மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் இங்கிலாந்து அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளருமான ஒட்டிஸ் கிப்ஸன் தென்னாபிரிக்க அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான ‘இன்வஸ்டெக்’ டெஸ்ட் தொடர் முடிவுற்றதன் பின்னர் தனது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பதவியிலிருந்து விலகி தென்னாபிரிக்க அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவியேற்கவுள்ளார்
கிப்ஸன் 2010 – 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என்பதுடன் இவரது பயிற்றுவிப்புக் காலத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணி 2012இல் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஓட்டிஸ் கிப்ஸனின் பரிமாற்றம் தொடர்பில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணி கிரிக்கெட் சபைகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கிப்ஸன் கருத்துத் தெரிவிக்கையில் ”எனது பயிற்றுவிப்பாளர் வாழ்க்கையில் இது ஒரு புது அத்தியாயமாகும். அதனை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னை இப்பதவிக்கு தெரிவு செய்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கும் எனது நிலமையை உணர்ந்து எனது வாய்ப்பிற்கு மதிப்பளித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு விளையாட்டு வீரனாக பல மகிழ்ச்சியான தருணங்களை தென்னாபிரிக்காவில் அனுபவித்துள்ளேன், தற்போது ஒரு பயிற்றுவிப்பாளராக மீண்டும் செல்வதற்கு ஆவலாக உள்ளேன்.
உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் வாய்ப்பினை பறிகொடுத்த இலங்கை
கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த..
ஏற்கனவே தென்னாபிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய ரசல் டொமிங்கோ தென்னாபிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டிஸ் கிப்ஸன் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இங்கிலாந்துஅணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ட்ரேவர் பெய்லிஸ் ”கடந்த சில வருடங்கலாக எமது அணியின் முன்னேற்றத்தில் கிப்ஸனின் பங்கு அளப்பறியது. சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்குள்ள அறிவு மற்றும் எமது சகல பந்து வீச்சாளர்களினதும் முன்னேற்றத்தில் அவர் வகித்த பங்கு அளப்பரியது. சந்தேகத்துக்கிடமின்றி மீண்டும் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவரது பணி மிகவும் சவால் மிக்கது” எனத் தெரிவித்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் அண்டரூ ஸ்ட்ரோஸ் கருத்துத் தெரிவிக்கையில் ”இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு கிப்ஸன் ஆற்றிய பங்களிப்பிற்கு முதலில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்குள்ள அறிவு, அனுபவம், நுட்பம் மற்றும் பல்வேறு காலநிலையிலுள்ள மைதானங்கள் தொடர்பான அவரது அனுபவம் கிரிக்கெட்டின் மூன்று வகைகளிலும் எமது பந்து வீச்சாளர்களின் முன்னேற்றத்தில் அளப்பரிய பங்குவகித்துள்ளது. தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவரது பணி சிறப்புற எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்