எந்த விளையாட்டுகளிலும் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். இது கிரிக்கெட் வீரர்களுக்கு விதிவிலக்கல்ல. எனினும், அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி பல்வேறு உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமை இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் தகுதிபெற்ற ஊழியர்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்களாக இருப்பினும், தொடர்ச்சியான இடைவெளியில் வீரர்கள் காயமடைவது தவிர்க்க முடியாத விடயமாகவும் மாறியுள்ளது. இதனால் முக்கிய தொடர்களுக்கான அணித் தேர்வு கடுமையாகவும், சவாலாகவும் அமைந்துவிடுகின்றது.
விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுப் பிரிவின் முன்னாள் தலைவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய மருத்துவக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ”முன்னைய காலங்களைவிட தற்போது கிரிக்கெட் வீரர்கள் ஓய்வினை எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். எனவே இதன்போது ஏற்படுகின்ற உபாதைகளிலிருந்து தப்புவது குறித்து ஒவ்வொரு வீரரும் கவனம் செலுத்துவது காலத்தின் தேவை” என்று கூறினார்.
கிரிக்கெட் உலகில் உறுதியான நிர்வாக கட்டமைப்பு மற்றும் திட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கின்றது. பெரும்பாலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கடினமான காலணிகளை அணிந்திருப்பதால், அடிக்கடி காயங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என அவுஸ்திரேலிய நாட்டு மருத்துவரும், ஒலிம்பிக் வீரருமான நிக்கோலஸ் ஸ்பிரின்ஜன் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை அணி வீரர்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் கால் உபாதைகளை தடுப்பதற்காக எதிர்வரும் காலங்களில் புதிய வகை காலணிகளை அறிமுகப்படுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
முதல் டெஸ்ட்டை பறிகொடுத்த இலங்கை அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை..
பாதத்திற்கு பொருத்தமில்லாத காலணிகள் அணிவதால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வீரர்கள் உபாதைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும், எதிர்வரும் காலங்களில் அதனைக் கட்டுப்படுத்த புதிய வகை காலணிகளை வீரர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.
எனினும், இலங்கை அணி வீரர்களின் அண்மைக்கால உபாதைகள் தொடர்பில் இந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் கடுமையான கருத்துக்களை முன்வைத்திருந்தார். அதிலும் குறிப்பாக இம்முறை சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த மோசமான களத்தடுப்பினை அடிப்படையாகக் கொண்டு பேசப்பட்ட இவ்விடயம் இறுதியில் வீரர்களின் உடற்தகுதி வரைக்கும் வைரலாக பேசப்பட்டன.
இறுதியில் இலங்கை சார்பாக போட்டிகளில் பங்குபற்றுகின்ற வீரர்களுக்கு முழுமையான உடற்தகுதி அவசியம் என்றும், எதிர்வரும் காலங்களில் இலங்கை சார்பாக போட்டிகளில் கலந்துக்கொள்ள செல்லும் அனைத்து வீரர்களும் உடல் தகுதியை நிரூபிக்காவிட்டால் எந்தவொரு அணியிலும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனையடுத்து, ஜிம்பாப்வே அணியுடனான கிரிக்கெட் தொடரிற்கு பெயரிடப்பட்ட இலங்கை அணியின் உடற்தகுதி தொடர்பில் திருப்தியில்லை எனத் தெரிவித்த அமைச்சர், 3 மாதங்களுக்குள் வீரர்கள் தமது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அத்தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
எனினும், கடந்த 2 வருடங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடம்பெற்றிருந்த 7 முக்கிய வீரர்கள் உபாதைகளுக்கு முகங்கொடுத்தனர். இதில் ஒரு சில வீரர்கள் குணமடைந்து அணிக்கு திரும்பினாலும், இன்னும் சில வீரர்கள் ஓய்வில் இருக்கின்றமை இங்கு கவனிக்கத்தக்கது.
மாலிங்கவின் மீள்வருகை
இலங்கை T-20 அணியின் முன்னாள் தலைவரான லசித் மாலிங்க, முழங்கால் உபாதையின் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். எனவே கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண தொடரின் பின்னர் அவர் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. எனினும், உபாதையிலிருந்து பூரண குணமடைந்து கடந்த வருட இறுதிப் பகுதியில் அவர் சர்வதேச போட்டிகளில் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் துரதிஷ்டவசமாக டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டார்.
