புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற ‘ட்ரகன்ஸ் சம்பியன்ஸ் லீக் – 2017’ போட்டிகளின் 20ஆவது லீக் ஆட்டம் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் புத்தளத்தின் தலை சிறந்த முன்னனிக் கழகங்களான நியு ஸ்டார் மற்றும் விம்பில்டன் ஆகிய அணிகளுக்கு இடையில் மைதானம் நிறைந்த உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. சம தரத்தினைக் கொண்ட இரண்டு கழகங்களுக்கும் இப்போட்டி மிக முக்கியமாகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரு கழகமும் தொடராக மூன்று வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் இரண்டாம் நிலையிலும் விம்பில்டன் விளையாட்டுக் கழகம் மூன்றாம் நிலையிலும் காணப்படுகின்றன.
இப்போட்டியில் இரண்டாம் பாதி இறுதி நிமிடத்தில் அம்மார் அடித்த கோலினால் பலம் மிக்க நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை 1 : 0 என்ற கோல் கணக்கில் சரித்திர முக்கியத்துவமிக்க வெற்றியோடு தொடர்ச்சியான நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது விம்பில்டன் விளையாட்டுக் கழகம். இப்போட்டியில் மூன்று சிவப்பு அட்டைகளும் 6 மஞ்சள் அட்டைகளும் நடுவரினால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்காக மைதானம் நிறைந்த ரசிகர்களின் கரகோசத்தோடு இரு அணி வீரர்களும் களமிறங்கினர்.
போட்டியின் 8ஆவது நிமிடத்தில் நியு ஸ்டார் விளையாட்டுக் கழக கோல் காப்பாளர் வசீம் விம்பில்டன் கழக முன்கள வீரர் அடித்த பந்தினைப் பிடித்து ஆறு வினாடிகளுக்கும் அதிகமான நேரம் கையில் வைத்துக் கொள்ள நடுவர் விம்பில்டன் கழகத்துக்கு நேரில் உதையை (Indirect Free kick) வழங்கினார்.
இரண்டாம் பாதி அசத்தலால் வெற்றிப் பயணத்தை தொடரும் யுனைடட்
நேரில் உதையை நஜாஸ் அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் செல்ல கிடைத்த சிறந்த கோல் வாய்ப்பு தகர்ந்து போனது.
அதனைத் தொடர்ந்து நியு ஸ்டாரின் பைக்கருக்கு கிடைத்த பந்தினை கம்பத்திற்கு சற்று தொலைவில் இருந்து அடிக்க பந்து கம்பத்திற்கு அருகே சென்று ஏமாற்றியது.
போட்டியின் 19ஆவது நிமிடத்தில் முஸ்பிக் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தினைப் பெற்ற அஸ்பான் கம்பத்திற்குள் வேகமாக அடிக்க நடுவர் அதனை ஓப் சைட் என அறிவிக்க ஏமாற்றமடைந்தனர் நியு ஸ்டார் விளையாட்டுக் கழக வீரர்களும் ஆதரவாளர்களும்.
26ஆவது நிமிடத்தில் நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை வசீம் உதைக்க பொறுப்பேற்று உதைக்காமல் நேரத்தை வீணடிக்க நடுவர் கோல் காப்பாளர் வசீமுக்கு மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்தார்.
ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் விம்பில்டன் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எல்லை கோட்டை விட்டு வெளியேறிய பந்தை நியு ஸ்டார் வீரர் சர்பான் எடுக்க செல்கையில் விம்பில்டனின் சரீக் காலால் அவரின் காலில் அடிக்க நடுவர் உடனடியாக சிவப்பு அட்டை காட்டி சரீக்கை மைதானத்தை விட்டு வெளியேற்ற விம்பில்டன் கழக வீர்ர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரு கழகமும் கோல் அடிப்பதற்காக மும்முரமாக செயற்பட பந்து இரு கழகத்தின் கால்களிலும் சம விகிதத்தில் காணப்பட்டது.
போட்டியின் 40ஆவது நிமிடத்தில் நியு ஸ்டாரின் ஹக்கீம் கொடுத்த பந்தைப் பெற்ற முஸ்பிக் கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க அதை சிறப்பான முறையில் விம்பில்டன் கோல் காப்பாளர் இம்ரான் பிடித்துக் கொண்டார்.
ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் நியு ஸ்டார் வீரர் இஸ்ஹாம் விம்பில்டன் பெனால்டி பகுதியில் வைத்து வேண்டும் என்றே கையால் பந்தினை அடிக்க நடுவர் மஞ்சள் அட்டையை வழங்க ஏற்கனவே மஞ்சள் அட்டையை இஸ்ஹாம் பெற்றிருந்ததால் சிவப்பு அட்டையாக மாற மைதானத்தை விட்டு வெயியேறினார்.
நியு ஸ்டார் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 44ஆவது நிமிடத்தில் சர்பானுக்கும் இரண்டாவது மஞ்சள் அட்டையைக் காட்டி சிவப்பு அட்டையும் காட்டப்பட முதல் பாதி ஆட்டம் முடிவடைவதற்குள் நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஒன்பது வீரர்களோடு விளையாட நேரிட்டது.
நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஒன்பது வீரர்களோடும் விம்பில்டன் விளையாட்டுக் கழகம் பத்து வீரர்களோடும் ஆடிக் கொணடிருக்க போட்டி மேலும் விறு விறுப்பானது.
முதல் பாதியின் இறுதி முயற்சியாய் விம்பில்டன் விளையாட்டுக் கழகத்துக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ஹிமாஸ் அடிக்க உயரே வந்ந பந்தை நயாஜ் தலையால் முட்டி கம்பத்திற்கு அனுப்ப அதை வசீம் கையால் குத்தி விட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
முதல் பாதி: விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 0 – 0 நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம்
மைதானத்தில் ஆதரவாளர்கள் இன்னும் அதிகரித்த வண்ணமே காணப்படனர். இரண்டாம் பாதி, வெற்றியை தீர்மானிக்குமா அல்லது சமநிலைப்படுத்துமா என்ற எதிர்பார்ப்போடு மைதானம் முழுதும் ரசிகர்கள் காத்திருக்க இரு கழக வீரர்களும் களமிறங்கினர்.
போட்டியின் 53ஆவது நிமிடத்தில் மைதானத்தின் அரைப் பகுதியிலிருந்து நியு ஸ்டாரின் அஸ்பான் கம்பம் நோக்கி உதைக்க விம்பில்டன் கோல் காப்பாளர் இம்ரான் இலகுவாகப் பிடித்துக் கொள்ள முயற்சி வீணானது.
போட்டி உணர்ச்சி பூர்வமாக தொடர்ந்து செல்ல 62ஆவது நிமிடத்தில் விம்பில்டன் வீரர் அம்மார் கம்பத்திற்கு அடிக்க அதை நியு ஸ்டார் கோல் காப்பாளர் வசீம் கையால் தட்டிவிட பந்து மீண்டும் அம்மாரின் கால்களுக்கு வர இலகுவாக கோலாக்க வேண்டிய பந்தை கம்பத்திற்கு வெயியே அடிக்க ஏமாற்றத்தின் உச்சத்தினை அடைந்தனர் விம்பில்டன் கழக ஆதரவாளர்கள்.
இவ்வாராக தொடர்ந்து முயற்சிகள் பயனளிக்காமல் சென்று கொண்டிருக்க 75ஆவது நிமிடத்தில் நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அஸ்பான் அடிக்க உயரமாக வந்த பந்தினை பாய்ந்து பற்றிக் கொண்டார் விம்பில்டன் கோல் காப்பாளர் இம்ரான்.
ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் நியு ஸ்டார் கழகத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. விம்பில்டன் கழக வீரர் நிப்ராஜ் கொடுத்த அற்புதமான பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற அம்மார் வேகமாக செயற்பட்டு கம்பத்திற்குள் அடிக்க பந்து நியு ஸ்டார் கோல் காப்பாளர் வசீமின் கைகளில் பட்டவாரே கம்பத்திற்குள் செல்ல விம்பில்டன் கழக ரசிகர்களின் கரகோசத்தில் சாஹிரா மைதானம் அதிர்ந்து போனது.
அடுத்த சில நிமிடத்தில் நியு ஸ்டார் கழகத்திற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அவ்ஸாப் கோல் கனவோடு கம்பம் நோக்கி வேகமாக அடிக்க பந்து கம்பத்தில் பட்டவாரே வெளியேற நியு ஸ்டாரின் கோல் முயற்சி கனவாகவே போனது.
இறுதி நிமிட விறு விறுப்பில் மைதானம் ரசிகர்களின் கரகோசத்தால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட ஒரு கோலையாவது அடித்து சமப்படுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் சிறந்த இளம் வீரர் பைக்கர் கம்பத்திற்கு சற்று தொலைவிலிருந்து அடிக்க பந்து கம்பத்தின் மேல் பக்கத்தில் பட்டவாரே வெளியேற நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் தோல்வியை உறுதிப்படுத்திக் கொண்டது.
போட்டி நிறைவு பெற்றதாக நடுவர் அறிவிக்க மகிழ்ச்சி ஆரவாரத்தோடு விம்பில்டன் கழக ரசிகர்கள் மைதானம் புகுந்தனர். இறுதியில் பலம் மிக்க நியு ஸ்டார் கழகத்தை அதே தரத்தினைக் கொண்ட விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 1 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
முழு நேரம்: விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 1 – 0 நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
விம்பில்டன் விளையாட்டுக் கழகம் – அம்மார் 85’
சிவப்பு அட்டை
நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – இஸ்ஹாம் 43’, சர்பான் 44’
விம்பில்டன் விளையாட்டுக் கழகம் – சரீக் 30’மஞ்சள் அட்டை
நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – இஸ்ஹான் 23’, 43’, வசீம் 26’, அவ்ஸாப் 27’, சர்பான் 38’, 44’
விம்பில்டன் விளையாட்டுக் கழகம் – நிஸாத் 26’, அம்மார் 73’