இந்தியாவுடனான முதலாவது டெஸ்டில் சந்தித்த மோசமான தோல்வி மற்றும் அணி வீரர்களை தொற்றி இருக்கும் தொடர் காயங்களுக்கு மத்தியில் இலங்கை அணி பெரும் திருப்புமுனையை தேடி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது.
மறுபுறம் எதிரணியை சரணடையச் செய்யும் ஆட்டத்தை தக்கவைக்கும் இலக்கோடு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீண்டும் ஒருமுறை இலங்கை அணியை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ளது.
கொழும்பு SSC மைதானத்தில் வியாழக்கிழமை ஆரம்பமாகவிருக்கும் இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் சவால் கொண்டதாகவே அமையப்போகிறது.
இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் இணைக்கப்பட்ட திரிமான்ன, சந்தகன்
காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து அசேல குணரத்ன மற்றும்…
காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கையை துவம்சம் செய்து 304 ஓட்டங்களால் பெற்ற வெற்றி அந்த அணி வெளிநாட்டு மண்ணில் பெற்ற மிகப்பெரிய வெற்றி. மறுபக்கம் இலங்கை அணி சந்தித்த மிகப்பெரிய தோல்வி அது.
எனவே, தற்போதைய சந்தர்ப்பத்தில் இரு அணிகளினதும் ஏற்றத்தாழ்வு அதிக இடைவெளி கொண்டதாக இருக்கிறது. குறிப்பாக இலங்கை அணிக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக மாறிவிட்டது.
ஜிம்பாப்வேயிடம் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து பெரும் சரிவை சந்தித்த இலங்கை, டெஸ்ட் தொடரில் சாதனை வெற்றி பெற்றாலும் ஒப்பீட்டளவில் பலவீனமான அணியொன்று என்ற வகையில் ஜிம்பாப்வேயிடம் சற்று தடுமாற்றம் கண்டது உண்மையே.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்த பட்டியலின் முதல் மூன்று இடங்களில் இந்த ஆண்டில் எதிர்கொண்ட இரண்டு தோல்விகள் அடங்குகின்றன. இதற்கு முன்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கேப்டவுனில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 282 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.
உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியாக இருக்கும் இந்தியா, இலங்கையுடனான டெஸ்டில் எதிர்நோக்கும் சவால் வித்தியாசமானது. அது பெரும்பாலும் கௌரவம் சார்ந்ததாக மாறி இருக்கிறது.
இலங்கை அணி பலவீனம் கொண்டிருப்பினும் தனது அணியின் சிறிய சறுக்கலும் பெரிதாக காட்டிக்கொடுத்து விடும் என்ற பயம் கோலிக்கு இருக்கிறது. எனவே, ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இலங்கை அணி தலைதூக்க விடாமல் வைத்திருக்க இந்தியா இரண்டாவது டெஸ்டிலும் முயற்சிக்கும்.
இலங்கை அணியை துரத்தும் காயங்கள்
தற்போதைய சூழலில் இலங்கை அணியின் பலவீனங்கள் ஒருபக்கம் இருக்க, அணி வீரர்களின் தொடர் காயங்கள் மேலும் நெருக்கடி கொடுக்கும் விடயமாக உள்ளது.
முதலாவது டெஸ்ட் ஆரம்பித்து முதல் நாளிலேயே இலங்கை அணி பெரிதும் நம்பி இருந்த அசேல குணரத்னவின் பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. கடைசியில் அவர் இந்த சுற்றுப்போட்டியில் இருந்தே வெளியேறினார்.
இலங்கை அணியின் இன்றியமையாத மற்றொரு வீரரான அனுபவ சுழற்பந்து வீச்சாளரும் துணைத் தலைவருமான ரங்கன ஹேரத்தின் நிலைமையும் சந்தேகத்திற்கு இடமானது. முதலாவது டெஸ்டின்போது ஹேரத்தின் நடுவிரலில் காயம் ஏற்பட்டது. முறிவு ஏற்படாத போதும் இதே விரலில் மூன்று ஆண்டுகளுக்கு முன் கயமடைந்ததால் அவர் அதிக வேதனையை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.
இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ள அண்மைக்கால தொடர் உபாதைகள்
கிரிக்கெட் வீரர்கள் தகுதிபெற்ற ஊழியர்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்களாக…
‘அவரது உடல் தகுதி பற்றி உறுதி செய்வதற்கு கடைசி நிமிடம் வரை காத்திருப்போம். டெஸ்டுக்கு முந்திய தினத்தில் அவரால் பந்தை சுழற்ற முடியுமா என்று பார்ப்போம். அதற்கு பின்னர் அடுத்த கட்ட முடிவை எடுப்போம்‘ என்று ஹேரத்தின் நிச்சயமற்ற தன்மை குறித்து இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க குறிப்பிட்டார்.
இது தவிர முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலும் காயத்தால் அவதிப்படுகிறார். அவரது முதுகுப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் தசைப்பிடிப்பால் கடந்த ஒருசில வாரங்களாகவே வேதனையை அனுபவித்து வருகிறார். ஜிம்பாப்வே தொடரில் இருந்தே லக்மால் இந்த வேதனையில் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.
இதனாலேயே அவர் முதல் டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. இந்த நிலைமையில் இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இதனால் நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகிய மூவருமே இலங்கை அணியிடம் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக எஞ்சி இருக்கிறார்கள்.
இந்த காயங்களுக்கு இடையில் ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நிமோனிய காய்ச்சல் காரணமாக முதல் டெஸ்டில் விளையாட முடியாமல்போன அணித்தலைவர் டினேஷ் சந்திமால் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
கடந்த மாதமே டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்ட சந்திமால், நெருக்கடிக்கு மத்தியிலும் ஜிம்பாப்வேயுடனான டெஸ்டில் அணியை வெற்றிவரை அழைத்துச் சென்றார். எல்லாவற்றுக்கும் மேலே துடுப்பாட்ட வரிசையில் அவரது அனுபவம் அணிக்கு கட்டாயம் தேவையாக உள்ளது.
காலியில் தனது கன்னி டெஸ்டில் ஆடிய தனுஷ்க குணதிலக்க இரண்டாவது டெஸ்டில் தனது இடத்தை சந்திமாலுக்கு விட்டுக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் இரண்டாவது டெஸ்டுக்கான இலங்கை அணியில் மேலும் இரண்டு முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 13 மாதங்களுக்கு பின் திரிமான்ன இலங்கை அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். 2013 தொடக்கம் 2016 வரை இலங்கை அணியில் நிரந்தர இடம்பிடித்திருந்த திரிமான்ன போட்டிகளில் சோபிக்க தவறியதாலேயே அணியில் தனது இடத்தை இழந்தார்.
அண்மைக்காலமாக முதல்தர போட்டிகளில் திறமையாக ஆடி வரும் திரிமான்ன இந்தியாவுடனான பயிற்சிப் போட்டியில் அரைச்சதம் எடுத்து தனது தகுதியை நிரூபித்திருக்கிறார். அசேல குணரத்னவுக்கு பதில் அணியில் இடம்பிடித்திருக்கும் திரிமான்ன நாளைய போட்டியில் மூன்றாவது வரிசை வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.
அதேபோன்று இரண்டாவது டெஸ்டில் சுரங்க லக்மால் இல்லாத இடத்திற்கு இடது கை சுழற்பந்து வீச்சாளர் லக்ஷான் சதகன் அழைக்கப்பட்டுள்ளார்.
23 வயதுக்கு உட்பட்ட மாகாண சம்பியன் கிண்ணம் மத்திய மாகாண அணி வசம்
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்பட்ட 23 வயதுக்கு..
