டான் கிண்ண சம்பியனாக முடிசூடிய சீலாமுனை யங் ஸ்டார்

323

டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் அனுசரனையோடு மட்டக்களப்பு மாவட்ட கால்பந்து சங்கம் நடாத்தும் பிரிவு A அணிகளுக்கு இடையிலான “டான் கிண்ண” கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சீலாமுனை யங் ஸ்டா‌ர் விளையாட்டுக் கழகம் கடல் மீன்கள் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு சம்பியனாக மாறியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த இந்த கால்பந்து தொடரில் விலகல் முறையின் மூலம் (Knockout) அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் அதில் கோல்ட் பிஷ் விளையாட்டுக் கழகத்தையும், கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம் சிவனந்தா விளையாட்டுக் கழகத்தையும் வீழ்த்தி தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

பெனால்டி மூலம் டான் கிண்ண இறுதிப் போட்டிக்கு நுழைந்த கடல் மீன்கள்

மட்டக்களப்பு கால்பந்தாட்ட சங்கம் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின்…

பலத்த ரசிகர்கள் மத்தியில் சம்பியனாக மாறப்போகும் அணி யார்? என்ற கேள்வியோடு இறுதி ஆட்டம் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் பிரீ கிக் உதைகள் மூலமும், கோர்னர் வாய்ப்புக்கள் மூலமும் கோல் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகம் ஏற்படுத்திக்கொண்டது.

இவ்வாறாக ஆட்டத்தின் ஆதிக்கத்தை மெதுவாக யங் ஸ்டார் தமதாக்கி கொண்டிருந்த தருணத்தில் கடல் மீன்களின் வீரர் A. ஆனந்த் தனியொருவராக பந்தை கொண்டு சென்று முதல் கோலைப் பெறும் முயற்சியில் இறங்கியிருந்தார். ஆனந்தினால் உதையப்பட்ட பந்து கம்பத்தில்பட்டு வெளியேறியது.

கடல் மீன்கள் போன்று யங் ஸ்டார் வீரர் சுதாகரன் ஜனுபனும் நீண்ட தூரத்தில் இருந்து கோலொன்றைப் பெற முயற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தார் எனினும் அம்முயற்சி வீணாகியிருந்தது.

தொடர்ந்த நிமிடங்களில் யங் ஸ்டார் வீரர்களுக்கு மீண்டும் அதிக வாய்ப்புக்கள் கிட்டியது எனினும் தங்களுக்கு கிடைத்த அவ்வாய்ப்புக்களை பயன்படுத்துவதில் அவர்கள் தவறியிடிருந்தனர்.  

இரண்டு அணிகளும் கோலொன்றை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அனைத்தையும் பறிகொடுத்த நிலையில் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 0 – 0 கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம்

இரு அணிகளும் தீர்மானமிக்க இறுதிப்போட்டியில் கோல்களை முதற் பாதியில் பெற்றிருக்காத காரணத்தினால் இரண்டாம் பாதியில் வீரர்கள் அதிக உற்சாகத்துடன் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதனால் இரு அணி வீரர்களும் பந்தை மிகவும் வேகமாக கையாண்டியிருந்தனர்.

போட்டியின் முதல் கோலை இரண்டாம் பாதி ஆரம்பித்து 10 நிமிடங்களில்  அபாரமாக செயற்பட்ட இளம் வீரர் ஜனுபன் யங் ஸ்டார் அணிக்காக பெற்றிருந்தார்.

விமானப்படை, சௌண்டர்ஸ் கழகங்களுக்கு இடையிலான போட்டி சமநிலையில்

இதனையடுத்து இரண்டு அணிகளும் சமபலத்தை வெளிக்காட்டியிருந்தன. அத்தோடு இரண்டாம் பாதியில் பந்தும் நீண்ட நேரத்திற்கு மைதானத்தின் மத்திய பகுதியில் பரிமாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

போட்டியை சமநிலைப்படுத்த கடல்மீன் விளையாட்டுக் கழகம் பெரிதும் முயற்சி செய்திருந்தது. எனினும், அதற்கு யங் ஸ்டாரின் பின்கள வீரர்கள் தடையாக அமைந்தனர்.  

இவ்வாறாக போட்டியை இறுதிவரை கடல் மீன்களின் வீரர்களால் சமநிலைப்படுத்த முடியாத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான பிரிவு A  கால்பந்து சம்பியன்களாக சீலாமுனை யங் ஸ்டா‌ர் விளையாட்டுக் கழகம் முடி சூடிக்கொண்டது.

முழு நேரம்: யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1 – 0  கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – சுதாகரன் ஜனுபன் (சீலாமுனை யங் ஸ்டா‌ர் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – சுதாகரன் ஜனுபன் 55’

இத்தொடரின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு வெற்றிக் கிண்ணமும் ரூபா. 200,000 பெறுமதியான பணப் பரிசும் வழங்கப்பட்டது. அதேபோன்று தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கடல் மீன்கள் விளையாட்டுக் கழகத்திற்கு கிண்ணத்தோடு ரூபா. 100,000 பணப் பரிசும் வழங்கப்பட்டது.

இத்தொடருக்கு அனுசரனை வழங்கிய டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் இறுதிப் போட்டியின் பின்னர் பேசிய பொழுது, “இவ்வாறான தொடர்கள் மூலமும் வடக்கு, கிழக்கு விளையாட்டு வீரர்கள்  தொழில் முறையில் கால்பந்து பயன்தரும் என்பதை உணர வேண்டும்“  என குறிப்பிட்டதோடு இவ்வாறான தொடர்களில் பங்கேற்பவர்கள் தேசிய அணியில் சென்று சாதிக்கவும் தனது வாழ்த்துக்களை வழங்கியிருந்தார்.