தீவிரவாதம் என்பது இன்று முழு உலக நாடுகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற உண்மையாகும். இதில் அப்பாவி மனித உயிர்கள் எந்தளவுக்கு காவு கொள்ளப்படுகின்றதோ அதேபோல ஒரு நாட்டின் வளர்ச்சி, எதிர்காலம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் முழுமையாக அழித்துவிடுகின்ற சக்தி அந்த கொடிய தீவிரவாதத்துக்கு உண்டு. எனவே, தீவிரவாதத்துக்கு விளையாட்டுக்களும் விதிவிலக்கல்ல. அதிலும் குறிப்பாக தீவிரவாதத்தால் அண்மைக்காலமாக பெரிதும் பாதிக்கப்பட்ட விளையாட்டாக கிரிக்கெட்டை குறிப்பிடலாம். அதிலும் குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு அதிகளவு முகங்கொடுக்கும் நாடுகளாக விளங்குகின்றது.
இதில் 1996 இல் கொழும்பிலும், 2002 இல் கராச்சியிலும், 2008 இல் மும்பையிலும், 2016 இல் டாக்காவிலும், 2017 இல் காபூலிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக மாற்றிய சம்பவங்களாக அமைந்துள்ளன.
இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் வண்டி மீது தீவிரவாதிகள் தாக்குல் நடத்தினர். இதில் 7 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொது மக்கள் உயிரிழந்தனர். இதனால் சர்வதேச அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வந்தன.
கடந்த 9 வருடங்களாக பாகிஸ்தானில் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறவில்லை. அதிலும் குறிப்பாக அவ்வணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் இதுவரை தமது ரசிகர்களுக்கு முன்னால் சொந்த மண்ணில் எந்தவொரு வெற்றியையும் கொண்டாடவில்லை. மைதானங்கள் காலியாகவும், ரசிகர்களின் கைகளில் இருந்த தேசிய கொடிகள் வீடுகளிலும், ரசிகர்களின் ஆரவாரம் என்பன முடங்கிப் போயிருந்தன.
எனினும் 2 வருடங்களுக்கு முன் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. தற்போது தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை, உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குகிறோம், பாகிஸ்தான் வந்து விளையாடுங்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்திருந்தும், எந்தவொரு நாடும் பாகிஸ்தான் சென்று விளையாட முன்வரவில்லை.
இந்நிலையில், இவ்வருடம் நடைபெற்ற 2ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி டெரன் சமி, மார்லன் சாமுவேல்ஸ், டேவிட் மாலன் மற்றும் கிறிஸ் ஜோர்தான் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் பாகிஸ்தானின் லாகூரில் கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றமை உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.
அத்துடன், அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை பாகிஸ்தான் யாரும் எதிர்பாராத விதமாக வென்றது. இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும், அந்நாட்டு ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தைத் கொடுத்திருந்தது. அதனால் மீண்டும் சர்வதேச போட்டிகளை தங்களது நாட்டில் நடத்திடவிட வேண்டும் என்ற முழு மூச்சுடன் அந்நாட்டு கிரிக்கெட் சபை களமிறங்கியது.
எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சர்வதேச நாடுகளுக்கு விடுத்த அழைப்புக்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தால் அங்குள்ள பாதுகாப்பு குறித்து ஆராய ஐ.சி.சி. இன் பாதுகாப்பு குழு பாகிஸ்தான் சென்றதுடன், இந்தக்குழு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சாதகமான தகவலை அறிவித்தது.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தகுதியான எட்டு கிரிக்கெட் ஆளுமைகள்
இதனையடுத்து கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. இன் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சர்வதேச அணிகள் பாகிஸ்தான் வந்து விளையாடுவதற்கு முன்னோட்டமாக ஐ.சி.சி. உலக பதினொருவர் அணியை பாகிஸ்தான் சென்று விளையாடும் வகையில் ஐ.சி.சி அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பூரண அனுமதியுடன் உலக பதினொருவர் அணி கலந்துகொள்ளும் 3 போட்டிகளைக் கொண்ட சுதந்திரக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 12, 13 மற்றும் 15ஆம் திகதிகளில் பாகிஸ்தானின் லாகூர் கடாபி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
13 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு
குறித்த தொடரில் இந்தியாவைத் தவிர டெஸ்ட் வரம் பெற்ற 7 நாடுகளிலிருந்து 13 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.சி.சி. இனால் அறிவிக்கப்பட்டது. இதில் 6 சிறப்பு துடுப்பாட்ட வீரர்களும், 5 சகலதுறை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த உலக அணியில் இந்திய வீரர்கள் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதுடன், தென்னாபிரிக்கா சார்பாக 5 வீரர்களும், அவுஸ்திரேலியா சார்பாக இருவர், இங்கிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து சார்பாக தலா ஒவ்வொரு வீரர்களும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 நாட்களைக் கொண்ட தொடராக நடைபெறவுள்ள இதில் விளையாடவுள்ள வீரர்களுக்கு தலா ஒரு இலட்சத்து 35 ஆயிரம் அமெரிக்க டொலர்களை சம்பளமாகக் கொடுக்கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளது.
