இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடும் இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் சாகச துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 439 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஓன் (Follow on) செய்யவேண்டி ஏற்பட்டது. எனினும் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் இலங்கை அணிக்காக 22 வயதுடைய இளம் வீரர் குசல் மெண்டிஸ் சதம் பெற்று அணியை வலுப்பெறச் செய்துள்ளார்.
இந்திய அணி 622 ஓட்டங்கள் பெற இலங்கை தட்டுத்தடுமாற்றம்
எனினும் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே இரண்டு
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்களை பெற்ற நிலையிலேயே மூன்றாவது நாளான சனிக்கிழமை (05) தனது ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும் மேலும் 133 ஓட்டங்களை பெறுவதற்குள் எஞ்சிய எட்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இலங்கையின் மோசமான இன்னிங்ஸ்
எட்டு ஓட்டங்களுடன் இன்றைய தின ஆட்டத்தை ஆரம்பித்த அணித்தலைவர் டினேஷ் சந்திமால் ரவின்திர ஜடேஜாவின் பந்துக்கு ஹர்திக் பாண்டியாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 10 ஓட்டங்களையே பெற்றார். பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த குசல் மெண்டிஸ் யாதவ் வீசிய ஓவரில் பந்தை உயர்த்தியபோது அணித்தலைவர் விராட் கோலியிடம் பிடிகொடுத்தார். அவரால் 24 ஓட்டங்களையே பெறமுடிந்தது.
பின்னர் அஞ்செலோ மெதிவ்சும் (26) சொற்ப ஓட்டங்களுக்கு ரவிச்சந்திரன் அஷ்வினின் பந்துக்கு ஆட்டமிழந்ததோடு, அசேல குணரத்னவுக்கு பதில் அணிக்கு அழைக்கப்பட்ட தனன்ஜய டி சில்வா, தான் முகம்கொடுத்த முதல் பந்திலேயே போல்டானார்.
டி சில்வாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை எட்டினார். 32 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜடேஜா இடது கை பந்துவீச்சாளராக இந்த இலக்கை வேகமாக ஏட்டியவராவார். முன்னர் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜோன்ஸன் 34 டெஸ்டுகளில் 150 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாகும்.
இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் நிரோஷன் திக்வெல்ல மாத்திரம் அரங்கில் இருந்த இலங்கை ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தி வேகமாக ஓட்டங்களை குவித்தார். ஒரு சிக்ஸர், ஏழு பௌண்டரிகளை விளாசிய அவர் 48 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்ற நிலையில் மொஹமட் ஷமியின் பந்தில் போல்டானார்.
கடைசியில் இலங்கை அணி 49.4 ஓவர்களில் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சுக்கு பெற்ற 622 ஓட்டங்களை விடவும் இலங்கை 439 ஓட்டங்களால் பின்தங்கியது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி அதிக ஓட்டங்களால் பின்தங்கிய சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த 2000 ஆம் ஆண்டு காலியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 419 ஓட்டங்களால் பின்தங்கி இருந்ததே இதற்கு முன்னர் அதிகமான தொகையாக இருந்தது. இலங்கை அணி இதுவரை நான்கு தடவைகள் 400 ஓட்டங்களுக்கு மேல் பின்தங்கியுள்ளது.
மறுபுறம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் மூன்றாவது அதிகூடிய ஓட்ட முன்னிலையாக இது பதிவாகியுள்ளது. 2007இல் டாக்காவில் நடந்த பங்களாதேசுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 492 ஓட்டங்களால் முன்னிலைபெற்றதே இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
அஷ்வின் சாதனை
குறிப்பாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் அஷ்வின் 16.4 ஓவர்களில் 69 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 26ஆவது தடவையாகும். இதன்போது ஹர்பஜன் சிங்கை (25) பின்தள்ளி இந்தியா சார்பில் அதிக தடவை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் அஷ்வின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தாகவே இரண்டாவதாக உள்ளார்.
