லண்டனில் நடைபெற்றுவருகின்ற 16ஆவது உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதில் 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெள்ளிப் பதக்கங்களை அவ்வணி பெற்றுக்கொண்டுள்ளது.
இப்பட்டியலில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று கென்யா 2ஆவது இடத்தையும், ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற எத்தியோப்பியா 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. மெய்வல்லுனர் உலகின் முதல்நிலை அணியாக விளங்கிய ஜமைக்கா பதக்கப்பட்டியலில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தென்னாபிரிக்க வீரர் வெய்ட் வேன் நீகர்க் 43.98 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
முன்னதாக றியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அவர், குறித்த போட்டியில் உலக சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக் சம்பியன் உசைன் போல்ட் போட்டியிடாவிட்டாலும், 400 மீற்றர் உலக சம்பியனான வெய்ட் வேன் நீகர்க் இம்முறை உலக மெய்வல்லுனர் தொடரில் 200 மீற்றரிலும் முதற்தடவையாக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்ககது. எனவே குறித்த போட்டியிலும் அவர் தங்கம் வெல்வாராயின், 1995ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க வீரர் மிச்செல் ஜொன்சன் நிகழ்த்திய சாதனையை சமப்படுத்திய வீரராகவும் இடம்பெறுவார்.
தனது இறுதி 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தோல்வியை சந்தித்த போல்ட்
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை அள்ளியவரும் உலகின் அதிவேக..
இந்நிலையில், 44.41 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த பஹாமாஸ் வீரர் ஸ்டீவன் கார்டினர் வெள்ளிப் பதக்கத்தையும், 44.48 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த கட்டாரைச் சேர்ந்த அப்தல்லா ஹெரோன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர். இம்முறை உலக மெய்வல்லுன போட்டித் தொடரில் ஆசியாவைச் சேர்ந்த வீரரொருவர் பெற்றுக்கொண்ட முதல் பதக்கமாக அப்தல்லாவின் பதக்கம் பதிவானது.
ஜமைக்காவுக்கு முதல் தங்கம்
சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கங்களை இழந்த ஜமைக்காவுக்கு ஆண்களுக்கான 110 மீற்றர் தடகள ஓட்டப் போட்டியில் களமிறங்கிய ஓமர் மெக்லியொட் முதலிடம் பெற்று அவ்வணிக்காக முதலாவது தங்கப் பதக்கதைப் பெற்றுக்கொடுத்தார். அவர் குறித்த போட்டியை 13.04 செக்கன்களில் நிறைவு செய்ததுடன், தனது பதக்கத்தை தாயாருக்கும், சக நாட்டவர் உசேன் போல்ட்டுக்கும் அர்ப்பணிப்பதாக போட்டியின் பிறகு அறிவித்தார்.
ரஷ்ய மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு ஊக்கமருந்து விவகாரம் தொடர்பில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த நாட்டை சேர்ந்தவரும், இப்போட்டியின் நடப்பு சம்பியன் அந்தஸ்துடன் நடுநிலை வீரராகப் பங்குபற்றிய சேர்ஜி ஷபென்கோவ் (13.14 வினாடிகள்) வெள்ளிப் பதக்கத்தையும், ஹங்கேரி வீரர் பலாஸ் பாஜி (13.28 வினாடிகள்) வெண்கலமும் வென்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் ஒலிம்பிக் சம்பியனான அமெரிக்க வீரர் அரைஸ் மெரிட் 13.31 வினாடிகளுடன் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
வெனிசுலாவுக்கு வரலாற்று வெற்றி
பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெனிசுலா நாட்டு வீராங்கனையான யூலிமார் ரோஜாஸ் 14.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கம் வென்று உலக மெய்வல்லுனர் வரலாற்றில் வெனிசுலாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன் ஒலிம்பிக் சம்பியனும் கொலம்பிய நாட்டு வீராங்கனையுமான கெத்தரின் இபாரகோன் 14.89 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், கஸகஸ்தான் வீராங்கனை ஒல்கா ரிபாக்கோவா 14.89 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
100 மீற்றரில் தங்கம் வென்ற போவி
உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
ஐவரிகோஸ்ட் வீராங்கனை மேரி ஜோசி தாலு 10.86 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், நெதர்லாந்து வீராங்கனை ஸ்சிப்பெர்ஸ் 10.96 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். எனினும், ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்த ஜமைக்கா வீராங்கனை எலைன் தொம்சன், இப்போட்டியில் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டு பதக்கம் வெல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தார்
இலங்கை வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு
லண்டனில் நடைபெற்றுவருகின்ற உலக மெய்வல்லுனர் தொடரில் இலங்கை சார்பாக 4 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக களமிறங்கிய அநுராத இந்திரஜித் குரே மற்றும் ஹிருனி விஜேரத்ன ஆகியோர் போட்டியின் போது ஏற்பட்ட எதிர்பாராத தடங்கல்கள் மற்றும் திடீர் உபாதை காரணமாக போட்டியை நிறைவு செய்ய முடியாமல் விலகிக் கொண்டனர். இதேவேளை, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள நிமாலி லியனாரச்சி பங்குபற்றவுள்ள முதல் சுற்றுப் போட்டி, இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு 12.25 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், ஈட்டி எறிதல் வீரர் வருண லக்ஷான் தயாரத்ன பங்கேற்கவுள்ள போட்டி இலங்கை நேரப்படி நாளை நள்ளிரவு 1.20 மணிக்கு நடைபெறவுள்ளது.