திருச் சிலுவைக் கல்லூரியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது புனித பத்திரிசியார்

597

இவ்வருடத்திற்கான பிரிவு I (டிவிஷன் I) பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் களுத்துறை திருச் சிலுவைக் கல்லூரிக்கு (Holy Cross College) எதிரான தமது முதலாவது போட்டியில், இரண்டாவது பாதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி (St. Patrick’s College) வெற்றிபெற்றுள்ளது.

புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி ஒரு பாதி 40 நிமிடங்கள் கொண்டதாக அமைந்திருந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ஹேய்ன்ஸ் உள்ளனுப்ப அதனை கோல் காப்பாளர் தட்டிவிட, அதே வேகத்தில் கிடைத்த அடுத்த வாய்ப்பினை சாந்தன் கோல் கம்பத்திற்கு மேலால் உதைய அம்முயற்சி பலனளிக்கவில்லை.

சானுக பியமல் பேரேரா உள்ளனுப்பிய பந்தை புனித பத்திரிசியார் கல்லூரியின் கோல் காப்பாளர் கியூமன் தடுத்தார். 15ஆவது நிமிடத்தில் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஹேய்ன்ஸ் லாவகமாக உள்ளனுப்பிய பந்து மயிரிழையில் கோல் கம்பத்தில்பட்டு வெளியேறியது.

மீண்டும் சானுக பியமல் பேரேரா தனித்து சிறப்பான முறையில் கோலை நோக்கி உதைந்த பந்தை புனித பத்திரிசியார் கல்லூரியின் கோல் காப்பாளர் தடுத்தார்.

முறையற்ற விதத்தில் எதிரணி வீரரை வீழ்த்தியதன் காரணமாக பிறீசன் மஞ்சள்  அட்டை காட்டப்பட்டு எச்சரிக்கப்பட்டார். அதன் காரணமாக கிடைத்த ப்ரீ கிக்கிற்கு இடையூறு விளைவித்தமைக்காக சாந்தனும் மஞ்சள் அட்டை மூலம் எச்சரிக்கப்பட்டார்.

தொடர்ந்து திருச் சிலுவைக் கல்லூரியின் கஜாசான் நேர்த்தியாக கோலை நோக்கி அனுப்பிய பந்தை கோல் காப்பாளர் தடுத்தார்.

திருச் சிலுவைக் கல்லூரியின் கவிந்து தேஷால் முறையற்ற ஆட்டத்திற்காக மஞ்சள் அட்டை காட்டப்பட்டு எச்சரிக்கப்பட்டார்.

இரு அணிகளும் முதலாவது கோலைப் பெறுவதற்கு பலத்த போராட்டத்தினை வெளிப்படுத்திய போதும் கோல் காப்பாளர்களின் சிறப்பான செயற்பாட்டின் காரணமாக எதுவித கோல்களும் பெறப்படவில்லை. முறையற்ற ஆட்டங்களும், மஞ்சள் அட்டைகளும் நிறைந்திருந்த முதல் பாதி கோல்கள் இன்றி நிறைவுற்றது.

முதல் பாதி:  புனித பத்திரிசியார் கல்லூரி 0-0 திருச் சிலுவைக் கல்லூரி

முதலாவது பாதி நிறைவுற்ற அதே பரபரப்புடன் ஆரம்பமானன இரண்டாவது பாதியின் ஆரம்ப நிமிடங்களிலேயே இரண்டு அணிகளுக்கும் வாய்ப்புக்கள் கிடைத்திருந்த போதும் அவை இலகுவாக முறியடிக்கப்பட்டன.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றுக்கொண்டிருந்த போட்டியின் 47ஆவது நிமிடத்தில், கிறிஸ் ரீபன் புனித பத்திரிசியார் கல்லூரி சார்பாக முதல் கோலைப் பெற்று கோல் கணக்கை ஆரம்பித்தார்.

பேதுரு கல்லூரியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி

அதேவேகத்தில் ஹேய்ன்ஸ் உதைந்த பந்தை கோல் காப்பாளர் தடுத்தார், சாந்தனின் முயற்சியும் கோல் கம்பத்தின் மேல் விளிம்பில்பட்டு வெளியேறியது.

ஹேய்ன்ஸ் உதைந்த பந்து கம்பத்தில்பட்டுத் திரும்ப அதனை  வேகமாக செயற்பட்ட சாந்தன் கோலாக மாற்றினார்.

