சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான, நான்காவது ஒரு நாள் போட்டியில் பந்து வீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயற்பட்ட இந்திய அணி இலங்கையை 168 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரிலும் 4-0 என முன்னிலை வகிக்கின்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி தனது அணிக்காக முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
ஒரு நாள் தொடரை ஏற்கனவே பறிகொடுத்திருப்பினும் 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை உறுதிப்படுத்த இப்போட்டி இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருந்தது.
இலங்கை அணி சார்பாக இன்றைய போட்டியின் மூலம் இடது கை சுழல் வீரர் மலிந்த புஷ்பகுமார மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தில்ஷான் முனவீர ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தனர். அதே போன்று இந்திய அணி சார்பாக பந்து வீச்சாளரான சர்துல் தாஹூரிற்கும் இது கன்னிப் போட்டியாகும்.
தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷிக்கர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை இந்திய அணி தொடங்கியது.
இந்திய அணியின் முதல் விக்கெட் போட்டியின் இரண்டாவது ஓவரில் விஷ்வ பெர்னாந்துவினால் கைப்பற்றப்பட பெரிதும் ஓட்டங்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிக்கர் தவான் 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும் இரண்டாவது விக்கெட்டிற்காக ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி மிகவும் சாதுர்யமான முறையில் துடுப்பாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை விரைவாக உயர்த்தினார்.
இரண்டாம் விக்கெட்டிற்காக 219 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டதுடன், இந்தியாவின் இரண்டாம் விக்கெட்டாகவும் லசித் மாலிங்கவின் 300ஆவது ஒரு நாள் விக்கெட்டாகவும் பறிபோன விராத் கோஹ்லி தனது 29ஆவது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்து மொத்தமாக 96 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 131 ஓட்டங்களைப் பெற்றார்.
கவலையுடனும், கண்ணீருடனும் பதவியிலிருந்து இராஜினமாச் செய்தேன் – சனத்
கவலையுடனும், கண்ணீருடனும் பதவியிலிருந்து இராஜினமாச் செய்தேன் – சனத்
அண்மைக் காலமாக இலங்கை அணி சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டுவரும் எதிர்ப்பின் காரணமாக கவலைக்கும், மனச்சங்கடத்திற்கும் மத்தியில் கிரிக்கெட் தெரிவுக் குழு பதவிலிருந்து இராஜினாமாச் செய்வதாக சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சனத் தலைமையிலான தெரிவுக்குழுவினர் தமது இராஜினாமா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், மிகவும் கவலையுடனும், கண்ணீருடனும் தெரிவுக் குழுவிலிருந்து பதவி விலக நேரிட்டதாக தெரிவுக் குழுவின் தலைவரும், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மறுமுனையில் ரோஹித் சர்மா கடந்த போட்டி போன்று தொடர்ச்சியாக இரண்டாவது சதம் கடக்க இந்திய அணி இன்னும் வலுவான நிலையை அடைந்து கொண்டது. தனது 13ஆவது ஒரு நாள் சதத்தினைப் பெற்றுக்கொண்ட ரோஹித் சர்மா ஆட்டமிழக்கும் போது 88 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளை விளாசி 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதனையடுத்து மத்திய வரிசை வீரர்களான மஹேந்திர சிங் தோனி மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் அதிரடி காட்ட இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 375 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பாக இறுதியில் அதிரடி காட்டியிருந்த மனீஷ் பாண்டே 42 பந்துகளில் 50 ஓட்டங்களையும் தனது 300ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடும் தோனி 49 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் காணப்பட்டனர்.
இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில், அஞ்செலோ மெதிவ்ஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அணித் தலைவர் லசித் மாலிங்க, அகில தனஞ்சய மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றினர்.
தொடர்ந்து கடின வெற்றி இலக்கான 375 ஓட்டங்களைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியில் நிரோஷன் திக்வெல்ல பவுண்டரிகளை விளாசி சிறப்பான ஆரம்பத்தை தந்திருந்தார்.
எனினும் துரதிஷ்டவசமாக இந்த இன்னிங்சின் மூன்றாவது ஓவரில் அறிமுக வீரர் சர்துல் தாஹூரின் பந்து வீச்சினை எதிர்கொண்ட திக்வெல்ல அதனை இந்திய அணியின் விக்கெட் காப்பாளரான மஹேந்திர சிங் தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், வெறுமனே 14 ஓட்டங்களுடன் திக்வெல்லவின் விக்கெட் முற்றுப்பெற்றது.
அடுத்து சவாலான இலக்கை தொடும் பயணத்தில் பங்கேற்க வந்த வீரர்களான குசல் மெண்டிஸ், கன்னி ஒரு நாள் போட்டியில் ஆடும் தில்ஷான் முனவீர, லஹிரு திரிமான்ன ஆகிய வீரர்கள் ஏமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓய்வறை நோக்கி நடந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் ஐந்தாம் விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த மிலிந்த சிறிவர்தன மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் சற்றுப் போராடியிருந்தனர்.
இவர்களால் ஐந்தாம் விக்கெட்டிற்காக 73 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக சேர்க்கப்பட்டிருந்தது. இலங்கை அணிக்கு சற்று ஆறுதலாக அமைந்த இவர்களின் இணைப்பாட்டம் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சினால் தகர்க்கப்பட்டது. இலங்கை அணியின் ஐந்தாவது விக்கெட்டாக பறிபோன சிறிவர்தன மொத்தமாக 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
தொடர்ந்து அஞ்செலோ மெதிவ்ஸ் அணியின் 7ஆவது விக்கெட்டாக பறிபோக முடிவில் 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 207 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அஞ்செலோ மெதிவ்ஸ் 80 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
இந்திய அணியின் பந்து வீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.
இப்போட்டியின் மூலம் இலங்கை அணி தமது சொந்த மண்ணில் ஓட்ட வித்தியாச ரீதியில் பெற்ற தோல்விகளில் இதுவே பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடரின் இறுதி ஒரு நாள் போட்டி செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இந்தியா – 375/5 (50) – விராத் கோஹ்லி 131(96), ரோஹித் சர்மா 104(88), மனீஷ் பாண்டே50*(42), மஹேந்திர சிங் தோனி 49*(42), அஞ்செலோ மெதிவ்ஸ் 24/2 (6)
இலங்கை – 207 (42.4) – அஞ்செலோ மெதிவ்ஸ் 70(80), மிலிந்த சிறிவர்தன 39(43), ஜஸ்பிரிட் பும்ரா 32/2 (7), குல்தீப் யாதவ் 31/2 (8.4), ஹர்திக் பாண்டியா 50/2 (8)
போட்டி முடிவு – இந்தியா 168 ஓட்டங்களால் வெற்றி