கிரிக்கெட் விளையாட்டு, இலங்கையில் அநேகமானவர்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. அதற்கு ஏற்றவாரே, இலங்கை அணி என்றால் துடிப்பு, துணிச்சல், திறமை என்பவற்றை தன்னகத்தே கொண்ட எந்நேரத்திலும் எதிரணியை திணரடிக்கக்கூடிய ஒரு அணி என்ற முத்திரையை பதித்து முழு உலகத்தின் கவனத்தையும் தன்னகத்தே வைத்திருந்த ஒரு அணி என்றால் அது மிகையில்லை.
மிகப்பெரிய மாற்றங்களுடன் வலுவான நிலையில் இலங்கை ஒரு நாள் குழாம்
இந்தியாவுடனான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட …
முதன்முறையாக, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பலம் பொருந்திய ஒரு அணியாக தன்னை அடையாளப்படுத்திய இலங்கை அணி, அன்று முதல் பல சாதனை வெற்றிகள் பெற்ற அணியாகவும் பல சாதனையாளர்களை தன்னகத்தே கொண்ட அணியாகவும் இருந்து வந்தது.
கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணம், 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணம், 2009, 2012ஆம் ஆண்டுகளின் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் போன்ற போட்டித் தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டதுடன் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை கைப்பற்றி தனது தனித்துவத்தை உலகுக்கு பறை சாற்றியும் இருந்தது.
இத்தகைய சாதனைகளையும் சாதனையாளர்களையும் தன்னகத்தே கொண்டிருந்த இலங்கை அணி மஹேல, சங்கா, டில்சான் போன்ற மூத்த வீரர்களின் ஒய்வையடுத்து சடுதியான ஒரு வீழ்ச்சிப்பாதையை நோக்கி பயணித்தது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் T-20 ஆகிய அனைத்திலுமே திறமையை வெளிப்படுத்த தவறியது.
இதன் விளைவாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று வகையான போட்டிகளிலும் தரப்படுத்தலில் மேல் நிலைகளில் இருந்த இலங்கை அணி, பின்னர் மிக மோசமான தோல்விகளால் கீழ் நிலைக்கு பின்தள்ளப்பட்டது.
தற்பொழுது இடம்பெற்று முடிந்துள்ள இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற இறுதி 10 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகளில் மாத்திரமே இலங்கை அணி வெற்றி பெற்றது. அவ்வெற்றிகள் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரானவையாகவே இருந்தன.
முன்னதாக இடம்பெற்ற ஜிம்பாப்வே அணியுடனான தெடரை பறிகொடுத்ததை அடுத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளான முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தனது தலைமைப்பதவியை ராஜினாமா செய்ததுடன் புதிய டெஸ்ட் அணித் தலைவராக டினேஷ் சந்திமாலும் ஒருநாள் மற்றும் T-20 அணித் தலைவராக உபுல் தரங்கவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு வருடங்களாக பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என அனைத்துத் துறைகளிலும் இலங்கை அணி மிக மோசமான நிலையிலேயே உள்ளது. குறிப்பாக இலங்கை அணி மிக அதிகளவான பிடியெடுப்புக்களை தவரவிட்ட அணியாக வலம் வருவதுடன், முக்கியமான இரு பிடியெடுப்புக்களை தவறவிட்டமையே சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறக் காரணமாகவும் அமைந்தது.
மேலும், குறுகிய காலத்தினுள் மிக அதிகளவான வீரர்களை அடிக்கடி மாற்றியமை இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என பலர் கிரிக்கெட் ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
மெதிவ்சின் பதவி விலகல் இலங்கை கிரிக்கெட் அணியை வளர்ச்சி செய்யாது : சனத் ஜயசூரிய
அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமைப் பதவியில் இருந்து விலகியதனால் மாத்திரம் இலங்கை கிரிக்கெட் …
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பலம் பொருந்திய இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை 3-0 என வைட் வொஷ் செய்யப்பட்டது. இந்த அவமானத் தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் கிரிக்கெட் சபையின் பக்கம் திரும்பியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரனதுங்க தற்போதைய இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதவி விலக வேண்டும் என ஊடகமொன்றுக்கு பேட்டியளித்திருந்தார். இதனால் தற்பொழுதுள்ள சர்ச்சையான நிலமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
மறுபுறம், சமூக ஊடகங்களிலும் கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபை அதிகாரிகள் பல வகையிலும் விமர்சனங்களுக்கு உள்ளாகும் தரப்பினராகக் காணப்படுகின்றனர்.
எனினும், கடந்த மாதம் இடம்பெற்ற புதிய அணித் தலைவர்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய இவ்வாறான விமர்சனங்களுக்கு எதிரான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அதில் அவர், ”இந்தத் தருணமானது அனைத்து தரப்பினரும் எமக்கு சாதகமான, நேர்மையான முறையில் பங்களிப்பையும், உதவியையும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
யாருக்கும் தமது தனிப்பட்ட கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கலாம். அவற்றில் உள்ள நல்லவற்றை நாம் எடுப்போம். எனினும், அவ்வாறான கருத்துகளுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருப்பதை விட எமது வீரர்களுக்கு மன ரீதியாக மேலும் வலுவைக் கொடுக்க முடியும் என்றால், அதுவே நாம் செய்யும் பெரிய பங்களிப்பு” என்று தெரிவித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட்டிற்கு எதிராக தெரிவிக்கும் விமர்சனங்களை நிறுத்தி, அணியின் வளர்ச்சிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்ற விதத்திலேயே ஜயசூரிய உட்பட கிரிக்கெட் சபை அதிகாரிகளின் கருத்துகள் அமைந்துள்ளன.
எவ்வாறிருப்பினும் இவ்வாறான பல அழுத்தங்களுக்கு மத்தியிலேயே, வீரர்கள் எதிர்வரும் போட்டிகளை, குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை எதிர்கொள்ளவுள்ளனர். எனவே, இலங்கை அணி எவ்வாறு இந்தியாவை ஒரு நாள் தொடரில் எதிர்கொள்ளும் என்பதே, அனைவரதும் கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
எது எப்படியோ துடிப்பு மிக்க பழைய இலங்கை கிரிக்கெட் அணியாக இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் வரவேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களின் அவா நிறைவேறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க