ஐக்கிய அரபு இராட்சியத்தின் அபு தாபி நகரில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற பயிற்சிகளின்போது மெதிவ்சின் கால் தசையில் சிறு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே கடந்த சில காலமாக தொடர் உபாதைகளின் காணரமாக பல போட்டிகளில் இருந்து விலகியிருந்த மெதிவ்ஸ் பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியிலும் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
2019 உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெற்ற இலங்கை அணி
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட்…
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரும், தெரிவுக் குழு உறுப்பினருமான அசங்க குருசிங்க ThePapare.com இடம் கருத்து தெரிவிக்கையில், ” மெதிவ்சின் கால் தசையில் சிறு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த அவரது மருத்துவ அறிக்கை எமக்கு கிடைத்ததும் மெதிவ்ஸ் குறித்த இறுதித் தீர்மானத்தை நாம் எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
இறுதியாக இடம்பெற்ற இந்திய அணியுடனான முத்தரப்புத் தொடரின் டெஸ்ட் தொடரில், 6 இன்னிங்ஸ்களிலும் விளையாடிய மெதிவ்ஸ் மொத்தமாக 162 ஓட்டங்களையே பெற்றார். எனினும், அதன் பிறகு இடம்பெற்ற 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் சிறந்த முறையில் செயற்பட்ட அவர் 2 அரைச் சதங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக நியமிக்கப்பட்ட க்ரஹம் லப்ரோய் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு, பாகிஸ்தான் தொடருக்கான டெஸ்ட் குழாத்தை நாளை (21ஆம் திகதி) அறிவிக்கும். அதனைத் தொடர்ந்து இலங்கை அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு இராட்சியம் நோக்கிப் புறப்படும்.