உலக பதினொருவர் அணிக்கு ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவரான அன்டி பிளவர் பயிற்சியாளராக செயற்படவுள்ளதுடன், தென்னாபிரிக்க வீரர்களான ஹஷீம் அம்லா மற்றும் பாகிஸ்தானின் லாகூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இம்ரான் தாஹிரும் ஏற்கனவே விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர்.
எனினும், இவ்வீரர்களில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் போல் கொலிங்வூட், 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில் விளையாடியதுடன், ஹஷிம் அம்லாவும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானில் விளையாடியுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்று விளையாடியிருந்த இம்ரான் தாஹிர், உயிர் அச்சுறுத்தல் காரணமாக முதலில் இங்கிலாந்துக்கும், பிறகு தென்னாபிரிக்காவுக்கும் குடிபெயர்ந்த அவர் இன்று உலகின் முன்னனி சுழற்பந்துவீச்சாளராக விளங்குகிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் விளையாட கிடைத்தமை தொடர்பில் இம்ரான் தாஹிர் கருத்து வெளியிடுகையில், ”எனது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு முன்னால் பாகிஸ்தானில் மீண்டும் விளையாடக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
இந்நிலையில், உலக பதினொருவர் அணியின் தலைவரான டூ ப்ளெசிஸ் கருத்து வெளியிடுகையில், ”பாகிஸ்தான் அணிக்கெதிரான உலக பதினொருவர் அணியின் தலைவராக செயற்படுவது குறித்து மிகவும் பெருமையடைகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பாகிஸ்தான் அணியுடன் பரபரப்பான போட்டிகளில் விளையாடியுள்ளேன். எனினும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு முன்னால் விளையாடக் கிடைத்துள்ளமை மிகவும் உணர்ச்சிகரமாக தருணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சொந்த நாட்டு ரசிகர்களுக்கு முன்னால் விளையாடுவதென்பது எவ்வளவு முக்கியம் என நான் நன்கு அறிவேன். அதேபோல பாகிஸ்தான் வீரர்களும் இதை உணரவேண்டும் என்பதே கிரிக்கெட் வீரர்களாகிய எமது எதிர்பார்ப்பாகும்” என்றார்.
அத்துடன் உலக அணியில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா பெற்றுக்கொண்டதுடன், தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், ”இம்முறை நடைபெற்ற நெட்வெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது அன்டி பிளெவர் என்னை சந்தித்து குறித்த தொடரில் பங்கேற்கும்படி கேட்டுக்கொண்டார். அவருடைய அழைப்பை கேட்டவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆனால் இத்தொடரில் பங்கேற்பது குறித்து எனது குடும்பத்தாரிடம் சொன்னது போது முதலில் அவர் பயப்பட்டார்கள். பாகிஸ்தானும் எமது அண்டை நாடு. எனவே இத்தருணத்தில் நாம் நிச்சயம் அவர்களுக்கு உதவவேண்டும் என்றேன். அதனையடுத்து 2009ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்த வீரர்களைத் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் செல்வது குறித்து கருத்துக்களை கேட்டேன். ஆனால் அவர்களும் என்னை மேலும் உற்சாகப்படுத்தி போட்டித் தொடரில் பங்கேற்கும்படி கேட்டுக் கொண்டனர். உண்மையில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி இத்தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்ற ஒரேயொரு இலங்கை வீரராக நான் மிகவும் பெருமையடைகிறேன்” என்றார்.
உலக பதினொருவர் குழாம்
பாப் டூ ப்ளெஸிஸ் (தலைவர்), ஹஷிம் அம்லா, சாமுவேல் பத்ரி, ஜோர்ஜ் பெய்லி, போல் கொலிங்வூட், பென் கட்டிங், கிரான்ட் எலியட், தமிம் இக்பால், டேவிட் மில்லர், மோர்னி மோர்க்கல், டிம் பெய்ன், திஸர பெரேரா, இம்ரான் தாஹிர், டெரன் சமி
பாகிஸ்தான் அணித் தலைவராக சர்பராஸ் அஹமட்
உலக பதினொருவர் அணிக்கெதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சிறப்பு உடல்தகுதி பரிசோதனை முகாமில் பங்குபற்றிய வீரர்கள் மற்றும் அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் இக்குழாமில் முன்னுரிமை வழங்க இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தெரிவுக்குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, சர்பராஸ் அஹமட் தலைமையிலான இவ்வணியில் உள்ளூர் போட்டியில் திறமையை வெளிக்காட்டிய பாஹிம் அஷ்ரப், ரோமன் ரஜாஸ் ஆகியோர் முதற்தடவையாக பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி விபரம்
சர்பராஸ் அஹமட் (தலைவர்), பகர் சமான், அஹமட் ஷெசாத், பாபர் அசாம், சொஹைப் மலிக், உமர் அமீன், இமாத் வசீம், சதாப் கான், மொஹமட் நவாஸ், பாஹிம் அஷ்ரப், ஹஸன் அலி, அமீர் யமீன், மொஹமட் ஆமிர், ரும்மான் ரயீஸ், உஸ்மான் சின்வாரி மற்றும் சொஹைல் கான்.
