சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான, மூன்றாவது ஒரு நாள் போட்டியில் முழுத்திறமையையும் வெளிப்படுத்திய இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தியுள்ளதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-0 என கைப்பற்றியுள்ளது.
கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியினை (தொடரில் முதற்தடவையாக) கைப்பற்றிய இலங்கை அணியின் புதிய தலைவர் சாமர கப்புகெதர முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, தொடரினை தக்கவைத்துக்கொள்ள இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி, இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது. போட்டித் தடையினைப் பெற்றிருக்கும் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க மற்றும் உபாதைக்கு உள்ளாகிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணத்திலக ஆகியோருக்கு பதிலாக தினேஷ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு தினேஷ் சந்திமாலுடன் மைதானம் விரைந்த நிரோஷன் திக்வெல்ல, முதல் பந்திலேயே பவுண்டரி ஒன்றினை விளாசி அதிரடியான ஆரம்பத்தினை தந்திருந்தார்.
எனினும் திக்வெல்லவிற்கு இன்றைய நாளில், நீண்டதொரு இன்னிங்சினை வெளிப்படுத்த வாய்ப்பு கிட்டவில்லை. பும்ராவினால் வீழ்த்தப்பட்ட அவரால் 13 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டிருந்தது.
இதனையடுத்து மைதானம் விரைந்த குசல் மெண்டிசும் வந்த வேகத்திலேயே வெளியேறினார். இவ்வாறனதொரு தருணத்தில், ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமன்ன ஆகியோர் மெதுவான முறையில் ஒரு இணைப்பாட்டத்திற்கு அடித்தளம் போட்டிருந்தனர்.
இரண்டு வீரர்களினாலும், மூன்றாவது விக்கெட்டிற்காக நிதானமான முறையில் 72 ஓட்டங்கள் பகிரப்பட்டது. இதனால், இலங்கை அணி மெதுவாக ஓரளவு வலுவான நிலையை எட்டிக் கொண்டது.
இலங்கை அணியின் நம்பிக்கை தரும் எதிர்காலம்
மூன்றாம் விக்கெட்டாக ஓய்வறை திரும்பிய சந்திமால், பெறுமதிமிக்க 36 ஓட்டங்களினை சேர்த்திருந்தார். மறுமுனையில் பொறுப்பாக ஆடியிருந்த லஹிரு திரிமன்ன தனது, 17 ஆவது ஒரு நாள் அரைச் சதத்தினை பூர்த்தி செய்தார்.
பின்னர் துரித கதியில் ஆடத்தொடங்கிய திரிமான்ன, போட்டியின் 40 ஆவது ஓவரில், பும்ராவினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். நீண்ட காலத்திற்கு பின்பு இலங்கை இலங்கை அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திய திரிமான்ன 105 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அடுத்து, இலங்கை அணியின் மத்திய வரிசை மோசமான ஆட்டத்தினை வெளிக்காட்ட 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து இலங்கை அணி 217 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதில், மத்திய வரிசையில் ஓரளவு விரைவான ஆட்டத்தினை வெளிப்படுத்திய மிலிந்த சிறிவர்த்தன 27 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பந்து வீச்சில், இலங்கை வீரர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிய ஜஸ்பிரிட் பும்ரா 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சினை இப்போட்டியின் மூலம் பதிவு செய்து கொண்டார். அவரோடு ஹர்திக் பாண்டியா, அக்ஷார் பட்டேல் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து, வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 218 ஓட்டங்களை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தமது முக்கிய வீரர்களான ஷிக்கர் தவான் மற்றும் அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோரை இழந்து ஒரு தடுமாற்றமான ஆரம்பத்தினை காட்டியிருந்தது.
எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகிய இரண்டு வீரர்களும் தடுப்பாட்டத்தை வெளிக்காட்டி அணிக்கு சிறிது நேரம் ஓட்டங்களை சேர்த்தனர்.
தொடர்ந்து, போட்டியின் 14 ஆவது ஓவரை இலங்கை சார்பாக பந்து வீசும் வாய்ப்பினை பெற்ற அகில தனஞ்சய எதிரணியின் துடுப்பாட்ட வீரர்கள் இருவரை அடுத்தடுத்த ஓவர்களில் (லோக்கேஷ் ராகுல், கேதர் ஜாதவ்) ஓய்வறை அனுப்பினார். இதனால், ஒரு கட்டத்தில் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா மீண்டும் அழுத்தத்தை எதிர்நோக்கியது.
இக்கணத்தில், அணியை மீட்டெடுக்கும் நோக்கோடு ரோஹித் சர்மா மற்றும் மஹேந்திர சிங் தோனி ஆகியோர் சாதுர்யமான முறையில் ஆடத் தொடங்கினர். இவர்களின் முயற்சியினால், ஐந்தாம் விக்கெட்டிற்காக வீழத்தப்படாத 157 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டது.
இந்த சிறப்பான இணைப்பாட்டத்தின் உதவியால், நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்தவாறு இந்திய அணியானது 45.1 ஓவர்களில் 218 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கினை தொட்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடாத்திய வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா தனது 12ஆவது ஒரு நாள் சதத்தினை பூர்த்தி செய்து கொண்டதுடன் மொத்தமாக, 145 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் சேர்த்து 124 ஓட்டங்களை பெற்றிருந்தார். சர்மாவிற்கு கைகோர்த்திருந்த தோனி அரைச்சதத்துடன் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இந்த இன்னிங்சின் ஆரம்பத்தில் சிறப்பாக அமைந்து பிந்திய நேரத்தில் சற்று மோசமாக அமைந்த இலங்கை அணியின் பந்து வீச்சில், அகில தனஞ்சய 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், லசித் மாலிங்க மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக தனது அபார பந்து வீச்சு ஆற்றலை வெளிப்படுத்தியிருந்த ஜஸ்பிரிட் பும்ரா தெரிவு செய்யப்பட்டார்.
போட்டி முடிவு – இந்தியா 6 விக்கெட்டுகளால் வெற்றி