அணித் தலைவர் அபீசன் தன் பங்கிற்கு மேலும் ஒரு கோலைப் புனித பத்திரிசியார் கல்லூரிக்காகப் பெற்றுக்கொடுத்தார்.

அதுவரை நேரமும் போட்டியில் இரு அணிகளும் சமவலுவுடன், மிகப்பலமாக விளையாடிக்கொண்டிருந்த போதும் 3 கோல்களால் புனித பத்திரிசியார் கல்லூரி முன்னிலை பெற, ஆட்ட வேகத்தை திருச் சிலுவைக் கல்லூரி அதிகரித்திருந்தபோதும் போட்டி புனித பத்திரிசியார் கல்லூரி பக்கம் சாய ஆரம்பித்தது.

திருச் சிலுவைக் கல்லூரியின் சானுக மற்றும் ஜோகான் எரண்ட ஆகியோர் வேகமான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை.

67ஆவது நிமிடத்தில் ஹேய்ன்ஸ் கோலுக்கு அனுப்பிய பந்தை கோல் காப்பாளர் நுவான் சதீப பெரேரா தடுக்க, விரைந்து செயற்பட்ட சாந்தன் அதனை கோலாக்கினார்.

நடுவர் முறையற்ற ஆட்டத்தை அவதானிக்கவில்லை என திருச் சிலுவைக் கல்லூரியினர் நடுவரிடம் முறையிட்டனர்.

அடுத்த நிமிடத்தில் பியன் வெனு உள்ளனுப்பிய பந்தை சாந்தன் ஹெடர் மூலம் கோலாக்கி ஹட்றிக் கோல் பெற்றார்.

தொடர்ந்தும் நடுவருடன் திருச் சிலுவைக் கல்லூரி அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போட்டி நிறைவடைவதற்கு 11 நிமிடங்கள் மீதமாகவிருந்த நிலையில் நடுவரது முடிவில் அதிருப்தி தெரிவித்து மைதானத்திலிருந்து வெளியேறினர் திருச்சிலுவைக் கல்லூரியினர்.

முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 5-0 திருச் சிலுவைக் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி – சாந்தன் 47′, 67’, 68’, கிறிஸ் ரீபன் 52′, அபீசன் 62′

மஞ்சள் அட்டை

புனித பத்திரிசியார் கல்லூரி – பிறீசன், சாந்தன், கிறிஸ் ரீபன்

போட்டி நிறைவில் புனித பத்திரிசியார் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் வெனிஸ் மெரின் Thepapare.com இற்கு கருத்துத் தெரிவிக்கையில் “இன்றைய போட்டியில் நாம் 05 கோல்களால் முன்னிலை பெற்றதன் பின்னர் வெளியேற வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை. இறுதிநேரத்தில் ஒரு கோல் நடுவரது தீர்ப்பினால் போட்டி எமது பக்கம் மாறியிருந்தால் கூட அது அர்த்தமுள்ளதாக இருக்கும். எமது வீரர்கள் முறையற்ற ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தால் கூட நாம் எதிர்வரும் போட்டிகளில் அவற்றை சரிசெய்து சிறப்பாக செயற்படுவோம்” என்றார்.

களுத்துறை திருச் சிலுவைக் கல்லூரியின் சமோத் பீரீஸ் Thepapare.com இற்கு கருத்து தெரிவிக்கையில் “எங்களுடைய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் தங்களுடைய திறன் மூலம் முதலாவது கோலைப் பெற்றார்கள். இரண்டாவது கோல் முதல் அவர்களுடைய ஆட்டம் முற்றிலும் முறையற்றதாக அமைந்திருந்தது. கோல்காப்பாளரின் கைகளிலிருந்த பந்தைக் கூட தட்டிப்பறித்திருந்தனர். இவற்றையெல்லாம் நடுவர் அவதானிக்கவில்லை அதனால் தான் மைதானத்திலிருந்து வெளியேறினோம். இங்கு நாம் இவ்வாறானதொரு முடிவை எதிர்பார்த்து வரவில்லை துரதிஷ்டவசமாக இவ்வாறாகிவிட்டது. எவ்வாறாயினும் எமக்கு மேலும் 05 போட்டிகளுள்ளது. ஆகவே எமக்கு இப்போட்டியின் முடிவு எதுவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.