லாலிகா தொடரில் முன்னிலை வகிக்கும் பார்சிலோனா

313
LaLiga Third Matches

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் பின்னரான லாலிகா சுற்றுப் போட்டிகளின் மூன்றாம் கட்டப்போட்டிகள் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெற்றது. போட்டியின் முடிவில் பார்சிலோனா கழகம் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுக் கொண்டது. பல அணிகளின் எதிர்பாராத போட்டி முடிவுகள் ஆதரவாளர்களை மகிழ்ச்சியிலும் அதேபோல் அதிருப்தியிலும் ஆளாக்கியுள்ளது.

உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் பின்னரான ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப்போட்டிகள் 9ஆம் திகதி ஆரம்பமாகியது. ஓருவார கால இடைவெளியின் பின்னர் ஆதரவாளர்கள் தமது அணியின் வீரர்களை உற்சாகப்படுத்த திரள் திரளாக மைதானத்திற்கு சமூகமளித்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போல் போட்டிகளும் மிகவும் சூடுபிடித்தே காணப்பட்டன. எது எவ்வாறாயினும் கால்பந்து ரசிகர்களுக்கு இவ்வாரப் போட்டிகள் சிறந்த விருந்தாகவே அமைந்தன. அத்துடன் இவ்வாரம் அனைத்து அணிகளும் மோதும் மூன்றாவது போட்டியாகும்.

நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலுமே அனைத்து போட்டிகளையும் வெற்றி பெற்ற அணியாக பார்சிலோனா மற்றும் ரியல் சொசிடட் கழகங்கள் திகழ்கின்றன.

இவ்வாரம் முதற்கட்ட போட்டிகளாக 9ஆம் திகதி நடைபெற்ற போட்டிகளைக் குறிப்பிடலாம். கெடாபே கால்பந்து கழகம் (Getafe CF), இவ்வாரம் லெகனாஸ் கழகத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இப்பருவகாலத்திற்கான லாலிகா சுற்றின் முதல் வெற்றியை பதிவு செய்தது. கெடாபே அணிக்காக மோரோ அரம்பர்ரீ (Mauro Arambarri) 39ஆவது நிமிடத்திலும் மற்றும் அல்வாரோ (Álvaro Jiménez) 83ஆவது நிமிடத்திலும் கோல்களை பெற்றுக் கொடுத்தனர். அதேபோல் லெகனாஸ் அணிக்காக மீகுவெல் குரேரா (Miguel Ángel Guerrero) 65ஆவது நிமிடத்தில் ஓரு கோலை பெற்றார். இதில் முக்கிய விடயம் யாதெனில் லெகனாஸ் அணிக்கு போட்டியின் 72ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மீகுவெல் குரேரா கோலாக்க முயன்றபோது அதனை கெடாபே அணியின் கோல் காப்பாளர் சிறந்த முறையில் தடுத்து வெற்றிக்றகு வழி வகுத்தார்.

அதேதினம் நடைபெற்ற றியல் மட்றிட் மற்றும் லெவன்டே (Levante) கழகங்கள் மோதிய போட்டியின் முடிவால் றியல் மட்றிட் கழக ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். றியல் மட்றிட் கழகத்தின் மைதானமான பர்னாபீயூவில் (Santiago Bernabéu) நடைபெற்ற இப்போட்டியில் றியல் மட்றிட் கழகத்தால் வெற்றியீட்ட முடியவில்லை. அத்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வெற்றி தோல்வியின்றி சமநிலையிலேயே நிறைவு செய்தனர். மேலும் தொடர்ந்து இரு போட்டிகளையும் சமநிலையில் நிறைவு செய்த றியல் மட்றிட் அணியின் முக்கிய வீரர்கள் போட்டியை ஆரம்பிக்காததும், றியல் மட்றிட் அணியின் இரண்டாவது தலைவர் மார்சலோவிற்கு போட்டியின் 89ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட சிவப்பு அட்டை மூலமும் ஆதரவாளர்கள் அதிருப்தியிலுள்ளனர். லெவான்டே கழகத்திற்காக லோபெஸ் (López Álvarez) 12ஆவது நிமிடத்திலும் றியல் மட்றிட் கழகத்திற்காக லுகாஸ் வாஸ்கஸ் (Lucas Vázquez) 36ஆவது நிமிடத்திலும் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

அதிர்ச்சி முடிவுகளைக் கொடுத்த பிரீமியர் லீக்கின் இவ்வாரப் போட்டிகள்

பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியின் மூன்றாவது வாரத்திற்கான போட்டிகள்…

மேலும் வெலன்ஸியா மற்றும் அட்லடிகோ மட்றிட் கழகங்கள் மோதிய போட்டியானது இரு அணிகளும் எவ்வித கோலையும் பெறாத நிலையில் சமநிலையில் முடிவுற்றது. அன்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் செவில்லா அணி எய்பர் (Eibar) அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் ஜீரோனா கழகம் அத்லடிக் பில்பாகு (Ath. Bilbao) கழகத்திடம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியுற்றதன் மூலம் லாலிகா சுற்றுப் போட்டியில் தனது முதல் தோல்வியை சந்தித்தது. மேலும் அலவெஸ் (Alaves) மற்றுன் செல்டாவிகோ கழகங்களுக்கிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் செல்டாவிகோ கழகம் வெற்றி பெற்று இப்பருவகாலத்தின் முதல் வெற்றியை பெற்றுக்கொண்டது.

