ஐந்தாவது தடவையாக நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில், இலங்கையிலிருந்து 9 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படுகின்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை மிர்பூர் மற்றும் சிட்டகொங் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் டாக்கா டைனமைட்ஸ், ராங்பூர் ரைடர்ஸ், கொமிலா விக்டோரியன்ஸ், சிட்டகொங் வைகிங்ஸ், சில்லெட் சிக்ஸ்செர்ஸ், ராஜ்ஷாஹி கிங்ஸ், குல்னா டைடன்ஸ் ஆகிய 7 அணிகள் பங்குபற்றவுள்ளன.
இதில் டாக்கா டைனமைட்ஸ் அணி 3 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், டாக்கா கிளெடியேட்டர்ஸ் 2 தடவைகளும், கொமிலா விக்டோரியன்ஸ் ஒரு தடவையும் இத்தொடரில் சம்பியனாகத் தெரிவாகியது.
இந்நிலையில், A முதல் F வரையிலான குழுக்களாகப் பிரிக்கப்பட்ட வீரர்களுக்கான ஏலம் 70 ஆயிரம் அமெரிக்க டொலரிலிருந்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை இடம்பெற்றது.
112 உள்ளூர் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் பங்கெடுத்திருந்த வீரர்கள் ஏலம் இன்று (16) டாக்காவில் இடம்பெற்றது. இம்முறை ஏலத்தில் இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் சார்பாக வீரர்கள் இடம்பெற்றிருந்த போதிலும், இங்கிலாந்திலிருந்து அதிகளவான வீரர்கள் (62 வீரர்கள்) ஏலத்தில் போட்டியிட்டதுடன், இலங்கையிலிருந்து 28 வீரர்களும், பாகிஸ்தானிலிருந்து 46 வீரர்களும் ஏலத்தில் இடம்பெற்றனர்.
இதன் முதல் சுற்றில் ஒவ்வொரு அணிகளுக்கும் 7 உள்ளூர் வீரர்களையும் 2 வெளிநாட்டு வீரர்களையும் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி A பிரிவில் இடம்பெற்றிருந்த ஒரேயொரு வீரரான முஷ்தபிசூர் ரஹ்மானை 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு ராஜ்ஷாஹி கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
சங்காவின் அணியிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்
குமார் சங்கக்கார அங்கம் வகிக்கும் நடப்புச் சம்பியனான டாக்கா டைனமைட்ஸ் அணியில் விளையாடுவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான, நிரோஷன் திக்வெல்ல மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான அசேல குணரத்ன ஆகியோர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். நிரோஷன் திக்வெல்ல தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அசேல குணரத்ன உபாதை காரணமாகவும் விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனினும், சகீப் அல் ஹசன் தலைமையிலான டாக்கா டைனமைட்ஸ் அணியில் சங்கக்காரவுடன், சஹீட் அப்ரிடி, ஷேன் வொட்சன், சுனீல் நரேன், மொஹமட் அமீர், எவின் லுவிஸ் மற்றும் ரோவ்மன் பவல் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹேலவின் அணியில் இரு இலங்கை வீரர்கள்
2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு சர்வதேச அரங்கிலிருந்து விடைபெற்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ள குல்னா டைடன்ஸ் அணியில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
27 வயதான சீக்குகே பிரசன்ன, முன்னதாக நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர்களில் பரிசால் புல்ஸ் மற்றும் டாக்கா டைனமைட்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியிருந்ததுடன், இம்முறை மஹேலவின் அணியில் விளையாடவுள்ளார். அத்துடன் இலங்கை அணியின் மற்றுமொரு சகலதுறை வீரரான 26 வயதுடைய ஷெஹான் ஜயசூரிய, கடந்த வருடம் சிட்டகொங் வைகிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்த நிலையில், தற்போது குல்னா டைடன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரெட்புல் பல்கலைக்கழக உலகக் கிண்ணத்தினைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா
நடப்புச் சம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி 2௦17ம் ஆண்டுக்கான ரெட்புல்..
