அண்மைய காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருக்கும் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிக் போத்தாஸ் மற்றும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
மாலிங்க பற்றி பேசியிருந்த போத்தாஸ், இந்த வருடம் அவரின் பந்து வீச்சு மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்த 9 பிடியெடுப்புக்கள்த வறவிடப்பட்டிருந்ததையும், அவர் ஒரு நாள் அணிக்கு நீண்ட கால ஓய்வின் பின்னர் திரும்பி 7 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியிருந்தது பற்றியும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்.
“நாங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்த போட்டியின் போக்கை தீர்மானிக்க கூடிய இலங்கை அணியின் முக்கிய புள்ளிகள் எனக் குறிப்பிடும்படியான சில வீரர்களை கடந்த காலத்தில் இழந்து விட்டோம். அத்தோடு, தற்போது போட்டியின் போது தலைவர்களாக இருக்க கூடிய சில தலைவர்களையும் இழந்து விட்டோம். அவ்வாறாக ஒரு போட்டியின் போது தலைவராக இருக்க கூடிய வீரரே மாலிங்க ஆவார். நாங்கள் அவரை ஒரு தூயநோக்கோடும், அவரால் பந்தை கொண்டு செய்யக்கூடிய விடயங்களையும் தற்போது நாம் பார்ப்பதில்லை. அத்தோடு, அவர் தற்போது அணியில் இருக்கும் இளம் பந்து வீச்சாளர்களுக்காக என்ன செய்திருக்கின்றார் என்பதையும் பார்ப்பதில்லை. அணியில் இருக்கும் ஏனைய ஒவ்வொரு வீரருக்கும் மாலிங்க எவ்வளவு பெறுமதியான வீரர் என்பது தெரியும். அவரது அண்மைய பதிவுகள் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வைத்திருந்த பதிவுகள் போன்று சற்று திருப்திகரமானதாக அமையாது இருப்பினும், மாலிங்கவின் பெறுமதி அளவிட முடியாத ஒன்றாகும்”
என நிக் போத்தாஸ் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கு முன்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
25ஆவது சிங்கர் MCA பிரிவு ‘A’ கிரிக்கெட் தொடர் செப்டம்பரில் ஆரம்பம்
33 வயதாகும் மாலிங்கவின் அண்மைய ஆட்டங்களில் எதுவும் குறிப்பிட்டு சொல்லும்படி அமைந்திருக்காவிடினும், இலங்கை கிரிக்கெட் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மிகச்சிறந்த வீரர்களில் அவரும் ஒருவராவார். வரலாற்றில் மாலிங்கவினால் மாத்திரமே ஒரு நாள் போட்டியொன்றில், (தென்னாபிரிக்க அணிக்கெதிராக 2007ஆம் ஆண்டு உலக கிண்ணத்தின் போது) தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
“(மாலிங்க) அவர் பந்து வீசும் முறையும், அவர் அதன் மூலம் நீண்ட காலமாக பெற்றுக்கொண்டிருந்த சிறந்த அடைவுகளும் மிகவும் பாராட்டத்தக்கது. அவர் பந்து வீசும் போது வெளிப்படும் உடற் பொறிமுறை யாருக்கும் அவ்வளவு எளிதாக இயற்கையில் அமைந்துவிடாது. அவர் இதுவரை காலமாக இலங்கை கிரிக்கெட்டிற்காக செய்தவை அனைத்தும் சிறப்பானதாக அமைந்திருந்தன. மாலிங்காவினாலேயே கடந்த காலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை அணி மிகவும் அச்சுறுத்தல் தரும் ஒரு அணியாக காணப்பட்டிருந்தது. அவர் விளையாடிய டெஸ்ட் போட்டிகளிலும், மிகவும் முக்கியமான ஒருவராகவே காணப்பட்டிருந்தார். அவர் இப்போதைய காலங்களில் முன்னர் போன்று பந்து வீசுவது கிடையாது என இலகுவாக கூறினாலும், குறிப்பிட்ட காலத்திற்கே அவ்வாறு இருக்கப் போகின்றது. அவரால், மீண்டும் துல்லியமான யோர்க்கர் பந்துகள் மூலமாகவும், அவரிற்கே உரிய பாணியிலான மெதுவான சில பந்துகளின் மூலமாகவும் மீண்டும் விக்கெட்டுகளை சீராக சாய்க்க முடியும் எனின், இந்தப்பேச்சுக்கு இடமே இருக்காது. மேலும் அவரது உடல் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. அவரது உடல் பற்றி சரியாக அவருக்கு மாத்திரமே தெரியும். அவரோடு நாங்கள் எப்போதெல்லாம் விளையோடுவோமோ, அப்போதெல்லாம் அவரது ஆற்றல்களுக்கு மதிப்பளிப்போம். அத்தோடு, போட்டியின் போக்கை திருப்ப அவர் எதைக்கொண்டு வருகின்றார் என்பதையும் அவதானித்து செயற்படுவோம். நாங்கள் எப்போதும், அவரோடு இப்படியாகவே விளையாடுவோம். கடந்த காலங்களிலும் அப்படியே விளையாடியிருந்தோம். அவர் இலங்கை அணிக்காக விளையாடும் வரை அப்படியே தொடர்ந்தும் விளையாடுவோம்“
என இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி மாலிங்க பற்றி பேசியிருந்தார்.
2009ஆம் ஆண்டிலிருந்து, மாலிங்கவும் கோஹ்லியும் 22 போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளனர். இதில், ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் மாத்திரமே மாலிங்கவினால் இந்திய அணியின் தலைவர் ஆட்டமிழக்க செய்யப்பட்டிருக்கின்றார். ஒரு சாதாரண துடுப்பாட்ட வீரராக அறியப்பட்டிருந்த கோஹ்லி இலங்கை அணிக்கெதிராகவே, அசுர ஆட்டத்தினை வெளிக்காட்டி ஒரு சிறப்பான துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார். இலங்கை அணிக்கெதிராக 21 போட்டிகளில் விளையாடி 80 ஓட்ட சராசரியைக் கொண்டிருக்கும் கோஹ்லி, (இலக்கை தொடும்) இரண்டாம் துடுப்பாட்டத்திலேயே அதிகமாக ஆடி, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 66 ஓட்ட சராசரியைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
“சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வகைப் போட்டிகளிலும், இலங்கை அணிக்காக அவர் செய்த விடயங்களை நோக்கும் போது, ஒரு வரலாற்று நாயகனாக மாலிங்க பார்க்கப்பட வேண்டியவர். அவருக்கு தற்போது கொஞ்சம் வயது போய் விட்டது. அவரது பந்து வீச்சுக்குரிய காலமும் போய்விட்டது. அதனாலேயே, அவரது பந்துவீச்சிற்கு துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக எதிர்தாக்குதல் தருகின்றனர் என நினைக்கின்றேன். இது இயற்கையான ஒரு விடயமே, ஏனெனில் போதிய அளவைவிட மாலிங்க அதிமாக கிரிக்கெட் விளையாடிவிட்டார். இது ஒரு சுழற்சி சக்கரம், வாழ்க்கையும் ஒரு சுழற்சி சக்கரம்“
என முதலாவது ஒரு நாள் போட்டியின் பின்னர் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவான் கூறி மாலிங்க இனி ஓய்வுபெற வேண்டும் என்னும் விதத்தில் அறிவுரை வழங்கியிருந்தார்.