இதன் காரணமாக, மாலிங்கவுக்கு தென்னாபிரிக்க அணியுடனான T-20 தொடரில் விளையாடுவதற்கு முடியாமல் போனது. எனினும், பெப்ரவரி மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான T-20 போட்டியில் முதற்தடவையாக களமிறங்கிய அவர், அண்மையில் நிறைவடைந்த ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டியிலும் விளையாடியிருந்தார்.
2 வருட ஓய்வில் தம்மிக்க பிரசாத்
கடந்த வருடம் மே மாதம் இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் எசெக்ஸ் பிராந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று நாள் பயிற்சிப் போட்டியின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் உபாதைக்குள்ளானார். தோற்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் அத்தொடரிலிருந்து வெளியேறினார். இலங்கை அணியின் அனுபவ வீரரான தம்மிக்க பிரசாத்துக்கு அடிக்கடி உபாதை ஏற்படுவது வழக்கம்.
ரங்கன ஹேரத்தின் விரலில் முறிவு இல்லை – குருசிங்க
காலியில் நடைபெறும் இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில்…
நியூசிலாந்துக்கு கடந்த 2016இல் இலங்கை விஜயம் செய்திருந்த போதும் கடும் உபாதைக்குள்ளான தம்மிக்க பிரசாத் உடனடியாக நாடு திரும்பி சிகிச்சையுடன் கூடிய ஓய்வு பெற்று வந்தார். இதன்படி பல வருடங்களாக தோற்பட்டையில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த செப்டம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் வைத்து சத்திர சிகிச்சை மேற்கொண்டார். தற்போது பூரண குணமடைந்துள்ள அவர், வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாதம் அளவில் மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்குவார் எனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்திருந்தார்.
துஷ்மன்தவின் முதுகுவலி
இலங்கை அணியின் 24 வயதான வலதுகை இளம் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, கடந்த வருடம் மே மாதம் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்த நிலையில், பின்முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிகிச்சைக்காக நாடு திரும்பியிருந்தார். அத்துடன், நான்கு மாதகாலம் ஓய்வில் இருக்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி பூரண குணமடைந்த அவர், கடந்த வருட இறுதியில் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்துகொண்டார்.
குசல், கபுகெதரவின் திடீர் உபாதை
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தின்பேரில், இடைக்காலத் தடைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, அந்தக் குற்றச்சாட்டிலிருந்து கடந்த வருடம் மே மாதம் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து இலங்கை அணியுடன் இணைந்துகொண்ட குசல், டெஸ்ட் போட்டிகளில் மத்திய வரிசை வீரராகவும், ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும் விளையாடி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 47 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு
முக்கிய காரணமாக இருந்த அவர், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அரைச்சதம் பெறும் வாய்ப்பை இழந்தார்.அதன்பிறகு சிகிச்சைகளுக்காக நாடு திரும்பிய குசலுக்கு 10 வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. எனினும், தற்போது நடைபெற்றுவருகின்ற இந்திய தொடரில் அவர் இடம்பெறாவிட்டாலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான தொடரில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இந்தியாவுடனான போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற பயிற்சியின் போது இலங்கை அணியின் மற்றுமொரு வீரரான சாமர கபுகெதர முழங்கால் காயத்திற்கு உள்ளானார். இதனையடுத்து நாடு திரும்பிய கபுகெதரவுக்கு 4 வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. எனினும், ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டிகளுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட கபுகெதர எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.
தொடரும் மெதிவ்சின் உபாதை
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் கடந்த வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான 4ஆவது ஒருநாள் போட்டியின் போது பின்கால் தசை உபாதைக்கு உள்ளானார். எனவே அவர் ஒரு மாதகாலம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். இதன்படி காலில் சத்திரசிகிச்சை செய்துகொண்ட மெதிவ்சும் கடந்த வருடம் நடைபெற்ற ஜிம்பாப்வேயுடனான தொடரில் இடம்பெறவில்லை.