டிபோர்டிவோ மற்றும் றியல் சொசிடட் கழகங்கள் மோதிய போட்டி இறுதிவரை விறுவிறுப்பான போட்டியாகவே அமைந்தது. போட்டியின் முதல் 5 நிமிடங்களுக்குள் அசியர் இல்லரமன்டே (Asier Illarramendi) மற்றும் ஜீவான்மி ஆகியோரின் கோல்களினால் 2-0 என்ற கோல்கள் கணக்கில் றியல் சொசிடட் கழகம் முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து முதல் பாதி முடிவடைவதற்குள் டிபோர்டிவோ கழகம் சார்பாக போட்டியின் 27ஆவது நிமிடத்தில் அட்ரியன் லோபெஸ் ஓரு கோலைப் பெற்றார்.

போட்டியின் இரண்டாம் பாதியில் விரைவாக செயற்பட்ட டிபோர்டிவோ கழகம், 50ஆவது நிமிடத்தில் பொலோரின் அன்டோன் (Florin Andone) பெற்ற கோலினால் போட்டியை சமநிலைப்படுத்தியது. எனினும் போட்டியின் இறுதித்தருவாயில், 83ஆவது மற்றும் 86ஆவது நிமிடங்களின் முறையே டியோகே லோரன்டே (Diego Llorente) மற்றும் அசியர் இல்லரமன்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலை தமது அணிக்காக பெற்றதன் மூலம் றியல் சொசிடட் கழகம் 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை தமதாக்கியது.

அடுத்ததாக பார்சிலோனா மற்றும் ஸ்பான்யோல் (Espanyol) கழகங்கள் மோதிய போட்டியில் பார்சிலோனா கழகத்தின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சியின் ஹட்ரீக் கோலினால் இப்போட்டியை 5-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியீட்டியது பார்சிலோனா அணி. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணிக்காக லயனல் மெஸ்சி 26, 35 மற்றும் 67 ஆவது நிடங்களிலும் ஜெராட் பீகே 87ஆவது நிமிடத்திலும், லுயிஸ் ஸுவாரேஸ் 90ஆவது நிமிடத்திலும் கோல்களை பெற்றுக் கொடுத்தனர். பார்சிலோனா கழகத்துடன் இப்பருவகாலம் முதல் இணைந்த ஓஸ்மானே டேம்பல்லே (Ousmane Dembele) போட்டியின் 68ஆவது நிமிடத்தில் களமிறங்கினார். அத்துடன் பார்சிலோனா அணி ஒரு கோலை பெறவும் உதவி செய்தார். ஸ்பான்யோல் கழகத்திற்கு சிறந்த வாய்ப்புக்கள் கிட்டியும் அதனை சரிவர பயன்படுத்த தவறியமையால் பார்சிலோனா அணியிடம் இப்போட்டியில் தோல்வியுற்றது.

பெனால்டி மூலம் டான் கிண்ண இறுதிப் போட்டிக்கு நுழைந்த கடல் மீன்கள்

மட்டக்களப்பு கால்பந்தாட்ட சங்கம் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின்….

11ஆம் திகதியன்று நடைபெற்ற போட்டியில் றியல் பெடிஸ் (Real Betis) மற்றும் விலரல் கழகங்கள் மோதின. இப்போட்டியில் விலரல் கழகம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

மூன்றாம் கட்டப்போட்டியின் இறுதிப்போட்டியானது மலாகா மற்றும் லஸ் பல்மாஸ் (Las Palmas) கழகங்களுக்கிடயே நடைபெற்றது. இப்போட்டியில் லஸ் பல்மாஸ் கழகம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

இறுதியாக இன்றுவரை (12/09/2017) நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியல்            

நிலை அணி போட்டிகள் வெற்றி சமநிலை தோல்வி புள்ளிகள்
1 பார்சிலோனா 3 3 0 0 9
2 றியல் சொசிடட் 3 3 0 0 9
3 செவில்லா 3 2 1 0 7
4 அத். பில்பாகு 3 2 1 0 7
5 லெகனஸ் 3 2 0 1 6
6 அட். மட்றிட் 3 1 2 0 5
7 றியல் மட்றிட் 3 1 2 0 5
8 லெவன்டே 3 1 2 0 5
9 வெலன்சியா 3 1 2 0 5
10 கேடாவேய் 3 1 1 1 4
11 ஜீரோனா 3 1 1 1 4
12 செல்டாவிகோ 3 1 0 2 3
13 விலரல் 3 1 0 2 3
14 றியல் பெடிஸ் 3 1 0 2 3
15 ஏய்பர் 3 1 0 2 3
16 டிபோர்டிவோ 3 0 1 2 1
17 ஸ்பான்யல் 3 0 1 2 1
18 மலாகா 2 0 0 2 0
19 அலவஸ் 3 0 0 3 0
20 லஸ் பல்மாஸ் 2 0 0 2 0