மஹ்முதுல்லாவின் தலைமையிலான இவ்வணியில் பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட், மேற்கிந்திய தீவுகள் அணியின் டி20 அணித் தலைவர் சார்லஸ் பரத்வெய்ட், ஜுனைத் கான், சதாப் கான், டேவிட் மாலன் மற்றும் கைல் அபோட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராங்பூர் அணியில் குசல் மற்றும் திசர
மஷ்ரபி முர்தசா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணியில் இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா மற்றும் சகலதுறை வீரரான திசர பெரேரா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் நிறைவடைந்த சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின்போது தசைப்பிடிப்புக்கு உள்ளாகி குறித்த போட்டித் தொடரிலிருந்து வெளியேறி தற்போது ஓய்விலிருக்கும் குசல் பெரேரா, இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்றாலும், அவ்வணியுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக ஐ.பி.எல் தொடரில் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட குசல் பெரேரா, தற்போது BPL தொடரில் முதற்தடவையாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெறுகின்ற டி20 போட்டிகளில் விளையாடி வருகின்ற திஸர பெரேரா, முதற் தடவையாக பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடவுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடத்தைப் போல இவ்வருடமும் ராங்பூர் ரைடர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், சாமுவேல் பத்ரி, ஜொன்சன் சார்லஸ் மற்றும் இங்கிலாந்தின் ரவி போபரா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிட்டகொங் அணிக்கு ஜீவன் மற்றும் டில்ஷான் முனவீர
இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான ஜீவன் மெண்டிஸும், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டில்ஷான் முனவீரவும் சிட்டகொங் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்பருவகாலத்துக்காக இங்கிலாந்தின் டேர்பிஷயார் அணிக்காக தற்போது விளையாடி வருகின்ற 34 வயதாக ஜீவன் மெண்டிஸ், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற டி20 லீக் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். இதில் டெல்லி டெயார்டெவில்ஸ், பார்படோஸ் ட்ரினிடாட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் ஆகிய அணிக்களுக்காக விளையாடியுள்ள இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவராகவும் அவர் விளங்குகிறார்.
எனினும், எதிர்வரும் நவம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இடம்பெற்றுள்ள ஸ்டெலன்போஸ்ச் மொனாச் அணிக்கு ஜீவன் மெண்டிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அவர் பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் பங்கேற்பாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் டி20 ஸ்பெஷல் என்று அழைக்கப்படுகின்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 28 வயதுடைய டில்ஷான் முனவீர, இம்முறை சிட்டகொங் வைகன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பரிஸால் புல்ஸ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில்லெட் சிக்ஸர்ஸ் அணியில் இடம்பெற்ற டி சில்வா சகோதரர்கள்
இலங்கை அணியில் அண்மைக்காலமாக சகலதுறை வீரர்களாக சிறப்பாக விளையாடி வருகின்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதுரங்க டி சில்வா மற்றும் வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் இவ்வருடம் முதல் புதிதாக இணைந்துகொண்டுள்ள சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்காக முதற் தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
27 வயதான சதுரங்க டி சில்வா, கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் குல்னா டைடன்ஸ் அணிக்காக விளையாடியிருந்த போதிலும், இம்முறை சிட்டகொங் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவரது சகோதரரான 20 வயதுடைய வனிந்து ஹசரங்க, கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருந்தார். எனினும் இதுவரை எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடாத அவர், முதற் தடவையாக வெளிநாட்டு அணியொன்றுக்காக விளையாடவுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அணியின் மற்றுமொரு அதிரடி ஆட்டக்காரராக அண்மைக்காலமாக ஜொலித்துக் கொண்டிருக்கின்ற 26 வயதான தசுன் சானக்கவும் சில்லெட் சிக்ஸர்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொமிலா அணிக்கு மெதிவ்ஸ் ஒப்பந்தம்
ஐ.பி.எல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வொரியர்ஸ் மற்றும் டெல்லி டெயார் டெவில்ஸ் அணிகளுக்காக மாத்திரம் விளையாடி வந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான அஞ்செலோ மெதிவ்ஸ் முதற்தடவையாக பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை 69 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 30 வயதான மெதிவ்ஸ், 5 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 1054 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
தமீம் இக்பால் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர்களான சொஹைப் மலிக், பக்கர் சமான், ரும்மான் ரயீஸ் கான் மற்றும் ஹசன் அலியும், இங்கிலாந்து அணியின் ஜொஸ் பட்லர், நியூசிலாந்தின் கொலின் முன்ரோ, மேற்கிந்திய தீவுகள் அணியின் மார்லன் சாமுவேல்ஸ், டெரன் பிராவோ, ஆப்கானிஸ்தானின் ராஷித் கான் மற்றும் மொஹமட் நபி ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.