சதகன் இணைக்கப்பட்டிருப்பதன் மூலம் SSC போட்டியில் இலங்கை அணி சுழற்பந்து வீச்சு வரிசையை வலுச்சேர்க்க முயற்சிப்பது தெரிகிறது. சதகனின் வருகை மூலம் இலங்கை பதினொருவர் குழாமுக்கு நான்கு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே ரங்கன ஹெரத்துடன் டில்ருவன் பெரேரா மற்றும் மலின்த புஷ்பகுமார ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கை குழாமில் உள்ளனர்.
திருப்புமுனைக்கு எதிர்பார்ப்பு
காலி டெஸ்டில் இலங்கை அணி தோல்வி அடைந்தபோதும் அணியின் சில வீரர்கள் தமது திறமையை காட்டி இருந்தனர். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் நுவன் பிரதீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சுழற்பந்து வீச்சாளரான டில்ருவன் பெரேரா இரண்டு இன்னிங்ஸ்களிலும் நன்றாக துடுப்பெடுத்தாடி இருந்தார். ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்ன இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார்.
இந்நிலையில் அனுபவ வீரர்களான உபுல் தரங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், அணித்தலைவர் சந்திமாலும் துடுப்பாட்டத்தில் கைகொடுத்தால் இந்தியாவுக்கு சவால் விடுப்பது கடினமாக இருக்காது.
இலங்கை அணி இந்தியாவுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என்று பின்னிற்கிறது. இந்த நிலையில் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு இரண்டாவது டெஸ்டை தோல்வி அடையாமல் காத்துக்கொள்வது கட்டாயமாகும்.
பூர்த்திபெற்ற அணியை தேடும் இந்தியா
இலங்கை அணியைப் போன்றே இந்திய அணியும் இரண்டாவது டெஸ்டுக்கான பதினொருவர் குழாமை தேர்வு செய்வதில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனினும் இலங்கை அணி, வீரர்களின் தட்டுப்பாட்டால் தனது அணியை நிரப்புவதற்கு வழிதேடும் நிலையில் இந்தியா திறமையான வீரர்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் யாரைக் கொண்டு இறுதி அணியை தேர்வு செய்வது என்று தடுமாறுகிறது.
முதல் டெஸ்டில் ஷிகர் தவான் அதிரடியாக 190 ஓட்டங்களை எடுத்தபோது மறுமுனை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அபினேவ் முகுந்த் வேகமாக 81 ஓட்டங்களை குவித்தார். செடேஷ்வர் புஜாரா மூன்றாவது வரிசையில் 153 ஓட்டங்களை விளாசினார். கோலி முதல் இன்னிங்ஸில் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினாலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காத 103 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய அணியின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாக ஆடியது அணித்தலைவர் கோலிக்கும் பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரிக்கும் புதிய தலையிடியை கொடுத்திருக்கிறது.
இந்திய அணியின் வழக்கமான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் காய்ச்சல் காரணமாக காலி டெஸ்டில் விளையாடவில்லை. அவர் அடுத்த டெஸ்டுக்கு விளையாட தயாராக உள்ளார். இதனால் இந்திய அணிக்கு மற்றொரு துடுப்பாட்ட வீரரை நீக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.
‘இது ஒரு தர்மசங்கடமான நிலைமை‘ என்று ஒப்புக்கொள்கிறார் கோலி. ‘எமது முதல் நான்கு வரிசை வீரர்களும் சிறப்பாக ஆடுகின்றனர்‘ என்றார் அவர்.
