துர்க்மெனிஸ்தானின் தலைநகர் அஸ்கபாத் நகரில் இடம்பெற்று வருகின்ற ஐந்தாவது ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டு விழாவின் 3ஆவது நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 800 மீற்றரில் புதிய தேசிய சாதனையுடன் இந்துனில் ஹேரத் வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான உயரம் பாய்தலில் மஞ்சுள குமார வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்தனர்.
பெண்களுக்கான 800 மீற்றரில் தேசிய சாதனைக்கு உரிமை கோரும் 30 வயதான கயந்திகா அபேரத்ன, போட்டித் தூரத்தை 2 நிமிடம் 05.12 செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்ததுடன், ஆசிய உள்ளக மெய்வல்லுனர் வரலாற்றில் இலங்கை முதலாவது தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டது.
முன்னதாக திங்கட்கிழமை (18) நடைபெற்ற தகுதிகாண் போட்டியை 2 நிமிடம் 12.93 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் இலங்கைக்கு முதல் பதக்கம்
இந்நிலையில் 2 நிமிடம் 07.65 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த சீன வீராங்கனையான ஷாங் குய்பிங்க் வெள்ளிப் பதக்கத்தையும், 2 நிமிடம் 09.97 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த கிரிகிஸ்தான் வீராங்கனையான க்ளெஸ் சுக்கோவா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்துனில்லின் 3ஆவது தேசிய சாதனை
ஆண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்துனில் ஹேரத், 3 ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அவர் குறித்த போட்டித் தூரத்தை ஒரு நிமிடம் 49.45 செக்கன்களில் நிறைவு செய்து புதிய உள்ளக தேசிய சாதனை படைத்தார்.
எனினும் முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஒரு நிமிடம் 50.91 செக்கன்களில் நிறைவு செய்து தேசிய சாதனை படைத்த இந்துனில், தகுதிகாண் போட்டியில் ஒரு நிமிடம் 53.79 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் கட்டாரின் ஹய்ரானி ஜமால் (ஒரு நிமிடம் 49.33 செக்கன்கள்) முதலிடத்தையும், ஈரானின் மொராதி அமிர் (ஒரு நிமிடம் 49.51 செக்கன்கள்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மஞ்சுளவுக்கு வெண்கலப்பதக்கம்
இலங்கை அணிக்காக கடந்த பல வருடங்களாக சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த உயரம் பாய்தல் வீரரான மஞ்சுள குமார, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.21 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இப்போட்டியின் முதல் முயற்சியில் 2.10 மீற்றர் உயரத்தைத் தாவிய மஞ்சுள, அதனைத் தொடர்ந்து 2.14, 2.18, 2.21 மீற்றர் உயரங்களைத் தாவி இறுதி 3 இடங்களுக்கான சுற்றுக்குத் தெரிவானார். எனினும் 2.24 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் நிறைவடைய இறுதியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இப்போட்டியில் சிரியாவின் கஸால் மஜித் எதின் (2.26 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், ஈரானின் கன்ஸ்பார் சதிஹ் கிவ்யான் (2.26 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
முன்னதாக நேற்று (19) நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட அமில ஜயசிறி, 7.45 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு முதலாவது பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.
எனினும், பெண்களுக்கான முப்பாய்ச்சலில் கலந்துகொண்ட விதூஷா லக்ஷானி நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 12.51 மீற்றர் தூரம் பாய்ந்து 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிமாஷ ஏஷான், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 60 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் 4ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.
இதன்படி, ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுனர் போட்டிகளுக்காக 6 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டதுடன், இதில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை இலங்கை பெற்றுக்கொண்டதுடன், உள்ளக மெய்வல்லுனர் போட்டிகளுக்கான பதக்கப்பட்டியலில் இலங்கை 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இதில் கஸகஸ்தான முதலிடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும், சவூதி அரேபியா 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பளு தூக்கல், குத்துச்சண்டை, டைக்கொண்டோ மற்றும் செஸ் போட்டிகளில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட எந்தவொரு வீரரும் வெற்றி பெறவில்லை.
துர்க்மெனிஸ்தானுக்கு முதலிடம்
45 ஆசிய நாடுகள் உள்ளடங்கலாக 65 ஆசிய, பசுபிக் நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,000 வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளும் இம்முறைப் போட்டித் தொடரின் 3ஆம் நாள் நிறைவில் பதக்கப்பட்டியலில் 53 தங்கப் பதக்கங்களை வென்ற துர்க்மெனிஸ்தான் முதலிடத்தையும், 10 தங்கப் பதக்கங்களை வென்ற ஈரான் 2 ஆவது இடத்தையும், 7 தங்கப் பதக்கங்களை வென்ற உஸ்பகிஸ்தான் 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இதேவேளை ஒரேயொரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கை 18 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில், 5 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா 8 ஆவது இடத்திலும், ஒரேயொரு தங்கம் வென்ற பாகிஸ்தான் 15 ஆவது இடத்திலும், ஒரேயொரு தங்கம் வென்ற ஆப்கானிஸ்தான் 20 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.