ஆசியாவின் முக்கிய ரக்பி தொடர்களில் ஒன்றான 20 வயதிற்குட்பட்ட ஆசிய செவன்ஸ் ரக்பி தொடரில் பலம் மிக்க ஹொங் கொங் அணியுடனான இறுதிப் போட்டியில் 36-00 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்ற இலங்கை அணி, கிண்ணத்தை தவறவிட்டது.
தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் அபார வெற்றிபெற்ற இலங்கை அணி, இறுதிப் போட்டிக்கு சிறந்த மனநிலையுடன் களத்தில் இறங்கியது. இருந்த பொழுதும் பலம் மிக்க ஹொங்கொங் அணியினரை இலங்கையால் வீழ்த்த முடியவில்லை.
இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே ஹொங்கொங் அணியானது ஆதிக்கம் செலுத்தி வந்தது. இலங்கை வீரர்களை விட பலம் கொண்ட ஹொங்கொங் வீரர்களை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை வீரர்கள் பெரும் முயற்சியை மேற்கொண்டனர். எனினும், இலங்கை அணியினர் பல பெனால்டிகளை வாரி வழங்கியமை தோல்விக்கு முக்கிய காரணியாக இருந்தது.
பெனால்டி வாய்ப்பொன்றை பயன்படுத்திய ஹொங்கொங் அணியானது போட்டியின் முதலாவது ட்ரையினை வைத்தது. இலங்கை அணி வீரர்களை பலத்தினால் தாண்டிச் சென்ற அவ்வணி வீரர் ட்ரை வைத்தார். எனினும் கொன்வெர்சனை தவறவிட்டனர்.
ஆசிய 7s ரக்பி போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதிபெற்ற இலங்கை
20 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி போட்டிகளில் முதல் நாளான இன்று (4) இலங்கை அணி தாம் பங்குபற்றிய அனைத்து போட்டிகளிலும் …
அத்தோடு இலங்கை அணியின் தினுக் அமரசிங்கவிற்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால், இலங்கை அணியானது 6 வீரர்களுடன் களத்தில் விளையாடியது. இதனை பயன்படுத்திக்கொண்ட ஹொங்கொங் அணியானது முதல் பாதியில் மேலும் 3 ட்ரைகளை வைத்து வலுவான நிலையை அடைந்தது. மூன்று கொன்வெர்சனையும் பூர்த்தி செய்தமையால் ஹொங்கொங் அணி 26-00 என முதற் பாதியில் முன்னிலை பெற்றது.
இலங்கை அணி வீரர்களின் சிறு தவறுகளினாலும், பந்தை நழுவவிட்டதாலும் ஹொங்கொங் அணியினர் இலகுவாக புள்ளிகளை பெற்றுக்கொண்டனர்.
முதல் பாதி: ஹொங்கொங் 26-00 இலங்கை
இரண்டாம் பாதியில் இலங்கை அணி மாற்றத்தை ஏற்படுத்துமா என எதிர்பார்த்த பொழுதும், தொடர்ந்தும் ஹொங்கொங் அணியே ஆதிக்கம் செலுத்தியது.
இலங்கை அணி வீரர்களை தமது பலத்தாலும், வேகத்தாலும் இலகுவாக கடந்து சென்ற ஹொங்கொங் அணியினர், 2ஆம் பாதியில் மேலும் இரண்டு ட்ரை வைத்தனர். இலங்கை அணியினர் புள்ளிகளை பெறுவதற்கு கடுமையாக முயற்சித்த பொழுதும், அவர்களால் இரும்பு போன்ற ஹொங்கொங் வீரர்களை கடக்க முடியவில்லை.
இறுதியில் இலங்கை அணி எந்த ஒரு புள்ளிகளும் பெறாத நிலையில் போட்டி முடிவடைந்தது.
முழு நேரம்: ஹொங்கொங் 36-00 இலங்கை
சென்ற வருடம் ஹொங்கொங் அணிக்கு சவால் கொடுத்து கிண்ணத்தை சுவீகரித்த பொழுதும், இம்முறை இலங்கை அதை தவறவிட்டது. சென்ற வருடம் போல் இந்த வருட போட்டிகள் 2 கட்டங்களாக நடைபெறாது என்பதால் ஹொங்கொங் அணி மகுடம் சூடியது.
