இந்திய அணி 622 ஓட்டங்கள் பெற இலங்கை தட்டுத்தடுமாற்றம்

705

இந்திய அணியின் கடைசி வரிசை வீரர்களும் கைகொடுக்க இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 622 என்ற இமாலய ஓட்டங்களை எட்டியுள்ளது.

எனினும் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தட்டுத்தடுமாறுகிறது. கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஆட்டநேர முடிவின்போது இலங்கை அணி இன்னும் 8 விக்கெட்டுகள் மாத்திரம் கைவசம் இருக்க 572 ஓட்டங்களால் பின்தங்கி காணப்படுகின்றது.

இலங்கை அணி போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்கும் நோக்கில் பலோ ஓன் (Follow on) செய்வதை தவிர்ப்பதற்கு குறைந்தது 372 ஓட்டங்களை பெறவேண்டியுள்ளது.      

இந்திய அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 344 ஓட்டங்களை பெற்ற நிலையிலேயே இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்தது. சிதேஷ்வர் புஜாரா (128) மற்றும் அஜின்கியா ரஹானே (103) என இருமுனைகளில் இருந்த வீரர்களும் சதம் பெற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.

எனினும் இலங்கை அணி, பந்துவீச்சாளர்களின் தட்டுப்பாட்டுடனே இன்று காலை ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அணியில் இணைக்கப்பட்ட ஒரே ஒரு விசேட வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் முதல்நாளில் தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் ஓய்வறை சென்ற நிலையில் அவர் முதல் இன்னிங்ஸில் தொடர்ந்து பந்துவீச திரும்பவில்லை.

இதனால் மாற்றுத் தேர்வு இல்லாத நிலையில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன இரண்டாவது புதிய பந்தால் மிதவேகப்பந்து வீச அழைக்கப்பட்டார். அவரது பந்துவீச்சு இலங்கை அணிக்கு பயன்கிடைத்தது. இரண்டாவது நாளின் இரண்டாவது ஓவரை வீசிய கருணாரத்ன புஜாராவின் விக்கெட்டை lbw முறையில் வீழ்த்தினார். நடுவரிடம் மேன்முறையீடு செய்தே இலங்கை அணியால் அந்த விக்கெட்டை பறிக்க முடிந்தது.

கருணாரத்ன 41 டெஸ்ட் போட்டிகளில் காத்திருந்த பின் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

232 பந்துகளுக்கு முகம்கொடுத்த புஜாரா 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 133 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இன்றைய தினத்தில் அவர் மேலதிகமாக 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

மறுபுறத்தில் ரஹானே நிதானத்தோடு ஓட்டங்களை குவித்து வந்தபோதும் தனது கன்னி டெஸ்டில் விளையாடும் மலிந்த புஷ்பகுமார கடைசியில் தனது முதலாவது டெஸ்ட் விக்கெட்டாக ரஹானேவை வீழ்த்தினார்.

ஹத்துருசிங்க இலங்கை அணிக்கல்ல, 2019 வரை பங்களாதேஷ் அணிக்கு

இலங்கை அணி வீசிய 111ஆவது ஓவராக புஷ்பகுமார எறிந்த முதல் மூன்று பந்துகளுக்கும் தடுமாற்றம் கண்ட ரஹானே நான்காவது பந்தில் முன்னால் வந்து அடித்தாட முயன்றபோது அதிகம் சுழன்ற பந்து விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவிடம் செல்ல அவர் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். முதல்தர போட்டிகளில் 558 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் புஷ்பகுமார 559 ஆவதாக முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.

ரஹானே 222 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 132 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இலங்கை அணி இந்தியாவின் முதல் ஐந்து விக்கெட்டுகளை 413 ஓட்டங்களில் வீழ்த்திய நிலையிலும் அந்த அணியின் கடைசி வரிசை வீரர்களும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் போட்டி மேலும் இந்திய அணிக்கு சாதமாகியது.

குறிப்பாக இந்திய அணியின் இன்றியமையாத சுழற்பந்து வீச்சாளராக மாறியிருக்கும் ரவிச்சந்தர் அஷ்வின் அடிக்கடி துடுப்பாட்டத்திலும் தனது திறமையை வெளிப்படுத்திவருகிறார்.

ஒரு பந்தை சிக்ஸர் வரை செலுத்திய அஷ்வின் களத்தடுப்பாளர்களுக்கு இடையே கச்சிதமாக பந்துகளை அடித்து பவுண்டரிகளையும் பெற்றுக்கொண்டார். இதன்மூலம் அவர் தனது 11ஆவது அரைச் சதத்தை பெற்றபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக 2000 ஓட்டங்களை அடைந்தார்.

அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெறும் 15 சகலதுறை வீரர்கள் மாத்திரமே 2000 ஓட்டங்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் என்ற இலக்கை எட்டியுள்ளனர். இதில் அஷ்வின் மற்றைய வீரர்களை விடவும் விரைவாக 51 போட்டிகளில் இந்த இலக்கை அடைந்துள்ளார்.