சிறப்பாக ஆடி போட்டியை சமநிலை செய்தது வட மாகாணம்
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட….
எனினும், கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியின்போது போட்டியின் இறுதி ஓவரில் மெதிவ்ஸ் துரதிஷ்டவசமாக மீண்டும் உபாதைக்குள்ளாகி நாடு திரும்பினார். சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மீண்டும் அணிக்குத் திரும்பிய அவர், பயிற்சிப் போட்டியின் போது மீண்டும் சிறு உபாதைக்குள்ளனார்.
இதனையடுத்து ஓய்வின் பின்னர் அணிக்கு திரும்பிய அவர் துடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது வரை எந்தவொரு போட்டியிலும் அவர் பந்து வீசாமல் விளையாடி வருகின்றமை ஒரு வகையில் இலங்கை அணிக்கு பாதிப்பாக இருந்தாலும், அனுபவம் மிக்க ஒரு வீரரை தொடர்ந்து அணியில் வைத்திருக்க இது ஒரு சிறந்த முறையாக உள்ளது.
நியூமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சந்திமால்
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவரும், துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சந்திமால் கடந்த செப்டெம்பர் மாதம் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சக வீரர் ஒருவரால் வீசப்பட்ட பந்தை பிடிக்க முற்பட்டபோது காயத்துக்கு உள்ளானார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்திமாலுக்கு சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குறித்த காயம் குணமாகும் வரை அவர் எந்தவொரு போட்டிகளிலும் விளையாடவில்லை. கடந்த ஒக்டோபர் மாதம் இறுதியில் ஜிம்பாப்வேயுடன் இடம்பெற்ற போட்டித் தொடரிலும் அணியில் உள்வாங்கப்படாத அவர், டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான போட்டித் தொடரில் மீண்டும் இலங்கை அணியில் இடம்பெற்றார்.
இந்நிலையில், இம்மாத முற்பகுதியில் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டு முதல் முறையாக அணியை தலைமை ஏற்று விளையாடிய சந்திமால், இந்திய தொடருக்கு முன்னால் நியூமோனியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு சுமார் இரு வாரங்கள் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். எனவே இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அசேலவின் விரல் முறிவு
அண்மைக் காலமாக இலங்கை அணிக்காக சிறந்த முறையில் பிரகாசித்து வரும் சகலதுறை வீரரான அசேல குணரத்ன இலங்கை அணி கண்டெடுத்துள்ள மிகவும் பெறுமதி மிக்க வீரராக உள்ளார்.
காலியில் ஆரம்பமான இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அசேல குணரத்னவின் இடது கை கட்டை விரலில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அசேலவுக்கு அதே தின இரவு சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அசேல நான்கு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்தார். இதன்படி அண்மைக்காலமாக இலங்கை அணிக்காக சகலதுறைகளிலும் பிரகாசித்து வருகின்ற முக்கிய வீரர்களில் ஒருவரான அசேலவுக்கு இந்திய தொடர் முழுவதும் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் அறிவித்தது.
அவரச சத்திரசிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ள அசேல குணரத்ன
காலியில் ஆரம்பமான இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின்..
முன்னதாக ஜிம்பாப்வே அணியுடனாக டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் காலை இடம்பெற்ற பயிற்சியின் போதே அசேல குணரத்னவின் பாதத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்கேன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட அசேலவுக்கு, 10 நாட்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு இக்கட்டான நிலைமையை தொடர்ந்து எதிர்நோக்கி வரும் இலங்கை கிரிக்கெட், வீரர்களின் உபாதை குறித்து அதிகம் சிந்தித்து, இதற்கு ஒரு உரிய தீர்வைக் காண வேண்டும்.
அணி ஏற்கனவே வீழ்ச்சியை நோக்கி செல்லும் நிலையில் வீரர்களும் தொடர்ந்து உபாதைகளுக்கு உள்ளாகின்றமை ஏனையவர்களுக்கும் உள ரீதியில் ஒரு சோர்வை ஏற்படுத்தும் என்பதை கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் அனைவரும் உணர வேண்டும்.