SAFF போட்டிகளுக்கான 15 வயதின் கீழ் தேசிய அணி விபரம்  

695
Final Squad for SAFF U15 Championship

நேபாளின் கத்மண்டு நகரில் இம்மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) 15 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து தொடரில் பங்கு கொள்ளும் இலங்கை தேசிய அணியின் இறுதிக் குழாத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவு செய்துள்ளது.

இந்த அணிக்கான 30 பேர் கொண்ட வீரர்கள் குழாமொன்று கடந்த ஜூன் மாதம் தெரிவு செய்யப்பட்டது. குறித்த குழாத்தில், கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற தெற்காசிய – ஜப்பான் 16 வயதிற்கு உட்பட்ட நான்கு நாடுகளுக்கு இடையிலான போட்டித் தொடரில் இலங்கை அணியில் அங்கம் வகித்த 10 வீரர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

ஆசிய சம்மேளன சம்பியன்ஷிப் தொடரிற்கான இலங்கை இளையோர் குழாம் அறிவிப்பு

2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களிற்கான சம்பியன்ஷிப் தொடரின் …

எனினும், அதில் 8 வீரர்களே தற்பொழுது தெரிவு செய்யப்பட்டுள்ள இறுதிக் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர். ரவிகுமார் தனுஜன், ஜீவக சமோட், மொஹமட் ரிகாஸ், மொஹமட் ருஸ்கான், மொஹமட் ஆஷிக், நாபீல் நிசாம், சந்தீப வாஸ் மற்றும் விஷால்க சுலக்ஷன ஆகியோரே குறித்த வீரர்கள்.

இந்த இறுதிக் குழாமில் 3 கோல் காப்பாளர்கள், 7 பின்கள வீரர்கள், 8 மத்தியகள வீரர்கள் மற்றும் 5 முன்கள வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இம்முறை 15 வயதின் கீழ் அணியை நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் சன்தீப வாஸ் தலைமை தாங்கவுள்ளார். இவர், இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட தேசிய அணி என்பவற்றின் முன்னாள் வீரரும் கோல் காப்பாளருமான சனீர வாஸின் சகோதரராவார். குருனாகல மலியதேவ கல்லூரி வீரர் ஜீவக சமோத் அணியின் உப தலைவராக செயற்படவுள்ளார்.

இந்த அணியில் வட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவன் ரவிகுமார் தனுஜன் மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் இகினம் டினியாஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அதேபோல், கிழக்கு மாகாணத்திலிருந்து ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவன் மொஹமட் ரிஹான் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

தென் மாகாணத்தில் இருந்து ஷெஹான் ப்ரயன் வீரப்புலி மற்றும் ருமேஷ் மென்டிஸ் ஆகியோர் உள்ள அதே நேரம், கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி, நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, கண்டி சில்வஸ்டர் கல்லூரி மற்றும் அநுராதபுரம் புனித ஜோசப் கல்லூரி என்பவற்றில் இருந்து தலா இரண்டு வீரர்கள் இந்த அணியில் அங்கம் வகிக்கின்றனர்.

போட்டித் தொடருக்கான குழுக்கள்

குழு A குழு B
இலங்கை இந்தியா
பங்களாதேஷ் மாலைத்தீவுகள்
பூட்டான் நேபாள்

ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாடத் தடை

ரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் மிகப் பெரிய போட்டியாளராகக் கருதப்படும்…

இத்தொடரில் இலங்கை அணி தமது முதல் போட்டியாக எதிர்வரும் 18ஆம் திகதி பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ள அதேவேளை, 20ஆம் திகதி பூட்டானை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் கத்மண்டுவில் உள்ள ANFA விளையாட்டுத் தொகுதியில் இடம்பெறும்.

அணிக் குழாம்

சன்தீப வாஸ் (அணித் தலைவர்), ஜீவக சமோத் (உப தலைவர்), மிஹிரு விஜேசூரிய, அஜித் பிரஷான்த், ஷெஹான் ஹர்ஷன, மொஹமட் முஷாரப், விஷால்க சுலக்ஷன, ருமேஷ் மென்டிஸ், தினுக ராஜபக்ஷ, நபீல் நிஸாம், ரவிகுமார் தனுஜன், மொஹமட் ஆசிக், மொஹமட் ரிகாஸ், மொஹமட் நுஸ்கான், ரெஹான் வீரப்புலி, அப்துல் ஹாலிக், ரசிந்து ரனசிங்க, ரசன்த தில்ருக்ஷ பெரேரா, மொஹமட் ரிஹான், இகினம் தினியாஸ், கசுன் தில்ஹார, மொஹமட் ருக்ஷான், மொஹமட் சிபான்

அதிகாரிகள்

சுசுகி ஷிகாஷி (தலைமைப் பயிற்றுவிப்பாளர்), மொஹமட் அஜ்வாத் (உதவிப் பயிற்றுவிப்பாளர்), யொஷினாரி உஷியோடா (உதவிப் பயிற்றுவிப்பாளர்), சம்பத் பன்டார (கோல்காப்பு பயிற்றுவிப்பாளர்), M. பாசித் (மருத்துவ உதவியாளர்), நாலக திஸானாயக்க (முகாமையாளர்)