அலிம்தார் தலைமையிலான நடுவர் குழாம் அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அடையாளமாக அனைவரது வரவேற்பையும், மதிப்பையும் பெற்ற அலிம்தார் முதற்தடவையாக பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச டி20 போட்டியொன்றில் நடுவராக செயற்படவுள்ளார்.
2009 முதல் 2011 வரை ஐ.சி.சி. இன் சிறந்த நடுவராகத் தெரிவான அலிம்தார், இன்று ஆரம்பமாகவுள்ள முதலாவது டி20 போட்டியில் மாத்திரம் கள நடுவராகச் செயற்படவுள்ளார். இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பில் ஐ.சி.சி இன் நடுவர்களுக்காக நடத்தப்படுகின்ற வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளதால் நாளைய போட்டியில் மாத்திரம் அவர் நடுவராகச் செயற்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ரெட்புல் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு மற்றுமொரு இலகு வெற்றி
எனினும் இதுவரை 41 டி20 சர்வதேச போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ள அலிம்தாரும் நீண்ட இடைவெளியின் பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடுவராகச் செயற்பட கிடைத்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ”முற்றிலும் மாறுபட்ட போட்டித் தொடரில் அதுவும் பாகிஸ்தான் மண்ணில் நடுவராகச் செயற்படவுள்ளமை எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமையவுள்ளது. நடுவராக நான் இதுவரை பல்வேறு மைல்கல்லை எட்டியுள்ளேன். அதுவும் வெளிநாட்டு மண்ணில் நடுவராகச் செயற்பட்டதைவிட சொந்த மண்ணில் செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் உலக பதினொருவர் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு ஐ.சி.சி. இனால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன். இது நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் எதிர்காலத்துக்கு சிறந்த அடித்தாளமாக அமையும்” என்றார்.
இதன்படி அலிம்தாருடன், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றுமொரு ஐ.சி.சி நடுவரான அஹ்சன் ராசா களநடுவராக செயற்படவுள்ளதுடன், ஷொசாப் ராசா தொலைக்காட்சி நடுவராக கடமையாற்றவுள்ளார்.
முன்னதாக இப்போட்டித் தொடரின் ஐ.சி.சி நடுவராக மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ரிச்சி ரிச்சர்டசன் நியிமிக்கப்பட்டதுடன், அவர் 2 தினங்களுக்கு முன் பாகிஸ்தான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள உலக பதினொருவர் அணிக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து சாதகமான பதிலை வழங்கியமை இத்தொடர் நடைபெறுவதற்கு முக்கிய காரணியாகும். இதனையடுத்து அந்நாட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்ற உயர் பாதுகாப்பை வழங்குவதற்கு லாகூர் மைதானம் அமைந்துள்ள பிராந்தியமான பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனாலும், 2017 இல் மாத்திரம் சிறிய மற்றும் பெரியளவில் சுமார் 20 தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பெப்ரவரி 13ஆம் திகதி லாகூரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 2 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். அதனையடுத்து ஜுலை 24ஆம் திகதி லாகூரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டமை பாகிஸ்தானின் எதிர்பார்ப்பை மறுபடியும் தவிடுபொடியாக்கியது.
பாகிஸ்தான் மக்கள் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கின்றார்கள். விளையாட்டினால் உலகையே மாற்றமுடியும். எனவே அதை ஊக்கப்படுத்துவது எமது கடமையாகும். இனவெறி தடைகளை உடைத்து எறிவதில் அரசாங்கத்தைவிட விளையாட்டுக்குத்தான் அதிக சக்தி உண்டு என தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலா தெரிவித்திருந்ததுடன், அதை அவர் தென்னாபிரிக்காவில் நிரூபித்தும் காட்டினார். எனவே பாகிஸ்தானில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு அணிகள் இங்கு வந்து பாதுகாப்புடன் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படியும், சர்வதேச நாடுகள் எம்மை நம்பி தங்களது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கும்படியும் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஐ.சி.சி இன் 2ஆவது பாதுகாப்பு குழு இம்மாத முற்பகுதியில் பாகிஸ்தானுக்கு வருகைதந்து 2 நாட்கள் தங்கியிருந்து அங்குள்ள பாதுகாப்பு நிலமைகள் குறித்து ஆராய்ந்தனர். இதனையடுத்து அங்குள்ள நிலைமைகள் போட்டிகளை நடத்துவதற்கு உகந்ததாக இருப்பதாகவும், வீரர்களின் பாதுகாப்புக்கு 100 சதவீதம் பாதுகாப்பு இருப்பதாகவும் தெரிவித்து ஐ.சி.சி இற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாப் மாநில அரசின் ஊடகப் பேச்சாளர் மாலிக் மொஹமட் கான் வீரர்களின் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையில், உலக பதினொருவர் அணிக்கு ஜனாதிபதி பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மைதானத்திற்கு அருகாமையிலுள்ள கடைகள் அனைத்தும் போட்டிகள் நடைபெறும் தினத்தன்று மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போட்டிகளைக் காணவருகின்ற பார்வையாளர்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றார்.