அரையிறுதி – இலங்கை எதிர் கொரியா
கொரியாவுடனான அரையிறுதியில் சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டிய இலங்கை அணி 33-05 என இலகுவாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது. கொரிய வீரர்கள் இலங்கை அணி வீரர்களை விட பலம் கொண்டவர்களாக காணப்பட்டாலும், இலங்கை அணி தனது வேகம் கலந்த திறமையினால் ஆதிக்கம் செலுத்தியது.
அதீஷ இலங்கை அணி சார்பாக முதலாவது ட்ரை வைத்து புள்ளியை ஆரம்பித்து வைத்தார்.சுபுனின் கொன்வெர்சனுடன் இலங்கை அணி 07-00 என முன்நிலை பெற்றது.
புகைப்படங்களைப் பார்வையிட
ஆசிய 7s ரக்பி போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதிபெற்ற இலங்கை
20 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி போட்டிகளில் முதல் நாளான இன்று (4) இலங்கை அணி தாம் பங்குபற்றிய அனைத்து…
தொடர்ந்து தலைவர் நவீன் தனது திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்து, இப் போட்டித் தொடரில் தனது 7ஆவது ட்ரையை வைத்து அசத்தினார். சுபுன் கொன்வெர்சனை தவறவிடவில்லை (14-00)
கொரிய அணியானது அதிரடியாக செயற்பட்டு முதல் ட்ரையை வைத்து பதிலடி கொடுத்தது. இலங்கை வீரர்களின் மோசமான தடுப்பினை பயன்படுத்திக்கொண்ட கொரிய வீரர்கள் ட்ரை கோட்டினை கடந்தனர். (14-05)
முதல் பாதி: இலங்கை 14- 05 கொரியா
இரண்டாம் பாதியில் இலங்கை அணி மீண்டும் தனது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தலைவர் நவீன் தொடரில் தனது 8ஆவது ட்ரையை வைக்க இலங்கை அணி 21-05 என முன்னிலை பெற்றது.
வெற்றி உறுதி பெற்ற நிலையில் இலங்கை மாற்று வீரர்களை களத்தில் இறக்கியது. தனது கோட்டையினுள் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட சுரங்க பண்டார தனது தனி திறமையால் எதிரணி வீரர்களை கடந்து சென்று ட்ரை வைத்தார். (26-05)
போட்டியின் இறுதி ட்ரையையும் இலங்கை அணியே வைத்தது. வஜீத் பவ்மியின் அற்புதமான பந்துப் பரிமாற்றத்தைக் பெற்றுக்கொண்ட சமோத் பெர்னாண்டோ இறுதியாக ட்ரை கோட்டை கடந்தார். வெற்றிகரமான கொன்வெர்சனுடன் போட்டி நிறைவுக்கு வந்தது.
முழு நேரம்: இலங்கை 33-05 கொரியா
இலங்கை எதிர் சைனீஸ் தாய்ப்பேய்
முதலாம் நாளில் தாம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற நிலையில் இலங்கை அணி, இன்றைய முதல் ஆட்டமாக இப்போட்டியில் களம் இறங்கினர். எனினும், நேற்றைய போட்டிகளை விட இன்றைய போட்டியில் சற்று மோசமான விளையாட்டையே வெளிப்படுத்தியது.
நேற்றைய நாளின் நட்சத்திர வீரரான தலைவர் நவீன் மீண்டும் ஒரு முறை தனது திறமையை நிரூபித்து முதலாவது ட்ரை வைத்து இலங்கை அணியை முதலாம் நிமிடத்திலேயே முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். எதிரணி வீரர் தவறவிட்ட பந்தை பெற்றுக்கொண்ட நவீன், தனது வேகத்தை உபயோகித்து எதிரணி வீரர்களை தாண்டி சென்று மைதானத்தில் வலது பக்க ஓரத்தில் ட்ரை வைத்தார். சமோத் பெர்னாண்டோ கடினமான கொன்வெர்சனை சிறப்பாக உதைத்து 2 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.(07-00)
விட்டுக்கொடுக்காத சைனீஸ் தாய்பேய் அணியானது, ட்ரை ஒன்று வைத்து பதிலடி கொடுத்தது. சைனீஸ் தாய்பேய் அணியின் ச்சே சாங் கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். அவர்கள் அதற்கான கொன்வெர்சனையும் பூர்த்தி செய்ய புள்ளிகள் சமநிலை அடைந்தன.
