பாடசாலை மட்ட கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தேசிய மட்டத்திற்கு சிறந்த வீரர்களை உருவாக்கும் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பூரண ஒத்துழைப்புடன் 11ஆவது தடவையாக நடைபெறவுள்ள 15 வயதிற்குட்பட்ட பிரிமா கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மாகாண மட்டப் போட்டிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.
தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் பயணத்தில் கால் பதித்துள்ள வடக்கின் கிரிக்கெட் நட்சத்திரங்கள்
இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 600இற்கும் அதிகமான பாடசாலை வீரர்களின் பங்குபற்றலுடன் 39 மாவட்ட மட்ட அணிகளின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகிய இம்முறைப் போட்டித் தொடரின், மாவட்ட மட்டப் போட்டிகள் அனைத்தும் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், அப்போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய 12 அணிகள் மோதும் மாகாண மட்டப் போட்டிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளன.
இதில் கடந்த முறையைப் போல வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிதிநிதித்துவப்படுத்தி அணிகள் களமிறங்கவுள்ளதுடன், வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து இம்முறை 5 அணிகள் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2 பிரிவுகளாக நடைபெறவுள்ள மாகாண மட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டுக்கு அண்மைக்காலமாக பல நட்சத்திர வீரர்களை பெற்றுக்கொடுத்த இத்தொடரின் மூலம் இலங்கை தேசிய அணிக்குள் இடம்பெற்று குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, பினுர பெர்ணான்டோ ஆகிய வீரர்கள் தற்போது விளையாடி வருவதுடன், இலங்கை 19 வயதிற்குட்பட்ட தேசிய அணியில் சதீர சமரவிக்ரம, அனுக் பெர்ணாந்து மற்றும் பிரியமால் பெரேரா ஆகிய வீரர்களும் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், பிரிமா நிறுவன அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
திசரவின் அபாரத்தால் த்ரில் வெற்றியை சுவைத்த உலக பதினொருவர் அணி
இப்போட்டித் தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் கே.மதிவாணன் கருத்து வெளியிடுகையில், ”இலங்கை கிரிக்கெட் எதிர்காலத்துக்கு சிறந்த வீரர்களை உருவாக்குவதே எமது நோக்கமாகும். இதன்படி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பங்களிப்புடன் 15 வயதிற்குட்பட்ட பாடசாலை வீரர்களுக்கான பிரிமா கிண்ண கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் இத்தொடர் மூலம் பல நட்சத்திர வீரர்களை அடையாளம் காணமுடிந்தது. எனவே கடந்த 10 வருடங்களாக பிரிமா நிறுவனம் இத்தொடரை சிறப்பாக நடத்த முன்வந்தமை தொடர்பில் முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதேவளை, இப்போட்டித் தொடரில் பங்குபற்றவுள்ள வட மாகாண அணியின் உப தலைவரும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனுமான டெனிசியஸ் இப்போட்டித் தொடர் குறித்து ThePapare.com இணையத்தளத்துக்கு கருத்து வெளியிடுகையில், ”நான் சிறு வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகின்றேன். பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய காரணத்தால் தற்போது 15 வயதிற்குட்பட்ட பிரிமா கிண்ணத் தொடரில் வட மாகாண அணியில் இடம்பெற்றுள்ளேன்.எனவே அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ள மாகாண மட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி எதிர்காலத்தில் தேசிய அணியில் இடம்பெறுவதே எனது எதிர்பார்ப்பாகும்” என தெரிவித்தார்.