2018 மே மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ணம்

503
Sri-Lanka-National-Football-Team

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி பங்காளதேஷில் ஆரம்பமாகவிருந்த 12ஆவது தெற்காசிய கால்பந்து சம்மேளக் கிண்ண போட்டிகள் (SAFF) 2018 மே மாதம் நடைபெறும் வண்ணம் போட்டி அட்டவணைகள் மாற்றப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பீபா (FIFA) 17 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரைக் கருத்தில் கொண்டு இந்திய கால்பந்து சம்மேளனத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் சாப் (SAFF) கிண்ணப் போட்டிகள் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகள் 2018 மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பீபா (FIFA) 17 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து இந்தியாவின் 11 அணிகள் பங்கு கொள்ளும் இந்தியன் சுப்பர் லீக் தொடர் இடம்பெறவுள்ளதனாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண தொடர் எதிர்வரும் 2018 மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்திருந்தது.

இந்திய கால்பந்தாட்ட சம்மேளனம் தமது ஊடக அறிக்கையில் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பரிந்துரைப்பின்படி தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண தொடரினை 2018 மே மாதம் பங்காளதேஷில் நடாத்துவதற்கு தமது செயற்குழு ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தது.

தொடர் தோல்விகளால் SAFF தொடரில் இருந்து இலங்கை வெளியேற்றம்

இன்று இடம்பெற்ற பூட்டான் அணிக்கு எதிரான போட்டியிலும் இலங்கை இளம்…

கடந்த முறை 2015 டிசம்பர் – 2016 ஜனவரி காலப்பகுதிகளில் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண தொடர் சம்பியனான மற்றும் தொடரின் வெற்றிகரமான அணியாகக் கருதப்படும் இந்தியாவின் வேண்டுகோளை அடுத்தே தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயற்குழுவினால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவ்வமைப்பினால் தெரிவிக்கப்பட்டது.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அன்வருல் ஹக் ஹேலால் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ”சர்வதேச மட்டத்திலும் உள்ளுர் மட்டத்திலும் கால்பந்தாட்டப் போட்டிகளில் தொடர்ந்து இறுக்கமான கால அட்டவணையைக் கொண்டிருக்கும் இந்திய அணி இல்லாது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண தொடரினை நடாத்த முடியாது. அதனால் இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த தொடர் அடுத்த வருடம் இந்தியன் சுப்பர் லீக் தொடரைத் தொடர்ந்து மே மாதம் 1ஆம் திகதி முதல் நடாத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் அணி எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் பங்கு கொள்ளாத நிலையில் இப்போட்டிகளில் பங்கு கொள்ளுமாறு ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண தொடரில் பங்கு கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை தொடர்பில் உறுதியான தகவல் எதனையும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன செயலகம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ண தொடரில் பங்கு கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை தொடர்பாக எமது அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளோம். உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் அணி எந்த விதமான வயதுப் பிரிவுகளிலும் பங்கு கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு மீண்டும் அழைப்பு விடுப்பதா என அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். மேலும் அனுசரனையாளர்கள் 8 அணிகளுக்கு மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்” என அன்வருல் ஹக் ஹேலால் தெரிவித்தார்.