UEFA சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்திய ரியல் மெட்ரிட் அணி, ரொனால்டோ மூலம் பெறப்பட்ட இரு கோல்களினால் டோர்ட்மன்ட் (Dortmund) அணிக்கு எதிராக 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இவ்வெற்றியின் மூலம் டோர்ட்மன்ட் கழகத்தின் மைதானத்தில் இறுதியாக விளையாடிய 7 போட்டிகளின் பின்னரான தனது முதல் வெற்றியை ரியல் மெட்ரிட் அணி பதிவு செய்துள்ளது.
UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியின் இரண்டாவது கட்டப்போட்டியில் டோர்ட்மன்ட் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகள், டோர்ட்மன்ட் அணியின் மைதானமான இடூனா பார்க் (Iduna Park) அரங்கில் மோதின.
பன்டஸ்லிகா (Bundesliga) கால்பந்து சுற்றுப் போட்டிகளில் விளையாடிவரும் டோர்ட்மன்ட் அணி, இப்பருவகாலத்தின் ஆரம்பம் முதல் விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது. அதேவேளை கடந்த வருட லா லிகா மற்றும் UEFA சம்பியன் கிண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் அணியானது, டோர்ட்மன்ட் கழகத்தின் அரங்கில் இறுதியாக நடைபெற்ற 7 போட்டிகளில் எந்தவொரு போட்டியையுமே வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போட்டியானது இரு அணிகளுக்கும் சவாலான ஓரு போட்டியாகவே அமைந்திருந்தது.
ரியல் மெட்ரிட் அணியின் முக்கிய வீரர்களான மார்சலோ மற்றும் பென்சமா ஆகிய வீரர்கள் உபாதை காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. மேலும், டோர்ட்மன்ட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக இப்பருவகாலம் முதல் செயற்படும் பீடர் போஸ் (Peter Bosz), இப்போட்டியில் டோர்ட்மன்ட் அணியின் முன்களம் மற்றும் மத்திய களங்களில் மாற்றங்களை செய்திருந்தார்.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் வேகமான பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்டதை காணமுடிந்தது. போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் பின்களத்திலிருந்து டோர்ட்மன்ட் அணியின் மத்திய களத்தின் வலது பக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை பெற்ற கர்வஹால், பந்தை டோர்மன்ட் அணியின் பெனால்டி எல்லை வரை கொண்டு சென்று வலது பக்கத்தினுடாக கோலை நோக்கி பந்தை உதைந்தார். எனினும் பந்து இலகுவாக கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.
மீண்டும் விரைவாக செயற்பட்ட ரியல் மெட்ரிட் அணிக்கு, போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் ஈஸ்கோ மூலம் டோர்ட்மன்ட் அணியின் பின்களத்தினூடாக பெனால்டி எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை பெற்ற ரொனால்டோ, சுயநலம் பாராமல் இடதுபக்கம் வழியாக கரத் பேய்லை நோக்கி பந்தை வழங்கினார். பந்தை கோலை நோக்கி செலுத்த முற்பட்டபோது டோர்ட்மன்ட் அணியின் பின்கள வீரர் லுகாஸ் பிஸ்ஸேக் (Lucasz Pizczek) மூலம் சிறந்த முறையில் அது தடுக்கப்பட்டது.
இறுதி நிமிட கோலினால் ஸாஹிராவை வீழ்த்திய புனித பத்திரிசியார் கல்லூரி
ஸாஹிராவிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை மொஹமட் ரஷீட் நேரடியாக கோலினை…
அதனைத் தொடர்ந்து சுதாகரித்துக் கொண்ட டோர்ட்மன்ட் அணிக்கு, ரியல் மெட்ரிட் பின்களத்தில் விடப்பட்ட தவறை பயன்படுத்திய அபயம்ன்பர்ங் (Aubameyang), பந்தை பின்களத்திலிருந்து பெற்று பெனால்டி எல்லையின் வலது பக்கத்திற்கு வழங்கினார். பந்தை பெற்ற யார்மலன்கோ (Andriy Yarmalenko) பந்தை உள்ளனுப்பிய போதும், எந்தவொரு வீரராலும் தலையால் முட்டி கோலாக்க முடியவில்லை. எனினும் கோல் கம்பங்களிற்கு அருகிலிருந்த முன்கள வீரரான பிலிப் (Philip) பந்தை கோலை நோக்கி உதைந்த போது பந்தானது ரியல் மெட்ரிட் அணியின் கோல் காப்பாளர் மூலம் தடுக்கப்ட்டது.
போட்டியின் 18 ஆவது நிமிடத்தில் கர்வஹால் மூலம் டோர்ட்மன்ட் அணியின் மத்திய களத்திலிருந்து பெனால்டி எல்லையின் இடது பக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை, ரியல் மெட்ரிட் அணியின் முன்கள வீரரான பேய்ல், பந்து தரையில் பட முன்னரே தனது இடது பாதத்தால் கோல் கம்பத்தின் வலது பக்க மூலையை நோக்கி உதைந்து கோலாக்கினார்.
பேய்லின் மூலம் பெறப்பட்ட கோலினால் ரியல் மெட்ரிட் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் போட்டியில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து முயற்சிகளைக் கைவிடாத டோர்ட்மன்ட் அணிக்கு போட்டியின் 38 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லைக்கு அருகில் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற அபயம்ன்பர்கினால் ரியல் மெட்ரிடின் தடுப்புச் சுவரை தாண்டி தனது அணிக்காக கோலைப் பெற முடியவில்லை.
