை
மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நேற்று ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருநாகலை மலியதேவ கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மாத்தறை ராஹுல கல்லூரி முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தை தனது துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் தமது முதல் இன்னிங்சுக்காக 87.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது. சசித்த மனுரங்க அபாரமாக துடுப்பாடி 83 ஓட்டங்களையும் பாக்ய ஹிமத் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
மலியதேவ கல்லூரி சார்பில் பந்து வீச்சில் துலாஜ் ரணதுங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சன்ஜீவன் பிரியதர்ஷன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மலியதேவ கல்லூரிக்கு துலாஜ் ரணதுங்க துடுப்பாட்டத்திலும் சிறப்பாக கைகொடுத்தார். எனினும் மலியதேவ கல்லூரி 43.5 ஓவர்களில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. துலாஜ் ரணதுங்க தனித்துப் போராடி 81 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் சமுதித்த டில்ஷான் ராஹுல கல்லூரி சர்பில் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
முதல் இன்னிங்ஸில் 87 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற ராஹுல கல்லூரி கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்ததோடு ஆட்ட நேர முடிவில் 74 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.
போட்டியின் சுருக்கம்
ராஹுல கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 245 (87.2) – சசித் மனுரங்க 83, பாக்யா ஹிமாத் 45, லகிந்து சமோத்ய 31, துலாஜ் ரணதுங்க 5/64, சன்ஜீவன் பிரியதர்ஷன 4/62
மலியதேவ கல்லூரி, குருநாகலை (முதல் இன்னிங்ஸ்) – 158 (43.5) – துலாஜ் ரணதுங்க 81, கவீன் பண்டார 37, சமுதித்த டில்ஷான் 4/33
ராஹுல கல்லூரி, மாத்தறை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 74/1 (23) – ஹரித் டில்ஹார 28*
முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி
கொழும்பு, ப்ளும்பீல்ட் மைதானத்தில் இன்று ஆரம்பமான கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியுடனான இரண்டு நாட்கள் கொண்ட போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்துகிறது.
இங்கிலாந்தில் இருந்து மீண்டும் ஜிம்பாப்வே திரும்பும் நட்சத்திர வீரர்கள்
உலகிலுள்ள அனைத்து மக்களையும் இன, மத, மொழி வேறுபாடின்றி இணைக்கின்ற சக்தியும், வல்லமையும் விளையாட்டுக்கு உண்டு…
புனித ஜோசப் கல்லூரியினால் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட டி.எஸ். சேனநாயக்க கல்லூரி 50.4 ஓவர்களில் 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. டி.எஸ். சேனநாயக்க கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் பசிந்து ஆதித்ய மற்றும் தசுன் பெரேரா ஆகியோர் தலா 41 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் புனித ஜோசப் சார்பாக சலிந்த செனவிரத்ன மற்றும் அஷேன் டேனியல் ஆகியொர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி அணி ஆட்ட நேர முடிவில் 42 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ரெவான் கெல்லி அபாரமாக துடுப்பெடுத்தாடி சதம் ஒன்றைப் பெற்றார். அவர் 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.
நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 186 (50.4) – பசிந்து ஆதித்ய 41, தசுன் பெரேரா 41, சலிந்த செனவிரத்ன 5/45, அஷேன் டேனியல் 5/61
புனித ஜோசப் கல்லூரி, மருதானை (முதல் இன்னிங்ஸ்) – 163/4 (42) – ரெவான் கெல்லி 102*, சச்சின் ரவிந்து 32, மிதுஷன் குமார 2/34
றோயல் கல்லூரி, கொழும்பு எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் இசிபதன கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி றோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய றோயல் கல்லூரி அணி 77 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது.
றோயல் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் பசிந்து சூரியபண்டார 89 ஓட்டங்களை பெற்றதோடு கவிந்து மதரசிங்கவும் 52 ஓட்டங்களைப் பெற்றனர். இசிபதன கல்லூரி சார்பில் பந்து வீச்சில் அயன சிறிவர்தன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இசிபதன கல்லூரி இன்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் 57 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 241/9d (77) – பசிந்து சூரியபண்டார 89, கவிந்து மதரசிங்க 52, அயன சிறிவர்தன 4/58
இசிபதன கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 57/1 (16) – சஞ்சுல பண்டார 25