விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 43ஆவது தேசிய விளையாட்டு விழா நேற்று (22) பிற்பகல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் மாத்தறை கொட்டவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.
தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் 5ஆவது தடவையாக தென் மாகாணத்தில் நடைபெறுவதுடன், 3ஆவது தடவையாக மாத்தறையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 750 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து தேசிய விளையாட்டு விழாவின் சம்பிரதாயங்களான வீரர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளின் மரியாதை அணி வகுப்பு முதலில் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து 7 மரியாதை வேட்டுக்களும் போட்டப்பட்டன.
இந்நிலையில், 43ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் தீபத்தை தெற்காசிய மற்றும் ஆசிய போட்டிகளில் 100 மற்றும் நீளம் பாய்தலில் தங்கப்பதக்கங்களை வென்ற தென் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரரான ஏ. பிரேமசந்திர சுஜித் ரோஹித மற்றும் 800 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஓட்டப்பந்தயங்களின் முன்னாள் தேசிய சாதனையாளருமான தம்மிகா மெனிகே ஆகியோரால் ஏற்றிவைக்கப்பட்டது.
இதனையடுத்து விருந்தினர்களின் சிறப்பு உரைகளுடன் 43ஆவது தேசிய விளையாட்டு விழா ஆரம்பமானது.
தேசிய விளையாட்டு பெருவிழாவில் 200 வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர்கள்
அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின் பங்குபற்றலுடன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை 14 போட்டிகள் நடைபெற்றதுடன் இதில் 6 தகுதிகாண் போட்டிகளும், 2 அரையிறுதிப் போட்டிகளும், 6 இறுதிப் போட்டிகளும் நடைபெற்றன.
அனித்தாவினால் முதல் தேசிய சாதனை
போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜகதீஸ்வரன் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்து, இவ்வருடத்தில் தொடர்ச்சியாக 4ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.
போட்டிகளின் ஆரம்பத்தில் 3.42 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து 2016ஆம் ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட (3.41 மீற்றர்) போட்டி சாதனையை முறியடித்த அனித்தா, 2ஆவது முயற்சியாக 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய தேசிய சாதனை படைத்தார். எனினும் 3.50 மீற்றருக்காக அவர் மேற்கொண்ட முயற்சி மைதானத்தில் தீடீரென பெய்த மழையால் தடைப்பட்டது. எனினும் அதன்பிறகு அவரால் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
இதன்படி, கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் தேசிய சாதனை படைத்த அனித்தா, இவ்வருடமும் போட்டிகளின் முதல் நாளில் தேசிய சாதனை படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப்போட்டியில், கிழக்கு மகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஏ.ஏ. கருணாவன்ச, 3.10 மீற்றர் உயரம் தாவி 2ஆவது இடத்தையும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த கே.எஸ். பேரேரா 3.00 மீற்றர் உயரம் தாவி 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
மொஹமட் ஆஷிக்கினால் கிழக்கிற்கு முதல் தங்கம்
43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளில் கிழக்கு மாகாணத்திற்கு முதலாவது தங்கப் பதக்கத்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த Z.T.M. ஆஷிக் பெற்றுக்கொடுத்தார். இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் கலந்துகொண்ட ஆஷிக், 42.97 மீற்றர் தூரம் எறிந்து தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்றார்.
கடந்த 10 வருடங்களாக தேசிய மெய்வல்லுனர் அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற அம்பாறை மாவட்டம் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட Z.T.M. ஆஷிக், இம்மாத முற்பகுதியில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 42.48 மீற்றர் தூரம் எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் இலங்கைக்கு முதல் பதக்கம்
இந்நிலையில், இப்போட்டியில் 2ஆவது இடத்தை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தனுஷ்க பண்டார ரத்னாயக்க (41.68 மீற்றர்) பெற்றுக்கொண்டதுடன், 3ஆவது இடத்தை தென் மாகாணத்தைச் சேர்ந்த எம். சுணந்த நிரோஷன் (41.21 மீற்றர்) பெற்றுக்கொண்டார்.
200 மீற்றரில் பாஸிலுக்கு வெற்றி
ஆண்களுக்கான 200 மீற்றர் தகுதிகாண் ஓட்டப்பந்தயத்தில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பாஸில் உடையார், போட்டி தூரத்தை 22.21 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இதன்படி நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தெரிவானார்.
முன்னதாக தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 200 மீற்றரில் கலந்துகொண்ட பாஸில் உடையார் போட்டித் தூரத்தை 21.99 செக்கன்களில் நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு ஏமாற்றம்
ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஏ.எம்.என் சப்ரின் அஹமட் 14.92 மீற்றர் தூரம் பாய்ந்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 15.96 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தை வென்ற அவர், இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் காலில் ஏற்பட்ட உபாதையுடன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லயனெல், நிலானி மற்றும் தாரிக்காவுக்கு வெற்றி
ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக 7ஆவது தடவையாக மத்திய மாகாணத்தைச் சேர்ந்த லயனல் சமரஜீவ தங்கப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டித் தூரத்தை 31 நிமிடங்கள் 14.22 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த நிலானி ரத்னாயக்க தங்கப்பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டித் தூரத்தை 17 நிமிடங்கள் 09.06 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான குண்டு எறிதலில் 14.52 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்திய மேல் மாகாணத்தைச் சேர்ந்த தாரிக்கா பெர்ணான்டோ, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் 14.35 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று 26 மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மெய்வல்லுனர் நட்சத்திரங்களான மிப்ரான், அஷ்ரப், ராஜாஸ்கான் பாஸில் உடையார், ஆஷிக் மற்றும் வொஷிம் இல்ஹாம் ஆகிய வீரர்கள் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.