முதல் பாதி: ரியல் மெட்ரிட் 1 – 0 டோர்ட்மன்ட்
கோட்ஸே மூலம் ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லையின் வலதுபக்க மூலைக்கு வழங்கப்பட்ட பந்தை, யர்மலன்கோ தலையால் முட்டி அபயர்ம்ன்பர்கிற்கு வழங்கினார். பந்தை எதிரணி வீரர் ஒருவர் தட்டி விட்டாலே போட்டி சமநிலை பெறும் என்ற நிலையிலிருந்த போது விரைவாக செயற்பட்ட வரானே (Raphaël Varane), எதிரணி வீரரை நோக்கி வந்து கொண்டிருந்த பந்தை கோல் கம்பத்தின் மிக அருகிலிருந்து தடுத்தார்.
அதனை தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரியல் மெட்ரிட் அணி பந்தை அதிகளவு நேரம் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது. அதன் பலனாக 49 ஆவது நிமிடத்தில் டோர்ட்மன்ட் அணியின் பின்கள வீரர்களால் இடது பக்கத்தில் விடப்பட்ட இடைவெளியினுடாக ரியல் மெட்ரிட் அணியின் மத்தியகள வீரர் டோனி குரூஸ் (Toni Kroos) பந்தை பின்களத்தினுடாக பெனால்டி எல்லைக்குள் வழங்கினார். பந்தை பெற்ற பேய்ல் பந்தை தரைவழியாக பெனால்டி எல்லையிலிருந்த ரொனால்டோவிற்கு வழங்க, ரொனால்டோ சிறந்த முறையில் பந்தை கோலை நோக்கி உதைந்து ரியல் மெட்ரிட் அணிக்கு 2 ஆவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்
அதனை தொடர்ந்து 3 நிமடங்களின் பின்னர் கஸ்ட்ரோ (Castro) மூலம் மத்திய களத்தின் இடதுபக்கத்திலிருந்து ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லையின் இடதுபக்கத்திற்கு வழங்கப்பட்ட பந்தை அபயர்ம்ன்பர்க் கோலாக்கினார். 60 ஆவது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை கஸ்ட்ரோ தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள தவறியதால் டோர்ட்மன்ட் அணியின் சிறந்ததொரு வாய்ப்பு தவறவிடப்பட்டது.
அதனைத் தெடார்ந்து கோட்ஸே மூலம் மீண்டும் ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லையின் இடதுபக்க மூலைக்கு வழங்கப்பட்ட பந்தை அபயர்ன்ம்பர்க் பெற்றபோதும், அதனை கோலாக்கும் முயற்சியில் தோல்வியுற்றார். போட்டி எதிரணியின் பக்கம் செல்வதை உணர்ந்த ரியல் மெட்ரிட் அணிக்கு போட்டியின் 75 ஆவது நிமிடத்தில் ஈஸ்கோ மூலம் சற்று ஆறுதலளிக்கப்பட்டது. சிறந்த முறையில் பின்கள வீரர்களை தாண்டிச் சென்ற ஈஸ்கோ, பெனால்டி எல்லையில் கோல் கம்பத்தின் வலதுபக்க மூலையுடாக பந்தை கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்தானது கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.
போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் மூலம் ரியல் மெட்ரிட் அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. மொட்ரீக் (Luka Modric) மூலம் வலதுபக்கத்தினுடான பெனால்டி எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை பெற்ற ரொனால்டோ, பந்தை பெனால்டி எல்லை வரை கொண்டு சென்று சிறந்த முறையில் கோலாக்கினார். இதன் மூலம் ரொனால்டோ இப்போட்டியில் இரு கோல்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார். மீண்டும் முயற்சியெடுத்த டோர்டமனட் அணிக்கு, 82 ஆவது நிமிடத்தில் அபயர்ன்ம்பர்க் தலையால் முட்டி ஓரு கோலைப் பெற முயன்ற போதும் கோல் காப்பாளரால் பந்து தடுக்கப்பட்டது. அதுவே இறுதி முயற்சியாகவும் அமைந்தது. மூன்று நிமிட மேலதிக நேரத்துடன் போட்டி நடுவரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
முழு நேரம்: ரியல் மெட்ரிட் 3 – 1 டோர்ட்மன்ட்
இவ்வெற்றியின் மூலம் ரியல் மெட்ரிட் அணி டோர்ட்மன்ட் அணியின் அரங்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது மட்டுமின்றி, அவ்வணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ தனது அணிக்காக விளையாடிய 400 ஆவது போட்டியும் இதுவாகும் அத்துடன் 400 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ மொத்தம் 411 கோல்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் சில போட்டி முடிவுகள்
செவில்லா 3 – 0 மரீபூர் (Maribor)
நெபோலீ 3 – 1 பெயனூர்ட் (Feyenoord)
பெஸிக்டாஸ் 2 – 0 லிப்ஸீக்
மென்செஸ்டர் சிடி 2 – 0 ஸக்தார் டோனெடேஸ்க் (Shakhtar Donetsk)
போர்டோ 3 – 0 மோனோகோ
லிவர்பூல் 1 – 1 ஸ்பார்டக் மொஸ்க்வா (Spartak Moskva)
டொடென்ஹாம் 3 – 0 அபோயில் (Apoel Nicosia)