‘பலோ ஓன்’ செய்த இலங்கை
இலங்கை அணி இந்த டெஸ்டில் பலோ ஓன் செய்வதை தவிர்ப்பதற்கு 372 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையிலேயே அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் 200 ஓட்டங்களைக் கூட பெறாமல் தமது விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இலங்கையை பலோ ஓன் செய்து தனது இரண்டாவது இன்னிங்சுக்காக மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி கோலி அழைப்பு விடுத்தார்.
இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்கும் நோக்குடன் இன்று பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே சரிவை சந்திக்கவேண்டி ஏற்பட்டது.
முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானா அனுபவ வீரர் உபுல் தரங்க இரண்டாவது இன்னிங்ஸிலும் நிலைத்திருக்க தவறினார். யாதவ் வீசிய புல் லென்த் (Full-length) பந்தை தனது துடுப்புக்கும் கால் கவசத்திற்கும் இடையில் அதிக இடைவெளி வைத்துக்கொண்டு முகம் கொடுக்க முயன்ற தரங்க போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரால் 2 ஓட்டங்களையே பெற முடிந்தது. அப்போது இலங்கை அணி 7 ஓட்டங்களுடன் இருந்தது.
திமுத், குசல் அபாரம்
எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் இலங்கை அணி இந்த தொடரில் இதுவரை காட்டாத துடுப்பாட்ட சாகசத்தை நிகழ்த்தினார்கள்.
ஒரு மணி நேரத்திற்கு முன் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பந்துக்கு முகம்கொடுக்க தடுமாறிய அதே ஆடுகளத்தில் இந்த இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை தடுமாறச் செய்தனர். குறிப்பாக குசல் மெண்டிஸ் தயக்கமின் பந்துகளை அனைத்து திசைகளிலும் செலுத்தி ஓட்டங்களை எடுத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தை பெற்ற மெண்டிஸ் திமுத் கருணாரத்னவுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 191 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பலோ ஓன் செய்த போட்டி ஒன்றில் இரண்டாவது விக்கெட்டுக்கு பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் இதுவாகும்.
இந்திய தொடரிலிருந்து வெளியேறினார் நுவன் பிரதீப்
இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 81ஆவது ஓவரை வீசும்போது இடது
1985 ஆம் ஆண்டு கிங்ஸ்டனில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நியூஸிலாந்து வீரர்களான ஜெப் கிரோ மற்றும் ஜெப் ஹோவார்த் பெற்ற 210 ஓட்டங்களுமே இதன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது குசல் மெண்டிசுடன் மறுபுறத்தில் ஆடிய திமுத் கருணாரத்ன பந்தை அடித்தாட தயக்கம் காட்டியதோடு மிக நிதானமாக ஓட்டங்களைப் பெற்றார்.
மூன்றாம் நாள் அட்டநேரம் முடிவடையும் கடைசி தறுவாயில் குசல் மெண்டிஸ் பாண்டியாவின் பந்துக்கு ஆட்டமிழந்தார். 135 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 17 பௌண்டரிகளுடன் 110 ஓட்டங்களை பெற்றார். அவரது 68 ஓட்டங்கள் பௌண்டரிகள் மூலமே பெறப்பட்டன.
இதன்படி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி 60 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களை பெற்றுள்ளது.
சிறப்பாக ஆடிவரும் திமுத் கருணாரத்ன 200 பந்துகளில் 12 பௌண்டரிகளுடன் 92 ஓட்டங்களோடு களத்தில் உள்ளார். மறுபுறம் இலங்கையின் சவாலான இரண்டாவது இன்னிங்ஸை தொடர நைட் வொட்ச்மனாக (knight watchman) களமிறங்கிய மலின்த புஷ்பகுமார 2 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் இன்னும் 230 ஓட்டங்களை பெறவேண்டி உள்ளது.
ஏற்கனவே முதல் டெஸ்டில் தோல்வி அடைந்திருக்கும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டிலும் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க வேண்டி ஏற்படும்.
நாளை போட்டியின் நான்காவது நாளாகும்.