‘ஷிகர் மெல்போர்னுக்கு போகவிருந்தவர். காலியில் அவர் 190 ஓட்டங்களை பெற்றார். வாழ்வில் எதுவும் நடக்கலாம். இது ஒரு மிகப்பெரிய தலையிடி என்றபோதும் ஆரோக்கியமானதாகும். குழாமில் இரண்டு, மூன்று ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் இருவருக்கே களமிறங்க முடியும் என்பது எமது வீரர்களுக்கு தெரியும்‘ என்றும் கோலி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த காரணமான தவான் இரண்டாவது டெஸ்டில் இடம்பெறுவார் என்பது உறுதியானது. இந்நிலையில் ராகுல் அணிக்கு திரும்பினால் முகுந்தின் இடம் பறிபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்ட்டை பறிகொடுத்த இலங்கை அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை…
இது தவிர இந்திய அணியில் மாற்றங்கள் நிகழாது என எதிர்பார்க்கலாம். சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்தர் அஷ்வின் மற்றும் ரவின்திர ஜடேஜாவின் ஆட்டம் பற்றி கோலி திருப்தி அடைந்துள்ளார்.
நாளைய டெஸ்ட் போட்டி 29 வயதான புஜாராவின் 50ஆவது டெஸ்ட் போட்டியாகும்.
SSC மைதானம் எப்படி
துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சரிசமமான சாதகபோக்கை கொண்ட கொழும்பு SSC மைதானம் இலங்கை அணிக்கு பரீட்சயமான மைதானமாகும். இங்குதான் இலங்கை அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு அதிக டெஸ்ட் வெற்றிகளையும் பெற்றுள்ளது.
SSC மைதானத்தில் இலங்கை அணி இதுவரை மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 19இல் வென்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வி அடைந்திருப்பதோடு எஞ்சிய 14 போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தன.
எனினும் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இந்த மைதானத்தில் சரிசமமாகவே சோபித்திருக்கிறன. இரு அணிகளும் இதுவரை இங்கு விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை இரண்டிலும் இந்தியா இரண்டிலும் வென்றுள்ளன. நான்கு போட்டிகள் சமநிலையில் முடிந்தன.
எவ்வாறாயினும் இந்திய அணி கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய போட்டி அந்த அணிக்கு பெரும் திருப்பமாக மாறியது. 2015 ஆம் ஆண்டு இந்திய அணி ஓர் அனுபவமற்ற, டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கிய நிலையிலேயே இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அந்த தொடரில் காலியில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கையிடம் தோற்ற இந்திய அணி SSC மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றே தொடரை கைப்பற்றியது. அது தொடக்கம் முன்னேற்றம் கண்ட இந்திய அணி தற்போது தரவரிசையில் முதலிடத்திற்கு வந்துள்ளது.
டெஸ்ட் தரவரிசை
இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நிலையிலேயே இந்த தொடரில் விளையாடுகிறது. என்றாலும் இந்த டெஸ்ட் போட்டி முடிவுகள் இந்திய அணியின் முதல்நிலை அந்தஸ்தில் தாக்கம் செலுத்த வாய்ப்பு குறைவாக உள்ளது. தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பின்னடைவை சந்தித்திருப்பது இந்திய அணிக்கு சாதகமாகியுள்ளது.
இதனால் இந்திய அணி இலங்கையுடனான அடுத்த இரண்டு டெஸ்ட்களில் தோற்றாலும் அது முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.
ஆனால் இலங்கை அணிக்கு தரவரிசையில் முன்னேற்றம் காண இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பு உள்ளது. தற்போது 92 புள்ளிகளுடன் தரநிலையில் ஏழாவது இடத்தில் இருக்கும் இலங்கை இரண்டாவது டெஸ்டில் வென்றால் தனது தரநிலை புள்ளிகளை 95ஆக அதிகரித்துக்கொண்டு ஆறாவது இடத்திற்கு முன்னேறும்.
அதேபோன்று இந்திய அணியுடனான அடுத்த இரண்டு டெஸ்டுகளிலும் வென்று தொடரை கைப்பற்றினால் இலங்கை அணியின் தரநிலை புள்ளிகள் 98 ஆக அதிகரிக்கும். இதன்மூலம் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளை பின்தள்ளி இலங்கையால் தரவரிசையில் 5ஆவது இடத்திற்கு முன்னேற முடியும்.