ஆசிரியர் தினத்தில் சனத் ஜயசூரியவுக்கு நன்றி தெரிவித்த கோஹ்லி

1719
Image courtesy - Kholi's twitter

உலக ஆசிரியர்கள் தினம் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர், விரேந்திர சேவாக் உள்ளிட்ட பலர் தமது ஆசான்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியாளர்களுடன் முன்னாள் ஜாம்பவான்கள்தான் ஆசிரியர்கள். அவர்களது ஆட்டத்தை பார்த்துதான் வளர்ந்திருப்பார்கள். இதனடிப்படையில் கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்களுக்கு விராட் கோஹ்லி ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோஹ்லி தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் கிரிக்கெட் உலகை ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் எழுதப்பட்ட மிகப் பெரிய போஸ்டருக்கு முன்னால் அமர்ந்திருந்து ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

அதிரடி நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் உலகைக் கலக்க வரும் T-10 போட்டி

அத்துடன் ”உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக கிரிக்கெட் உலகில் உள்ள ஆசிரியர்களுக்கு ஹேப்பி டீச்சர்ஸ் டே” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜயசூரியவின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய அணியின் மற்றுமொரு ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், தனக்கு கல்வி புகட்டிய ஆசிரியர் மற்றும் தனது ஆரம்பகால பயிற்றுனர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருந்ததை அவரது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.