இதன்படி வீரர்கள் தங்கயிருக்கும் 5 நாட்களுக்கும் ஹோட்டலில் இருந்து மைதானம் வரை சுமார் 9 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்ட மைதானத்துக்கு அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்கள் போட்டிகள் நடைபெறும் தினத்தன்று மூடப்படும்.
பாகிஸ்தானை வந்தடைந்த உலக அணி
குறித்த போட்டிகளின் நிமித்தம், 2 நாள் பயிற்சிகளை டுபாயில் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணியின் தலைவரும், உலக பதினொருவர் அணியின் தலைவருமான பாப் டூ ப்ளெசிஸ் உள்ளிட்ட குழுவினர் விசேட விமானம் மூலம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தானை வந்தடைந்ததுடன், உலக பதினொருவர் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி உள்ளிட்ட அந்நாட்டு கிரிக்கெட் அதிகாரிகள் விமான நிலையத்தலிருந்து வரவேற்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அல்லமா இக்பால் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு உலக அணி வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் செல்லும் வழியெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அணி வீரர்களின் பேருந்து வரும் பாதையை எட்ட முடியாமல் போக்குவரத்து மூடப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு இல்லை என்று ஏற்கெனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருந்ததுடன், போட்டித் தொடரில் பங்கேற்கும் உலக அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளவர், தலைவர் டூ ப்ளெசிஸ், ஐ.சி.சி இன் பணிப்பாளர் கில்ஸ் கிளார்க் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி ஆகியோரின் தலைமையில் விசேட செய்தியாளர் மாநாடும் நடைபெற்றது. இதன்போது உலக அணியின் ஜேர்சியும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதுடன், இரு அணி வீரர்களும் பங்குபற்றும் விசேட பயிற்சி முகாம் நேற்று இரவு கடாபி மைதானத்தில் நடைபெற்றது.
இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் உலக அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 வருட கனவை நனவாக்குமா பாகிஸ்தான்?
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முதல் வீடாகக் கருதப்படுகின்ற லாகூர் கடாபி மைதானத்தில் நாளை விழாக் கோலம் காணவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தொடரில் அவுஸ்திரேலிய அணியோ, இலங்கை அணியோ அல்லது தென்னாபிரிக்க அணியோ பாகிஸ்தானுடன் மோதவில்லை. மாறாக அந்நாட்டு கிரிக்கெட்டின் மறுமலர்ச்சிக்காக உலக நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளவுள்ள வீரர்களுடான கொண்டாட்டமாகவே இது அமையவுள்ளது. எனவே, இது தீவிரவாதத்தையும் தாண்டிய உண்மையான வெற்றியை அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த 9 வருடங்களாக டுபாய், அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய நகரங்களை தமது சொந்த மைதானங்களாகக் கருதி பாரிய நிதியை செலவழித்து, (வருடமொன்றுக்கு 120 மில்லியன் ரூபா) எந்தவொரு இலாபத்தையும் எதிர்பாராது சொந்த நாட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து தமது நாட்டு வீரர்களின் திறமைகளைக் காணமுடியாமல் போன அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் இந்த போட்டித் தொடர் மிகப் பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
பாகிஸ்தானில் கிரிக்கெட் இறந்துவிடவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் தேவை. எனவே நாளை ஆரம்பமாகவுள்ள இத்தொடர் நிச்சயம் தீவிரவாதத்தை வெற்றி கொள்ளும் அதேநேரம், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மாத்திரமல்லாது முழு உலகிற்கும் மிகப் பெரிய வெற்றியாக அமையவுள்ளதுடன், பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கான முதல் அத்திவாரமாகவும் இது அமையவுள்ளது.
இதேவேளை, இத்தொடர் வெற்றிகரமாக இடம்பெறும்பட்சத்தில், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் சென்று விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, அடுத்த சில மாதங்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில், முக்கியமான காலப்பகுதிகளாக மாறவுள்ளன.