தொடர்ந்து இலங்கை களத்தில் சிறிது தடுமாறியது. அதிகளவில் பெனால்டி வாய்ப்புகளை வாரி கொடுத்ததால் இலங்கை அணி புள்ளிகளை பெரும் வாய்ப்புகளை இழந்தது. எனினும் முதல் பாதி நிறைவடைய சிறிது நேரம் இருக்கும் வேளையில் மற்றுமொரு ட்ரை வைத்து நவீன் உலகிற்கு தமது திறமையை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டினார். சமோத் பெர்னாண்டோவின் கொன்வெர்சனுடன் 7 புள்ளிகள் முன்னிலையுடன் இலங்கை அணி முதல் பாதியை முடித்துக்கொண்டது.
முதல் பாதி: இலங்கை 14 – 07 சைனீஸ் தாய்பேய்
தனது தவறுகளை திருத்திக்கொண்டு இரண்டாம் பாதியில் அசத்துவதற்கு களமிறங்கிய இலங்கை அணிக்கு, முதலாவது நிமிடத்திலேயே கம்பத்தின் அடியில் ட்ரை வைத்து சைனீஸ் தாய்பேய் அணி அதிர்ச்சி கொடுத்தது. வெற்றிகரமான கொன்வெர்சனுடன் புள்ளிகள் மீண்டும் ஒரு முறை சமநிலை பெற்றன.
வெற்றிபெறுவதற்கு தனது தவறுகளை திருத்தி சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த இலங்கை அணி, அதை சிறப்பாக செயற்படுத்தி மேலும் இரண்டு ட்ரைகளை வைத்தது.
மீண்டும் ஒரு முறை தனது பலத்தால் நவீன் எதிரணி வீரர்களை கடந்து சென்றாலும், எதிரணி வீரர்களால் தடுக்கப்பட்டார். எனினும் அவர் சிறப்பாக தீக்ஷணவிற்கு பந்தை வழங்க, தீக்ஷண கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். சமோத் இலகுவான கொன்வெர்சனை தவறவிடவில்லை. இலங்கை அணி 7 புள்ளிகளால் மீண்டும் ஒரு முறை முன்னிலை பெற்றது.(21-14)
தொடர்ந்து தமக்கு கிடைத்த பெனால்டியை உடனடியாக எடுத்து அவிஷ்க லீ வேகமாக ஓடி சென்ற பொழுதும், ட்ரை கோட்டின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். எனவே இலங்கை அணி புள்ளிகள் பெறும் வாய்ப்பை தவறவிட்டது.
போட்டியை விட்டுக்கொடுக்காத சைனீஸ் தாய்ப்பேய் அணியானது, இலங்கை அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தது. அவர்கள் மைதானத்தின் இடது ஓரத்தில் ட்ரை கோட்டை கடந்தாலும், சமோத் பெர்னாண்டோவின் அற்புத திறமையினால் அது தடுக்கப்பட்டது. சக நடுவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், நடுவர் அதை ட்ரை இல்லை என்று அறிவித்தார்.
போட்டி நிறைவிடய ஒரு நிமிடம் எஞ்சி இருக்கும் நிலையில் தீக்ஷண தசனாயக கம்பத்தின் அடியில் ட்ரை வைத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார். சந்தேஷின் கொன்வெர்சனுடன் இலங்கை அணி 14 புள்ளிகளால் முன்னிலை பெற்ற நிலையில் போட்டியை முடித்தது.
முழு நேரம்: இலங்கை 28- 14 சைனீஸ் தாய்ப்பேய்