எனினும் தனது 40 வயதை நெருங்கியிருக்கும் அனுபவ வீரர் ரங்கன ஹேரத் வழமையை விடவும் மிக வேகமாக வீசிய பந்தில் நிலை தடுமாறிய அஷ்வின் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது ஹேரத் மணிக்கு 91 மைல் வேகத்தில் பந்தை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று விக்கெட் காப்பாளர் விர்திமன் சாஹாவும் இந்திய அணிக்காக அரைச்சதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டார். சாஹாவின் விக்கெட்டையும் ஹேரத் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

சாஹா மற்றும் அஷ்வினின் அரைச் சதங்களால் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் ஒருமுறை 500 ஓட்டங்களைக் கடந்து ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அதாவது இந்திய அணி கடந்த 12 மாதங்களில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 500 ஓட்டங்களை எடுப்பது இது 9ஆவது முறையாகும்.  

குறிப்பாக 9ஆவது வரிசையில் துடுப்பாட வந்த ரவிந்திர ஜடேஜாவும் இலங்கை அணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அவரின் வேகமான ஆட்டத்தில் இந்திய அணி 600 ஓட்டங்களைத் தாண்டி இமாலய இலக்கொன்றை எட்ட முடிந்தது. இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும் தனது ஓட்டங்களை போதுமான வரை அதிகரித்துக் கொண்ட பின்னரே ஆட்டத்தை இடைநிறுத்தி இலங்கை அணியை தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க அழைத்தது.

கடைசி வரிசையில் வந்த ஜடேஜா இந்திய அணிக்காக மற்றொரு அரைச்சதத்தை பெற்றார். அதாவது இந்திய அணிக்காக 9ஆவது இலக்க வீரர் அரைச்சதம் பெறப்படுவது இது 47ஆவது தடவையாகும். இந்திய இன்னிங்ஸ் இடைநிறுத்தப்படும்போது ஜடேஜா 85 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களைப் பெற்றார்.

இது இந்திய அணிக்காக 9ஆவது வரிசை வீரர் ஒருவர் பெற்ற 9 ஆவது அதிக ஓட்டங்களாகும். இந்தியாவின் 9ஆவது வரிசையில் வந்த ஒரே ஒரு துடுப்பாட்ட வீரர் மாத்திரமே சதம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் மொத்தம் ஆறு வீரர்கள் 50 இற்கு மேல் ஓட்டங்களை பெற்றனர். இது வெளிநாட்டு டெஸ்ட் ஒன்றில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அணியின் அதிகபட்சமாகும். குறிப்பாக இந்திய அணியின் கடைசி வரிசை வீரர்களும் சிறந்த துடுப்பாட்ட சராசரிசை கொண்டிருப்பது இந்த இலக்கை எட்ட சாதகமாகியுள்ளது.   

இதன்படி இந்திய அணி 158 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 622 ஓட்டங்களை பெற்றபோது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. கடந்த ஒன்பது மாதங்களில் இந்திய அணி 600 ஓட்டங்களைக் கடப்பது இது ஆறாவது தடவையாகும்.

இலங்கை சார்பில் ரங்கன ஹேரத் மீண்டும் ஒருமுறை அதிக ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கன்னி டெஸ்டில் ஆடும் புஷ்பகுமாரவும் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இலங்கை அணியில் மூன்று விசேட சுழற்பந்து வீச்சாளர்களே எஞ்சி இருந்ததால் அவர்களே முழு இன்னிங்ஸிலும் தொடர்ந்து பந்துவீச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நுவன் பிரதீப் இன்றைய தினத்தில் பந்துவீசாதபோதும் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவார் என்று இலங்கை அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு பின்னர் பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்தது. இலங்கை இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரை வீசவந்த அஷ்வின் இன்றைய தினத்தில் வீசிய மிக மோசமான பந்தொன்றுக்கு தவறாக ஆடிய உபுல் தரங்க ஷோட் லெக் (Short leg) திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த லோகேஷ் ராகுலிடம் பிடிகொடுத்து ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி தனது ஓட்டக்கணக்கை ஆரம்பித்திருக்கவில்லை.

மறுமுறையில் ஆடிய திமுத் கருணாரத்னவும் நின்றுபிடிக்கவில்லை. ஸ்திரமாக ஆடிவந்த அவர் 25 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அஷ்வினின் பந்தில் ஸ்லிப் திசையில் இருந்த ரஹானேவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவின்போது 20 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 50 ஓட்டங்களை பெற்றுள்ளது. குசல் மெண்டிஸ் 48 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ஓட்டங்களுடன் களத்தில் இருப்பதோடு மறுமுனையில் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் சிக்ஸர் ஒன்றை விளாசி 8 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காது காணப்படுகிறார்.

10 ஓவர்கள் வீசிய அஷ்வின் 38 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும்.

scorecards