பெனால்டி மூலம் டான் கிண்ண இறுதிப் போட்டிக்கு நுழைந்த கடல் மீன்கள்

584

மட்டக்களப்பு கால்பந்தாட்ட சங்கம் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் அனுசரனையோடு நடாத்தும், மாவட்டத்தின் பிரிவு A (டிவிஷன் A) அணிகளுக்கு இடையிலான “டான் கிண்ண” கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் கல்லடி சிவானந்தா விளையாட்டுக் கழகத்தை பெனால்டி முறையில் வீழ்த்தியிருக்கும் உப்போடை கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

டான் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக சீலாமுனை யங் ஸ்டார்

டான் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக சீலாமுனை யங் ஸ்டார்

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த தீர்மானமிக்க இந்த அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்ற சிவானந்தா விளையாட்டுக் கழகம் காலிறுதியில் ஏறாவூர் Y.S.S.C அணியினரை 5-2 என்ற கோல்கள் கணக்கிலும், கடல் மீன்கள் அணி கூழவாடி டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கிலும் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் இரு அணிகளும் மந்தகதியில் ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்தன. நீண்ட நேரமாக மத்திய கோட்டிற்கு அருகாமையிலேயே பந்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

தொடர்ந்து தனக்கு கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றின் மூலம் வேகமாக பந்தை கொண்டு சென்ற கடல் மீன்கள் அணியின் V. டிலு எதிரணியின் தடுப்புக்களை தகர்த்து போட்டியின் முதல் கோலை 28 ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, சிவானந்தா விளையாட்டுக் கழகத்தினாலும் கோல் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் கடல் மீன்களின் இரும்புக்கர கோல்காப்பாளர் அதற்கு வாய்ப்புத் தரவில்லை. இதனால் போட்டியின் முதற் பாதி கடல் மீன்களின் முன்னிலையுடன் நிறைவு பெற்றது.

முதல் பாதி: கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம் 1 – 0 சிவானந்தா விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி முதல் பாதி போன்று மெதுவானதாக அமைந்திருக்கவில்லை. இப்பாதி ஆரம்பித்து அடுத்த நிமிடத்திலேயே Y. உசாந்தன் தனது சிறப்பான பாதவேலை மூலம் சிவானந்தா அணிக்காக முதல் கோலைப் போட்டார். அவரது கோலினால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைந்தன.

சிவனாந்தா அணியினர் தாம் பெற்ற கோலின் மூலம் சற்று உற்சாகமாக மைதானத்தில் வாய்ப்புக்களை தொடர்ந்து ஏற்படுத்தியிருப்பினும் அதனை அவர்களுக்கு பலன் தரும் விதமாக மாற்றி அமைக்க முடியாது போனது.

இவ்வாறான முறையில் ஆட்டம் சென்று கொண்டிருக்கையில் பந்தின் ஆதிக்கம் கடல் மீன்கள் அணியிடம் சென்றது. கடல் மீன்களும் எதிரணியின் எல்லைக்குள் பந்தை கொண்டு சென்று பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், சிவனாந்தா விளையாட்டுக் கழகத்தின் பின்கள வீரர்களை தாண்டுவது அவர்களுக்கு மிகவும் கடினமாக அமைந்தது.

தொடர்ந்து கடல் மீனுக்காக முன்னைய பாதியில் கோலைப் பெற்ற டிலு தனது அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் உதைந்த பந்து பெனால்டி பகுதியை அண்மித்த வேளையில் தனது தலையால் முட்டி கோலொன்றைப் பெற முயற்சித்திருந்தார். அவரது செயற்பாட்டினால் மிகவும் நெருக்கமாக கோல் கம்பத்திற்குள் சென்ற பந்து சிவானந்தா கோல் காப்பாளரினால் தட்டி விடப்பட கம்பத்துக்கு மேலாக சென்றது.

போட்டியின் கடைசிப் பகுதியில் இரு அணிகளும் சமபலத்தை காட்டிய போதும் யாராலும் மேலதிக கோல் ஒன்றைப் பெறுவது சிரமமாக இருந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்து பெனால்டி மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

முழு நேரம்: கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம் 1 – 1 சிவனாந்தா விளையாட்டுக் கழகம்

பெனால்டியில் தமக்கு கிட்டிய ஆறு வாய்ப்புக்களில் நான்கு கோல்களைப் பெற்றுக்கொண்ட கடல் மீன்கள் அணி டான் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்வரும் 17ஆம் திகதி சீலாமுனை யங் ஸ்டா‌ர் விளையாட்டுக் கழகத்துடன் மோதும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டது.

பெனால்டியில் சிவனாந்தா விளையாட்டுக் கழகத்தினர் மூன்று கோல்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு தொடரிலிருந்து வெளியேறியிருந்தனர்.

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – V. டிலு (கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம் – V. டிலு 28’

சிவனாந்தா விளையாட்டுக் கழகம் – Y. உசாந்தான் 46’